காராமணி குழம்பு மதிய உணவுக்கு ஏற்ற ஒரு சத்தான குழம்பு வகை, காராமணி, தட்டைப் பயிறு என்றும் சொல்லலாம். பயிறு வகைகளை வாரம் 1 முறை அல்லது 2 முறை இதுபோன்று குழம்பு அல்லது சுண்டல் ஆகியவற்றை செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஏற்றது. காராமணி குழம்பு ஊற வைத்து வேக வைத்த காராமணி, புளி, பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைக் கொண்டு திக்காக செய்யப்படும் குழம்பு வகை.
இது சூடான சாதத்துடன் நெய் கலந்து அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு பொரியல் உடன் பரிமாறினால் சுவையாக இருக்கும். அது தவிர இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சுவையான காராமணி குழம்பு நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
இதர வகைகள் – பருப்பு உருண்டை குழம்பு, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, மோர் குழம்பு,முருங்கைக் கீரை கூட்டு, வாழைக்காய் பொரியல், தக்காளி ரசம், எலுமிச்சை ரசம், முட்டைகோஸ் கேரட் பட்டாணி பொரியல், உருளைக்கிழங்கு வருவல், சேப்பங்கிழங்கு வறுவல், பாகற்காய் வறுவல், வாழைப்பூ வடை.
காராமணி குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்
- 1 கப் காராமணி/ தட்டைப்பயிறு
- எலுமிச்சை பழ அளவு புளி
- 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் / சமையல் எண்ணெய்
- 1/2 தேக்கரண்டி வெந்தயம்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 1 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் / 10 சின்ன வெங்காயம்
- 5 அல்லது 10 பூண்டு பல்
- 1 தக்காளி
- 1 தேக்கரண்டி சாம்பார் தூள் / மிளகாய் தூள்
- 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
- உப்பு தேவையான அளவு
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
அரைக்க தேவையான பொருட்கள்
- 1/4 கப் தேங்காய்
- 2 காய்ந்த மிளகாய்
- 1 தேக்கரண்டி சீரகம்
- நறுக்கிய வெங்காயம் சிறிதளவு
காராமணி குழம்பு செய்முறை
1. காராமணியை 6 முதல் 8 மணி நேரம் ஊற வைக்கவும் அல்லது இரவு ஊற வைத்து காலையில் எடுத்து பயன்படுத்தலாம்.
2. காராமணி ஊறியதும் பிரஷர் குக்கரில் சேர்த்து 2 அல்லது 3 விசில் வைக்கவும்.
3. காராமணி வெந்ததும் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் புளியை ஊறவைத்து தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
6. அதனுடன் கறிவேப்பிலை சேர்க்கவும், (கருவேப்பிலை இல்லாததால் நான் கருவேப்பிலை பொடி சேர்த்து உள்ளேன்.)
7. பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு பல் சேர்த்து நன்றாக வதக்கவும்.
8. பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வேக வைக்கவும்.
9. அதனுடன் சாம்பார் தூள் அல்லது மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
10. பின்னர் புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
11. 10 முதல் 12 நிமிடங்களுக்கு மூடி வைத்து வேக வைக்கவும் அல்லது எண்ணெய் பிரியும் வரை வேக வைக்கவும்.
12. அதனுடன் ஊற வைத்து வேக வைத்த காராமணி சேர்த்துக் கலக்கவும்.
13. குழம்பு கொதித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம், தேங்காய், சீரகம், மற்றும் வரமிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
14. தேங்காய் விழுது சேர்த்து 1 அல்லது 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
15. சுவையான காராமணி குழம்பு தயார் நெய் மற்றும் அப்பளத்துடன் பரிமாறவும்.