சிக்கன் பிரியாணி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அரபு நாடுகளில் மிகவும் பிரபலமான உணவு வகை. தற்போது நாம் செய்யும் பிரியாணி முகலாயர்களிடம் இருந்து பெறப்பட்டது. பிரியாணி என்பது அரிசி, வாசனைப் பொருட்கள், மற்றும் மாமிசம் ஆகியவை கலந்து செய்யப்படுகிறது. பிரியாணி சுவை, மணம், மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது.
பிரியாணியில் பல வகைகள் உள்ளது. நாம் பலவிதமான மாமிசங்களை பயன்படுத்தி பிரியாணி செய்யலாம். சிக்கன் பிரியாணி/ கோழி பிரியாணி பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது. சுவையான சிக்கன் பிரியாணி சுலபமான முறையில் பிரஷர் குக்கரில் எப்படி செய்வது என்பதை இப்பொழுது காணலாம்.
சுவையான பிரியாணி செய்ய சில குறிப்புகள்
- இதே முறையில் பிரஷர் குக்கர் இல்லாமலும் பிரியாணி செய்யலாம். அடி கனமான பாத்திரத்தில் செய்யவும். மூன்று விசில் வைப்பதற்கு பதிலாக பாத்திரத்தை மூடி வைத்து மிதமான சூட்டில் 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- உங்கள் தேவைக்கு தகுந்தவாறு உப்பு, காரம் ஆகியவற்றை கொள்ளலாம்.
- தண்ணீர் சேர்க்கும் பொழுது கவனமாக இருக்கவும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தண்ணீர் சேர்த்தால் அடிப்பதற்கும் அல்லது குறைந்து போவதற்கும் வாய்ப்புள்ளது.
சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்
ஊற வைக்க தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ சிக்கன் (500 grams)
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1 தேக்கரண்டி மல்லித்தூள்
- 1.5 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
- 3 தேக்கரண்டி எண்ணெய்
- 1/2 கப் தயிர்
பிரியாணிக்கு தேவையான பொருட்கள்
- 1 கப் பாஸ்மதி அரிசி (200 grams)
- 3 தேக்கரண்டி நெய்
- 2 தேக்கரண்டி எண்ணெய்
- 1 துண்டு பட்டை
- 1 பிரிஞ்சி இலை
- 4 ஏலக்காய்
- 4 லவங்கம்
- 1 அன்னாசிப்பூ
- 1 பெரிய வெங்காயம்
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
- பொடியாக நறுக்கிய புதினா சிறிதளவு
- 4 பச்சை மிளகாய்
- 1 தக்காளி
செய்முறை
- சிக்கனை கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதில்1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மல்லித்தூள், 1.5 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 3 தேக்கரண்டி எண்ணெய், 1/2 கப் தயிர், ஆகியவற்றைச் சேர்த்து கலந்து 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் 1 கப் பாஸ்மதி அரிசி சேர்த்து 15 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு பிரஷர் குக்கரில் 2 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.
4. சூடானதும் 1 பிரிஞ்சி இலை 1, அன்னாசிப்பூ, 1 துண்டு பட்டை, 4 ஏலக்காய், 4 லவங்கம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
5. அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
6. இப்பொழுது 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 4 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, மற்றும் பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
7. அதனுடன் 1 தக்காளி சேர்த்துக் கொள்ளவும், தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
8. இப்போது ஊற வைத்த சிக்கனை சேர்த்து 10 நிமிடங்களுக்கு மூடி வைத்து வேக வைக்கவும்.
9. சிக்கன் ஓரளவு வெந்த பின்னர், ஊறவைத்து தண்ணீர் வடித்த பாஸ்மதி அரிசி சேர்த்துக் கொள்ளவும்.
10. ஒரு கப் அரிசிக்கு 1.5 கப் வீதம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
11. இறுதியாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து பிரஷர் குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்.
12. பிரஷர் ரிலீஸ் ஆனதும் பிரியாணி மென்மையாக கிளறிவிடவும் சுவையான சிக்கன் பிரியாணி தயார்.