செட்டிநாடு சிக்கன் குழம்பு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா மற்றும் உலகம் முழுவதும் புகழ் பெற்ற உணவு வகை. செட்டிநாடு சமையல் வகைகள் மிகவும் பிரபலம் அடைந்ததற்கு காரணமே அதன் அபாரமான சுவையும் ஆரோக்கியம் மிக்க உணவுகளுமே. செட்டிநாடு சிக்கன் குழம்பு செய்வதற்கு பிராய்லர் மற்றும் நாட்டுக்கோழி இரண்டையும் பயன்படுத்தலாம். முதலில் மசாலா அரைத்து பின்னர் குழம்பு செய்து மசாலாவுடன் அதனை கலந்து வேகவைக்க வேண்டும். சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
செட்டிநாடு சிக்கன் குழம்பு செய்ய சில குறிப்புகள்
- சிக்கன் குழம்பு செய்வதற்கு நாட்டுக்கோழி மற்றும் பிராய்லர் கோழி இரண்டையும் பயன்படுத்தலாம்.
- குழம்பு செய்வதற்கு சின்ன வெங்காயம் பயன்படுத்தவும் பெரிய வெங்காயம் அசல் சுவையை தராது.
- மசாலா அரைக்கும் பொழுது பொருட்களை நன்கு வறுத்து வாசனை வறுத்த பின்னர் ஆற வைத்து அரைக்கவும்.
- மசாலா பொருட்களையும் தேங்காயும் தனித்தனியே அரைத்துக் கொள்ளவும்.
- பிரஷர் குக்கரில் வேக வைக்கலாம் அல்லது மூடிவைத்து அப்படியே வேக வைக்கலாம்.
- மசாலாவில் மிளகாய் சேர்க்கும் பொழுது உங்கள் காரத்திற்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
- மண்பானையில் குழம்பு செய்யும் பொழுது சுவை கூடுதலாக இருக்கும்.
இதர வகைகள் – சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி, தலப்பாகட்டி பிரியாணி, இறால் தொக்கு, சிக்கன் வருவல், முட்டை மசாலா, முட்டை தம் பிரியாணி, சிக்கன் 65, முட்டை ஃப்ரைட் ரைஸ், சில்லி சிக்கன், முட்டை குழம்பு, முட்டை கொத்து பரோட்டா.
சிக்கன் ஊற வைக்க தேவையான பொருட்கள்
- சிக்கன் – 500 கிராம்
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- தயிர் – 1/4 கப்
செட்டிநாடு மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
- வரக்கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
- சீரகம் – 1தேக்கரண்டி
- சோம்பு – 1 தேக்கரண்டி
- மிளகு – 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 7 / காரத்திற்கு ஏற்ப
- ஜாதிபத்திரி – 1
- பட்டை – 1 சிறிய துண்டு
- லவங்கம் – 4
- ஏலக்காய் – 2
- நட்சத்திர சோம்பு – 1
- பிரிஞ்சி இலை – 1
- துருவிய தேங்காய் – 1/2 கப்
குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
- சமையல் எண்ணெய் – 3 தேக்கரண்டி
- சோம்பு – 1/2 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 2
- கருவேப்பிலை – 1 கொத்து
- சின்ன வெங்காயம் – 200 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- தக்காளி – 1
- கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
செய்முறை
1. 500 கிராம் எலும்பு உள்ள சிக்கனை கழுவி சுத்தம் செய்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் கால் கப் அளவு தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
2. இதனை ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
3. செட்டிநாடு மசாலா செய்வதற்கு ஒரு பேனில் இரண்டு தேக்கரண்டி வரக்கொத்தமல்லி, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி சோம்பு, ஒரு தேக்கரண்டி மிளகு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
4. அதனுடன் 7 காய்ந்த மிளகாய், ஒரு துண்டு பட்டை, 4 இலவங்கம், இரண்டு ஏலக்காய், ஒரு நட்சத்திர சோம்பு, ஒரு ஜாதிபத்திரி மற்றுமொரு பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு அல்லது வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
5. பின்னர் அரை கப் துருவிய தேங்காயை சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும் அல்லது தேங்காய் நிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
6. மசாலா பொருட்கள் மற்றும் தேங்காயை நன்கு ஆற வைத்து தனித்தனியே மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
7. மசாலா பொருட்களை தண்ணீர் சேர்க்காமல், தேங்காய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
8. செட்டிநாடு சிக்கன் குழம்பு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
9. எண்ணெய் சூடானதும் அரை தேக்கரண்டி சோம்பு, 2 காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஒரு கொத்து, ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
10. அதனுடன் 200 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
11. வெங்காயம் வதங்கிய பின்னர் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, ஆகியவற்றை சேர்த்து இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
12. அதனுடன் ஒரு பெரிய தக்காளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு மசியும் வரை வதக்கி கொள்ளவும்.
13. பின்னர் தயார் செய்து வைத்துள்ள செட்டிநாடு மசாலாவை சேர்த்து கலக்கவும்.
14. இப்பொழுது ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறவும்.
15. மூடி வைத்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
16. சிக்கன் ஓரளவு வெந்த பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறவும்.
17. மீண்டும் மூடி வைத்து சிக்கன் வேகும் வரை வைக்கவும்.
18. சிக்கன் நன்கு வெந்த பின்னர் தயார் செய்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து கலக்கவும்.
19. இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
20. சிறிதளவு கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
21. சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு தயார்.