கத்திரிக்காய் கிரேவி முழு கத்தரிக்காய்களை எண்ணெயில் பொரித்து, மசாலா வறுத்து, அரைத்து, அதன் பின்னர் செய்யப்படும். இது பிரியாணி, பிரிஞ்சி சாதம், தக்காளி சாதம், சிக்கன் பிரியாணி, மற்றும் சப்பாத்தி, பூரி, சாதம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். கத்திரிக்காய் கிரேவியில் காரம் மற்றும் எண்ணெய் சற்று கூடுதலாக இருக்கும் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காரத்தை சரி செய்து கொள்ளலாம். அதே போல நீங்கள் முழு கத்திரிக்காய்களில் எண்ணெயில் பொரிக்க விரும்பவில்லை என்றால் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கி அதன் பின்னர் சேர்த்துக் கொள்ளவும்.
சுவையான கத்தரிக்காய் கிரேவி செய்ய சில குறிப்புகள்
- பிஞ்சு கத்தரிக்காய் பயன்படுத்தவும் அப்போதுதான் கிரேவி சுவையாக இருக்கும்.
- மிளகாய் தூள், பச்சை மிளகாய் மற்றும் மசாலாவில் காய்ந்த மிளகாயை வறுத்து சேர்க்கப்படும் எனவே இதன் காரம் கூடுதலாக இருக்கும்.
- விருப்பத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் மற்றும் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
- முழு கத்திரிக்காய் நடுவில் வெட்டி விட்டு அதன் பின்னர் சேர்க்கும் பொழுது உள்ளே நன்றாக வேகும்.
- சிறுசிறு கத்தரிக்காய்களை பயன்படுத்தவும் அப்பொழுது கத்தரிக்காய் விரைவில் வேகும் பெரிய கத்தரிக்காய்களை பயன்படுத்தினால் சற்று கூடுதலான நேரம் எடுக்கும்.
- கெட்டியான தயிர் பயன்படுத்திக்கொள்ளவும், அதேபோல ஓரளவுக்கு புளிப்பு சுவையுள்ள தயிர் பயன்படுத்தவும்.
- காஷ்மீரி சிவப்பு மிளகாய் கிரேவிக்கு நல்ல நிறம் கொடுப்பதற்காக சேர்க்கப்பட்டுள்ளது, விருப்பபட்டால் சேர்க்கலாம் அல்லது காஷ்மீர் சிவப்பு மிளகாய் சேர்க்காமல் கிரேவி செய்யலாம்.
இதர வகைகள் – எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு , கத்திரிக்காய் சட்னி, கத்திரிக்காய் கிரேவி, ஆந்திரா கத்திரிக்காய் மசாலா, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, கத்திரிக்காய் சாதம்
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
- வேர்கடலை – 4 தேக்கரண்டி
- வெள்ளை எள் – 4 தேக்கரண்டி
- கொத்தமல்லி – 3 தேக்கரண்டி
- பட்டை – 1 துண்டு
- லவங்கம் – 4
- ஏலக்காய் – 3
- காய்ந்த மிளகாய் – 5
- காஷ்மீரி சிவப்பு மிளகாய் – 2
கத்திரிக்காய் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்
- கத்தரிக்காய் – 10
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- கருவேப்பிலை – சிறிதளவு
- பச்சை மிளகாய் – 3 நீளவாக்கில் வெட்டியது
- பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
- இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- கெட்டியான தயிர் – 1/4 கப்
- நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
1. மசாலா அரைப்பதற்கு ஒரு கடாயில் 4 தேக்கரண்டி வேர்க்கடலை சேர்த்துக் கொள்ளவும்.
2. மிதமான சூட்டில் நன்கு வறுத்துக் கொள்ளவும், பின்னர் அதை தனியே எடுத்து வைக்கவும்.
3. அதே பாத்திரத்தில் 4 தேக்கரண்டி வெள்ளை எள் சேர்த்துக் கொள்ளவும்.
4. இரண்டு – மூன்று நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.
5. அதே கடாயில் 3 தேக்கரண்டி கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்.
6. அதனுடன் ஒரு துண்டு பட்டை 4 லவங்கம் மற்றும் 3 ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்.
7. அதனுடன் 5 காய்ந்த மிளகாய் அல்லது காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
8. அதனுடன் இரண்டு காஷ்மீரி சிவப்பு மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
9. நன்றாக வறுத்துக் கொள்ளவும் பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.
10. வறுத்தவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
11. சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
12. ஒரு கடாயில் கத்திரிக்காய் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
13. எண்ணெய் சூடானதும் பத்து முதல் பன்னிரண்டு சிறிய அளவு கத்தரிக்காய்களை நடுவில் கீறி சேர்த்துக் கொள்ளவும்.
14. மிதமான சூட்டில் வைத்து கத்தரிக்காயை நன்கு வேகும்வரை பொரித்துக் கொள்ளவும்.
15. கத்திரிக்காய் வெந்த பிறகு தனியே எடுத்து வைக்கவும்.
16. அதே எண்ணெயில் அரை தேக்கரண்டி சீரகம் மற்றும் அரை தேக்கரண்டி கடுகு சிறிதளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
17. கடுகு கருவேப்பிலை பொரிந்த பின்னர் 3 பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி சேர்த்துக் கொள்ளவும்.
18. அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
19. வெங்காயம் வதங்கிய பின்னர் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்.
20. அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
21. பின்னர் கிரேவிக்கு தேவையான உப்பு, ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
22. சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
23. அதனுடன் கால் கப் கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளவும்.
24. நன்கு கலந்த பின்னர் பொரித்து வைத்துள்ள கத்தரிக்காய்களை சேர்த்துக் கொள்ளவும்.
25. மூடி வைத்து இரண்டு நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
26. கிரேவியில் எண்ணெய் பிரிந்து வருவதை காணலாம்.
27. சிறிதளவு கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
28. சுவையான கத்தரிக்காய் கிரேவி தயார்.