See this Recipe in English
முட்டை சேர்க்காத டூட்டி ஃப்ரூட்டி கேக் குழந்தைகள் விரும்பி உண்ணும் இந்த கேக் தயிர், சர்க்கரை, மைதா, டூட்டி ஃப்ரூட்டி, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். இந்த கேக் ஓவன் பயன்படுத்தியும் செய்யலாம் அல்லது ஓவன் பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கும் பாத்திரத்தை கொண்டு செய்யலாம். மாலை நேர சிற்றுண்டியாக கொடுக்கலாம், அல்லது மதிய உணவுடன் பள்ளிக்கு கொடுத்து அனுப்பலாம். சுவையான முட்டை சேர்க்காத கேக்கை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான டூட்டி ஃப்ரூட்டி கேக் செய்ய சில குறிப்புகள்
- மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு சேர்த்தும் இதே முறையில் கேக் செய்யலாம்.
- டூட்டி ஃப்ரூட்டி சேர்க்காமல் plain கேக் ஆகவும் இதனை செய்து கொள்ளலாம்.
- நீங்கள் முட்டை சாப்பிடுபவராக இருந்தால் தயிர் சேர்ப்பதற்கு பதிலாக 2 முட்டை சேர்த்துக் கொள்ளவும், பேக்கிங் சோடா தவிர்த்து மற்றவற்றை இதே முறையில் சேர்த்து செய்யலாம்.
- நீங்கள் ஓவனில் வைப்பதாக இருந்தால் 180 degree C / 360 degree F -ல் 10 நிமிடங்களுக்கு பிரீ ஹிட் செய்து கொள்ளவும், பின்னர் 40 – 45 நிமிடங்கள் வைத்து வேக வைக்கவும்.
இதர கேக் வகைகள் – முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக், ஹனி கேக், ரவா கேக், முட்டை சேர்க்காத சாக்லேட் கேக், ஓரியோ கேக், ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி? ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக், பாவ் பன், பால் பன், முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக் முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக்
See this Recipe in English
தேவையான பொருட்கள்
- மைதா மாவு – 1.5 கப் – 210g
- கெட்டியான தயிர் – 1 கப் – 250g
- சர்க்கரை – 1 கப் – 200g
- பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
- பேக்கிங் சோடா – ½ தேக்கரண்டி
- டூட்டி ஃப்ரூட்டி – ½ கப் – 120g
- வெண்ணிலா எசன்ஸ் – 1 மேஜைக்கரண்டி
- சமையல் எண்ணெய் – ½ கப் – 125ml
- உப்பு – 1 சிட்டிகை
- மைதா மாவு – 1 மேஜைக்கரண்டி
செய்முறை
1. ஒரு பவுலில் 1 கப் கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளவும், அதனுடன் 1 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனுடன் 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர், ½ தேக்கரண்டி பேக்கிங் சோடா, ஆகியவற்றை சேர்த்து ஒரு விஸ்க் வைத்து கலந்து கொள்ளவும்.
3. சர்க்கரை கரையும் வரை கலந்து பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.
4. ஒரு சிறிய பௌலில் ½ கப் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கொள்ளவும்.
5. அதனுடன் 1 மேஜை கரண்டி மைதா மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
6. பின்னர் கலந்து வைத்துள்ள சர்க்கரைக் கலவையில் 1 மேஜை கரண்டி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும், அதனுடன் ½ கப் சமையல் எண்ணெய், 1 சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
7. பின்னர் 1.5 கப் மைதா மாவை சலித்து சேர்த்துக் கொள்ளவும்.
8. ஒரு விஸ்க் வைத்து கலந்து கொள்ளவும். கட்டிகள் எதுவும் இல்லாமல் மாவை எடுத்து ஊற்றும் பொழுது ரிப்பன் போல இருக்க வேண்டும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
9. அதனுடன் தயாரித்து வைத்துள்ள டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து கலந்து கொள்ளவும்.
10. ஒரு கேக் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் தடவி அதன் மீது பட்டர் பேப்பர் போட்டு கொள்ளவும் அல்லது மைதா மாவைத் தூவிக் கொள்ளவும்.
11. தயார் செய்து வைத்துள்ள கேக் மாவை அதில் ஊற்றவும். பின்னர் ஒரு குச்சி வைத்து சமன் செய்து விடவும்.
12. விருப்பப்பட்டால் மேலே சிறிதளவு டூட்டி ஃப்ரூட்டி தூவிக் கொள்ளலாம்.
13. ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு ஸ்டாண்ட் வைத்து மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்களுக்கு பிரீ ஹிட் (pre heat) செய்து கொள்ளவும்.
14. பத்து நிமிடங்களுக்கு பின்னர் மாவை உள்ளே வைத்து பாத்திரத்தை மூடி வைத்து 50 முதல் 60 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். நீங்கள் ஓவனில் வைப்பதாக இருந்தால் 180 degree C / 360 degree F -ல் 10 நிமிடங்களுக்கு பிரீ ஹிட் செய்து கொள்ளவும், பின்னர் 40 – 45 நிமிடங்கள் வைத்து வேக வைக்கவும்.
15. பின்னர் ஒரு குச்சி வைத்து குத்தி பார்க்கவும், மாவு ஒட்டாமல் வந்தால் கேக் தயார் ஆகிவிட்டது.
16. கேக்கை நன்றாக ஆற விட்டு அதன் பின்னர் பரிமாறவும். சுவையான டூட்டி ஃப்ரூட்டி கேக் தயார்.