Mango Pickle in Tamil | மாங்காய் ஊறுகாய் | Instant Mango Pickle | how to make mango pickle

See this Recipe in English

மாங்காய் ஊறுகாய்  பலவிதமாக செய்யப்படுகிறது. வடுமாங்காய் ஊறுகாய்,  அரிந்த மாங்காய் ஊறுகாய், சீவிய மாங்காய் ஊறுகாய்,  விதவிதமான மாங்காய்களை பயன்படுத்தி வெவ்வேறு விதமான மாங்காய் ஊறுகாய் களை மாங்காய் சீசனில் செய்யலாம். கல்யாண வீடுகளில் செய்யப்படும் மாங்காய் ஊறுகாய் உடனடியாக செய்யப்படுவது. இதனை வெயிலில் காய வைப்பது அல்லது ஊற வைப்பது போன்றவற்றை செய்வதில்லை.  செய்த உடனேயே அடுத்த அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் பந்தியில் பரிமாறப்படும்.  கல்யாண பந்தியில் பரிமாறப்படும் அதே சுவையில் மாங்காய் ஊறுகாயை வீட்டிலேயே செய்யலாம். இந்த ஊறுகாய் தயிர் சாதம் தவிர சாம்பார் சாதம், ரசம் சாதம், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.

 சுவையான மாங்காய் ஊறுகாய் செய்ய சில குறிப்புகள்

  • ஊறுகாய் செய்வதற்கு எந்த விதமான மாங்காயையும் பயன்படுத்தலாம் ஆனால் மாங்காய் நல்ல புளிப்பு தன்மையுடன் இருக்க வேண்டும்.
  • மாங்காய்களை நறுக்கும்போது பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் அப்பொழுதுதான் அது விரைவாக  உப்பு மற்றும் காரத்தில் ஊறிய பின்னர் சுவையாக இருக்கும்.
  • மிளகாயை நல்ல வெயில் நேரத்தில் 3 முதல் 4 மணி நேரம் காயவைத்து அதன் பின்னர் அரைத்தால் அரைப்பதற்கு சுலபமாகவும் அதேசமயத்தில் விரைவில் பொடியாகவும் ஆகும்.
  • வரமிளகாயை காயவைத்து அரைத்து பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால்  3 தேக்கரண்டி தனி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  • கல்லுப்பு அல்லது தூள் உப்பு இவற்றில் எது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • உப்பு மற்றும் காரம் உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம் அதே சமயத்தில் அவை சற்று கூடுதலாக இருந்தால் தான் ஊறுகாய் கெட்டுப்போகாமல் அதிக நாட்கள் நன்றாக இருக்கும்.
  • ஊறுகாய் செய்வதற்கு நல்லெண்ணெய்  பயன்படுத்தவும்.
  • ஊறுகாய் தயார் ஆனதும், ஆற வைக்கவும்,  பின்னர் அதனை ஈரப்பதம் இல்லாத சுத்தமான காற்றுப்புகாத டப்பாவில் வைத்து மூடி வைக்கவும்.
  • ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் ஈரமில்லாத ஸ்பூன் அல்லது கரண்டி பயன்படுத்தவும் அல்லது ஊறுகாய் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளது.
  • பொடித்த வெல்லம் சேர்ப்பதற்கு பதிலாக அதே அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
  • உடனடி ஊறுகாய் பிரிட்ஜில் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம்.

இதர வகைகள்

கோடை காலத்திற்கு 5 விதமான பானங்கள்

பால் சர்பத்

நன்னாரி சர்பத்

பலுடா

மதுரை ஸ்பேஷல் ஜிகர்தண்டா

குல்பி

 

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

  • மாங்காய் – 2 (600g)
  • வர மிளகாய் – 30g
  • கல்லுப்பு – 2 தேக்கரண்டி
  • கடுகு – 2  தேக்கரண்டி
  • வெந்தயம் – 1.5  தேக்கரண்டி
  •  சிவப்பு மிளகாய் தூள் – 1  தேக்கரண்டி
  • பொடித்த வெல்லம்/நாட்டு சக்கரை – 1  மேஜைக்கரண்டி

தாளிக்க தேவையான பொருட்கள்

  • நல்லெண்ணெய் – ½  கப் – 120ml
  • கடுகு – 1  மேஜை கரண்டி
  • கருவேப்பிலை –  சிறிதளவு

செய்முறை

1. மாங்காயை தண்ணீரில் கழுவி  சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் ஒரு துணியால் சுத்தமாக துடைக்கவும்.

2. பின்னர் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

3. 30 கிராம் மிளகாய் வெயில் நேரத்தில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

4. ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி கடுகு சேர்த்துக் கொள்ளவும்.

5. அதனுடன் 1.5 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும்.

6. கடுகு பொரிந்து வெந்தயம் லேசான பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை தனியே எடுத்து வைத்து ஆறவிடவும்.

7. ஒரு மிக்ஸி ஜாரில் காய வைத்துள்ள வர மிளகாயை சேர்த்துக் கொள்ளவும்.

8. அதனுடன் இரண்டு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

9. பின்னர் வறுத்து வைத்துள்ள கடுகு மற்றும் வெந்தயம் சேர்க்கவும்.

10. அதனை நைசாக பொடித்துக் கொள்ளவும்.

11.  ஒரு வாணலியில் 1/2 கப் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்..

12. எண்ணெய் சூடானதும் ஒரு மேசைக்கரண்டி கடுகு சேர்த்து கொள்ளவும்.

13. கடுகு பொரிந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.

14. பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

15. அதில் ஒரு தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

16. அதனுடன் மிளகாய்,  உப்பு,  கடுகு,  வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து அரைத்த பொடியை சேர்க்கவும்.

17. நன்றாக கிளறிய பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள மாங்காயை சேர்த்துக் கொள்ளவும்.

 18. நன்றாக கிளறவும். பின்னர் ஒரு மேஜைக்கரண்டி பொடித்த வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

19. சுவையான உடனடி மாங்காய் ஊறுகாய் தயார்,  அதனை உடனடியாக பரிமாறலாம் அல்லது 4-5 மணி நேரம் கழித்து உப்பு காரம் நன்றாக ஊறிய பின்னர் பரிமாறலாம்.

Leave a Reply