Eggless Chocolate Cake in Tamil | முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக் | Sooji Chocolate Cake

முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது, மேலும் குழந்தைகளின் பிறந்த நாளன்று கடைகளில் கேக் வாங்குவதற்கு பதிலாக நாமே செய்யும் பொழுது  அது கூடுதல் சுவையும், சந்தோஷத்தையும் தரும்.  சுவையான சாக்லேட் மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம் அதுவும் மைதாவில் செய்யாமல், முட்டை சேர்க்காமல், மிகவும் ஆரோக்கியமான முறையில் செய்யலாம்.

சுவையான ரவா கேக் செய்ய சில குறிப்புகள்

  1. ரவா கேக் செய்வதற்கு  வறுத்த ரவை பயன்படுத்தவேண்டாம் வறுக்காத ரவை பயன்படுத்தவும்.
  2. சிறிதளவு மைதா மாவு சேர்த்துள்ளேன் மைதா மாவு சேர்ப்பதற்கு பதிலாக நீங்கள் கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
  3. சமையல் எண்ணெய் சேர்ப்பதற்கு பதிலாக நீங்கள் அதே அளவு வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
  4. தயிர் சேர்க்கும் பொழுது அதிகம் புளிப்பில்லாத கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளவும்.
  5. இதனை நீங்கள் பாத்திரத்திலும் வேக வைக்கலாம் அல்லது ஓவனில் வேக வைக்கலாம்.
  6. ஒரு கப் ரவை  உடன் அரை கப் சர்க்கரை சேர்த்து உள்ளேன். கொக்கோ பவுடர் சேர்க்கும் பொழுது அது சிறிதளவு கசப்பு சுவை தரும் எனவே நீங்கள் கூடுதல் இனிப்பு சுவை விருப்பப்பட்டால் அதற்கேற்றார்போல் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

இதர கேக் வகைகள் –  முட்டை சேர்க்காத டூட்டி ஃப்ரூட்டி கேக்முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக் , முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக், ஹனி  கேக், ரவா கேக், முட்டை சேர்க்காத சாக்லேட் கேக், ஓரியோ கேக், ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி?, ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக்

 

சாக்லேட் ரவா கேக் செய்ய தேவையான பொருட்கள்

  • கெட்டியான தயிர் –  1/4 கப்
  • சர்க்கரை –  1/2 கப்
  • சமையல் எண்ணெய் –  1/4 கப் 
  • ரவை –  1 கப்
  • கொக்கோ பவுடர் –  1/4  கப் 
  • பால் –  1/2 கப்
  • மைதா –   3 மேஜைக்கரண்டி 
  • பேக்கிங் பவுடர் –  1 தேக்கரண்டி
  • பேக்கிங் சோடா –  1/4 தேக்கரண்டி 

மேலே அலங்கரிப்பதற்கு

  • சாக்லேட்  ஸ்பிரட்  –  தேவையான அளவு
  • ஸ்ப்ரிங்கில்ஸ் –  தேவையான அளவு 

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் கால் கப் கெட்டியான தயிர்,  அரை கப்  சர்க்கரை,  கால் கப்   சமையல் எண்ணெய்  ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

2. சர்க்கரை நன்கு கரையும் வரை கலக்கிக் கொள்ளவும்.

3. அதனுடன் ஒரு கப் வறுத்த ரவை மற்றும் கால் கப் கொக்கோ பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.


4. கால் கப் அளவு காய்ச்சி ஆற வைத்த பால் மற்றும் 3 மேஜைக்கரண்டி மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்.

5. அனைத்தையும் நன்கு கலந்து 30 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.

6. 30 நிமிடங்களுக்குப் பிறகு கேக் மாவு கெட்டியாக இருப்பதை பார்க்கலாம்.

7. ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு சூடாக்கவும்.

8. இப்பொழுது ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் மற்றும் கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும்.

9. அதனுடன் கால் கப் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

10. ஒரு    கேக்  பாத்திரம் அல்லது டப்பாவில்  சிறிதளவு வெண்ணெய் தடவி அதன் மீது பட்டர் பேப்பர் போட்டுக் கொள்ளவும் அல்லது மைதா மாவு தூவி கொள்ளவும்.

 11. இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள சாக்லெட்  ரவா கேக் மாவை அதில் ஊற்றவும்.

12. கேக் மாவு அதனுள் வைத்து குறைவான தீயில் 50 முதல் 60 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

 13. வெந்த பின்னர் ஒரு குச்சி வைத்து  குத்தி பார்க்கவும், மாவு ஒட்டாமல் வந்தால் கேக் தயார்.

 14. அதன் மீது சாக்லெட்டை தடவிக் கொள்ளவும். நீங்கள் விருப்பபட்டால் மேலே  ஸ்ப்ரிங்கில்ஸ் தூவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.

15. சுவையான முட்டை சேர்க்காத சாக்லேட் கேக் தயார்.

 

Leave a Reply