Chana dal Payasam in Tamil | கடலை பருப்பு பாயசம் | Paruppu payasam | Kadalai Paruppu payasam

See this Recipe in English

கடலைப்பருப்பு  பாயசம்  கடலை பருப்பு,  பச்சரிசி,  வெல்லம்,  தேங்காய் விழுது  ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான பாயாசம்.  பொதுவாக பருப்பு பாயசம் பாசிப்பருப்பு கொண்டு செய்யப்படும்,  அது தவிர பால் பாயசம்,  ஜவ்வரிசி பாயசம்,  சேமியா பாயசம்,  சிறுதானிய பாயசம் போன்றவையும் தமிழகத்தில் பிரபலமாக செய்யப்படுகிறது.  கேரட் பாயசம்,  கேரமல் பாயாசம் போன்றவற்றை வளரும் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். கடலை பருப்பு பாயசம், தமிழ் புத்தாண்டு மற்றும் இதர விசேஷ நாட்களில் செய்து இறைவனுக்கு படைத்து மகிழலாம். அதுதவிர வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் சுவையான கடலை பருப்பு பாயசம் செய்து பரிமாறலாம். 

 சுவையான கடலை பருப்பு பாயசம் செய்ய சில குறிப்புகள்

  • கடலை பருப்பை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும் 3 – 4  விசில் வைக்கவும் அல்லது கடலை பருப்பு மென்மையாக வேகும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.
  • கடலைப் பருப்புக்கு பதிலாக பாசிப்பருப்பு பயன்படுத்தியும் இதே முறையில் பாயசம் செய்யலாம்.
  • தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி முந்திரி திராட்சையுடன் நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.
  • வெல்லம் சேர்க்கும் போது உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
  • வெல்லத்திற்கு பதிலாக அதே அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து செய்யலாம்.
  • நாட்டு சர்க்கரை சேர்ப்பதாக இருந்தால் பாகு காய்ச்ச தேவையில்லை பருப்பு வெந்தவுடன் நேரடியாக நாட்டுச் சர்க்கரை சேர்த்து 4 – 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும்.

இதர பாயசம் வகைகள் – கேரமல் பாயாசம், கேரட் பாயசம், கோதுமை ரவை பாயசம்ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால்.

இதர இனிப்பு வகைகள் – கோதுமைரவை கேசரி, பிரட் குலாப் ஜாமுன், கோதுமை ரவை கேசரி, காசி அல்வா, மால்புவா, கோதுமை அல்வா, குலாப் ஜாமுன், ரவா லட்டு, இனிப்பு காஜா, கடலை பர்ஃபி, ரவா  இனிப்பு அப்பம், கோவில் சக்கரை பொங்கல், ரசமலாய், நெய்யப்பம்.

 

See this Recipe in English

கடலை பருப்பு பாயசம் செய்ய தேவையான பொருட்கள்

  • கடலைப்பருப்பு – ¾  கப் – 150g
  • பச்சரிசி – 3  மேஜைக்கரண்டி
  • வெல்லம் – 1 கப் – 250g
  • கசகசா – 1  தேக்கரண்டி
  • துருவிய தேங்காய் – ½  கப்
  • ஏலக்காய் – 3
  • நெய் – 1  தேக்கரண்டி
  • முந்திரிப் பருப்பு – 3  தேக்கரண்டி
  • திராட்சை – 10 – 15

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில்  ¾  கப் கடலை பருப்பு சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன் 3 மேஜைக்கரண்டி பச்சரிசி சேர்த்துக் கொள்ளவும்.

2. தண்ணீர் ஊற்றி ஒரு முறை கழுவி விடவும்.

3. பின்னர் 3 கப் (750ml) தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

4. அதை பிரஷர் குக்கரில் வைத்து 3 – 4 விசில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

5. ஒரு பாத்திரத்தில்  1 கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன் ¼  கப் தண்ணீர் சேர்த்து  மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்

6. வெள்ளம் கொதித்து ஓரளவு  திக்கானதும் அடுப்பை அணைத்து தனியே வைக்கவும்.

7. குக்கரில் பிரஷர் இறங்கிய பின்னர் அரிசி பருப்பை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.

8. அதனுடன் தயாராக வைத்துள்ள வெல்ல பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.

9. 2 – 3 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைத்துக் கொள்ளவும்.

 10. ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி கசகசா சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

11. 2 நிமிடங்களுக்கு / வாசம் வரும் வரை வறுத்து பின்னர் ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளவும்.

 12. பின்னர் ½  கப் துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.

13. அதனுடன் 3 ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும்.

14. ¼  கப் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

15. அரைத்த தேங்காய் விழுதை பாயசத்துடன் சேர்த்து 4 – 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

16. ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் 3 தேக்கரண்டி முந்திரிப் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.

17. பின்னர் 10 – 15 காய்ந்த திராட்சை சேர்த்து திராட்சை உப்பி வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

18. வறுத்த முந்திரி திராட்சையை பாயசத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.

19. சுவையான கடலை பருப்பு பாயசம் தயார்.

Leave a Reply