Ellu Poornam kozhukattai in Tamil | எள்ளு பூரண கொழுக்கட்டை | Poornam Kozhukattai

எள்ளு பூரண கொழுக்கட்டை விநாயகருக்கு மிகவும் பிடித்த  கொழுக்கட்டை.  இதனை விநாயகர் சதுர்த்தி அன்று  செய்வது விசேஷம்.  எள்ளு பூரணம் கருப்பு எள், வேர்க்கடலை, தேங்காய் போன்றவற்றை கொண்டு செய்யப்படுகிறது. தேங்காய் பூரணம் போன்று இதனை மிகவும் எளிமையாக செய்யலாம்.  பச்சரிசி ஒரு ஊற வைத்து,  ஓரளவு காய்ந்த பிறகு  மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளலாம்.  அதனை சலித்து ஆவியில் வேகவைத்து வைத்துக் கொண்டால் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.  வீட்டில் பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு செய்யலாம் அல்லது கடைகளில் கிடைக்கும் கொழுக்கட்டை மாவு பயன்படுத்தலாம்.

சுவையான கொழுக்கட்டை செய்ய சில குறிப்புகள்

  1. பச்சரிசியை ஊறவைத்து அரைத்து கொழுக்கட்டை மாவு செய்யலாம் அல்லது கடைகளில் கிடைக்கும் கொழுக்கட்டை மாவு பயன்படுத்தலாம்.
  2. கடைகளில் கிடைக்கும் சாதாரண அரிசி மாவை வாங்கி லேசாக வறுத்துப் பயன்படுத்தலாம்.
  3. எள்ளு பூரணம் கொழுக்கட்டை  செய்வதற்கு கருப்பு எள் பயன்படுத்தவும் வெள்ளை எள் பயன்படுத்த வேண்டாம்.
  4. ஏற்கனவே வறுத்த வேர்க்கடலை ஆக இருந்தாலும் மீண்டும் ஒருமுறை வறுத்துக்கொள்ளவும்.
  5. வேர்கடலை வறுக்கும் பொழுது அதனுடன் சிறிதளவு பாதாம், முந்திரி, பிஸ்தா, போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.
  6. எள்ளு பூரணம் மிக்ஸியில் அரைக்கும் பொழுது சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து அரைக்கலாம்.

இதர வகைகள் – தேங்காய் பூரண கொழுக்கட்டை, கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை, உளுந்து பூரண கொழுக்கட்டை, இனிப்பு பிடி கொழுக்கட்டை, பருப்பு பாயசம், கடலை பருப்பு பாயசம், அவல் பாயசம்

 

எள்ளு பூரணம் செய்முறை

1. ஒரு கடாய் அல்லது பேன்  சூடானதும், அரை கப் கறுப்பு எள் சேர்த்துக் கொள்ளவும்.

2. மிதமான சூட்டில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும்.  பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

3. அதே பேனில் ஒரு கப் வேர்க்கடலை சேர்த்துக் கொள்ளவும். 

4. மிதமான சூட்டில் மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும் பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

5. ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.

6. அதில் கால் கப் துருவிய தேங்காய் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

7. வறுத்து வைத்துள்ள எள், வேர்க்கடலை, மற்றும் தேங்காய் ஆகியவற்றை ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து கொள்ளவும்.

8. அதனுடன் கால் கப் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

 9. கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் இப்பொழுது எள்ளு பூரணம் தயார்.


கொழுக்கட்டை மேல் மாவு செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்.

2. தண்ணீர் சூடானதும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

3. அதனுடன் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

4. ஒரு கடாயில் ஒன்றரை கப் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்.

5. இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுத்து கொள்ளவும்.

6. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதனை வறுத்து வைத்துள்ள அரிசி மாவில் சேர்த்து கிளறவும்.

 7. இரண்டு நிமிடங்களில்  மாவு கெட்டி ஆவதை காணலாம்.

8. இப்பொழுது மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு வைக்கவும்.

9. ஓரளவுக்கு ஆறிய பின்னர் மென்மையாகும் வரை கையால் பிசைந்து கொள்ளவும்.

10. கொழுக்கட்டை மாவில் ஒரு சிறு உருண்டை எடுத்து உருட்டிக் கொள்ளவும் சொப்பு போல செய்து அதில்  உள்ளே பூரணம் வைத்து மூடலாம் அல்லது கொழுக்கட்டை செய்யும் அச்சில் எண்ணெய் தடவி ஒரு உருண்டை மாவை வைத்து அழுத்தவும்.

11. அதனுள் பூரணத்தை வைத்து அழுத்தி மேலே சிறிதளவு மாவு போட்டு மூடவும்.

12. இதே போல எல்லா மாவிலும் கொழுக்கட்டை செய்து வைத்துக் கொள்ளவும்.

13. ஒரு இட்லி பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து சூடானதும்,  அதன்மீது இட்லி அல்லது இடியாப்ப தட்டு வைக்கவும்.( தட்டில் நல்லெண்ணெய் தடவி கொள்ளவும்). தயார் செய்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை அதில் வைத்து எடுக்கவும்.

14. இப்பொழுது மூடிவைத்து ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

15. சுவையான எள்ளு பூரணம் கொழுக்கட்டை தயார்.

Leave a Reply