Street Style Chilli Chicken in Tamil | ரோட்டு கடை சில்லி சிக்கன் | Chilli Chicken | How to make chilli Chicken

See this Recipe in English

சில்லி சிக்கன் ஒரு சுவையான புளிப்பும், இனிப்பும் கலந்த சைனாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை. சில்லி சிக்கன் உருவானது சீனாவில். எலும்பில்லாத சிக்கன், காய்ந்த மிளகாய், சோயா சாஸ், வெங்காயத்தாள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் செய்யும் பொழுது  முட்டை, மற்றும் இதர இந்திய மசாலா பொருட்களுடன் ஊற வைத்து எண்ணெயில் பொரித்து சோயா சாஸ், சில்லி சாஸ், குடைமிளகாய், வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், ஆகியவற்றை கொண்டு பிரட்டி எடுக்க வேண்டும். இதுவே இந்தோ சைனீஸ் சில்லி சிக்கன்.

ஆனால் நாம் தெருவோரக் கடைகளில் சாப்பிடும் சில்லி சிக்கன் இந்தோ சைனீஸ் சில்லி சிக்கன் போன்று புளிப்பும், இனிப்பும்  கலந்தது காரமாகவும் சுவையாகவும் இருக்கும்.  தெருவோர கடைகளில் முட்டை மற்றும் இதர  இந்திய மசாலா வகைகளுடன் சிக்கன் ஊறவைத்து,  பொரித்தெடுக்க வேண்டும், மீண்டும் வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, மற்றும்  மசாலாக்கள் சேர்த்து,  அதனுடன் பொரித்த சிக்கன் சேர்த்து வேக வைக்க வேண்டும். கடைசியாக சிறிதளவு சில்லி சாஸ் சேர்த்துக் கொள்ளலாம்.  சைனீஸ் சில்லி சிக்கன் விட சுவையாகவும் காரமாகவும் இருக்கும்.

சுவையான ரோட்டுக்கடை சில்லி சிக்கன் செய்ய சில குறிப்புகள்

  • சில்லி சிக்கன் செய்ய எலும்பில்லாத சிக்கன் எடுத்துக் கொள்ளவும்.
  • அதனை சிறு சிறு துண்டுகளாக இல்லாமல் ஓரளவுக்கு பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கலாம். உங்களுக்கு நேரம் இருக்கும் பட்சத்தில் 2 மணி நேரம் வரை ஊற வைக்கலாம்
  • நீங்கள் விருப்பப்பட்டால் 1/2  எலுமிச்சை பழத்தை  பச்சை மிளகாய், கருவேப்பிலை, சேர்க்கும் பொழுது பிழிந்து கொள்ளலாம்.
  • நீங்கள் சில்லி சாஸ் சேர்க்க விரும்பவில்லை என்றால், பொரித்த சிக்கன் சேர்ப்பதற்கு முன்பு 1/4 கப் கெட்டித் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • நீங்கள் சிக்கனுக்கு பதிலாக காலிபிளவர், ப்ராக்கோலி அல்லது உருளைக்கிழங்கை சேர்த்து இதே போல செய்யலாம்.

இதர வகைகள் – சிக்கன் பிரியாணி,   சிக்கன் கிரேவி,  தலப்பாகட்டி பிரியாணிஇறால் தொக்கு, சிக்கன் வருவல்முட்டை மசாலா, முட்டை தம் பிரியாணி, சிக்கன் 65முட்டை ஃப்ரைட் ரைஸ், சில்லி சிக்கன், முட்டை குழம்பு,  முட்டை கொத்து பரோட்டா.

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

ஊறவைக்க தேவையான பொருட்கள்

  • 500 கிராம் எலும்பில்லாத சிக்கன்
  • 2 முட்டை
  • 2 தேக்கரண்டி மைதா
  • 2 தேக்கரண்டி சோள மாவு
  • 1 தேக்கரண்டி அரிசி மாவு
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
  • 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • தேவையான அளவு உப்பு

சில்லி சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்

  • பொரிக்க தேவையான எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 3 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை சிறிதளவு
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி மல்லித்தூள்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  • தேவையான அளவு உப்பு
  • 3 தேக்கரண்டி சில்லி சாஸ் அல்லது தக்காளி சாஸ்

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் 500 கிராம் எலும்பில்லாத சிக்கன் சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன் 2 முட்டை, 2 தேக்கரண்டி மைதா,  2 தேக்கரண்டி சோள மாவு, ஒரு தேக்கரண்டி அரிசி மாவு, சேர்க்கவும்.

2. அதனுடன் 2 தேக்கரண்டி மிளகாய் தூள்,  1/2 தேக்கரண்டி மல்லித் தூள், 1/2 தேக்கரண்டி சீரகத்தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஆகியவற்றை சேர்க்கவும்.

3. பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

4. அனைத்தையும் நன்கு கலந்து 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

5. சிக்கன் நன்கு ஊறிய பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக சேர்த்து பொரிக்கவும்.

6. 2-3 நிமிடங்களுக்கு பிறகு திருப்பிப் போடவும்.

7. பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து தனியே எடுத்து வைக்கவும்.

8. இன்னொரு கடாயில் 2 தேக்கரண்டி சிக்கன் பொரித்த எண்ணெய் சேர்க்கவும்.

9. எண்ணெய் சூடானதும் ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

10. வெங்காயம் ஓரளவுக்கு வதங்கிய பின்பு 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலக்கவும்.  இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வேக வைக்கவும்.

11. பின்னர் 3 பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

12.பின்னர் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மல்லித்தூள், 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

13. பச்சை வாசனை போகும் வரை வேக வைக்கவும்.

14. பின்னர் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.

15. 3 தேக்கரண்டி சில்லி சாஸ் சேர்த்து கலக்கவும்,  இப்போது அடுப்பை அணைத்து விடவும்.

16. கடைசியாக சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும். சுவையான சில்லி சிக்கன் தயார்.

Leave a Reply