Malai Kulfi recipe in Tamil | குல்பி | Kulfi in Tamil | How to make Kulfi | Easy kulfi recipe

See this Recipe in English

குல்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவு வகை.  வெயில் காலங்களில் வீட்டு வாசலில் மணி அடித்துக் கொண்டு வரும் குல்பி  காரரிடம் குல்பி வாங்கி சாப்பிடுவது, நம் குழந்தை பருவத்தில் யாராலும்  மறக்கவே முடியாத இனிமையான நினைவுகள்.  பக்கத்து வீட்டு குழந்தைகள் மற்றும் உறவினர் குழந்தைகளுடன் சேர்ந்து சுவையான குல்ஃபி சாப்பிட்ட அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக இருக்கும்.  சுவையான  குல்பி, பால், சர்க்கரை, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பயன்படுத்தி மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். இதனை அதிகபட்சமாக 30 முதல் 40 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யலாம் இரவில் செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் காலையில் சுவையான குல்பி தயாராகிவிடும்.

சுவையான குல்ஃபி செய்ய சில குறிப்புகள்

  • குல்பி செய்வதற்கு கெட்டியான முழு கொழுப்பு சத்துள்ள பால் பயன்படுத்தவும்.
  • பாலைக் காய்ச்சும்போது அவ்வப்போது கிளறி விடவும் அல்லது அடி பிடிக்கும் வாய்ப்புள்ளது.
  • கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து செய்யும் பொழுது கடையில் கிடைக்கும் சுவையுடன் குல்பி இருக்கும்.
  • பாதாம், பிஸ்தா தவிர்த்து முந்திரி, வால்நட் போன்ற நீங்கள் விருப்பப்பட்டவற்றை சேர்த்து செய்யலாம்.
  • குங்குமப்பூ  விருப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது சேர்க்காமலும் செய்யலாம்.
  • சர்க்கரை உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
  • பாதாம் மற்றும் பிஸ்தாவை  மிக்ஸியில் சேர்த்து பொடியாக  அரைக்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • குல்பி மோல்ட் இருந்தால் பயன்படுத்தலாம் அல்லது வீட்டிலுள்ள டம்ளர் அல்லது பேப்பர் கப்பில் வைத்து செய்யலாம்.
  • ஃப்ரீஸரில் இருந்து எடுத்த பிறகு 10 முதல் 20 வினாடிகள் தண்ணீரில் வைத்துவிட்டு அதன் பின்னர் மெதுவாக  குல்ஃபியை வெளியே எடுக்கவும்.

இதர வகைகள் – பால் சர்பத், பழ சர்பத்ரோஸ் மில்க், கேரட் மில்க் ஷேக்,பாதாம் பால், கேரமல் பாயாசம், கோதுமை ரவை பாயசம்ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால், தர்பூசணி ஜூஸ், மதுரை ஸ்பேஷல் ஜிகர்தண்டா

 

 

See this Recipe in English

 

குல்பி செய்ய தேவையான பொருட்கள்

  • பால் – 1  லிட்டர்
  • பாதாம் – 15
  • பிஸ்தா – 10
  • ஏலக்காய் – 3 
  • கண்டன்ஸ்டு மில்க் -¼  கப்
  • குங்குமப்பூ – 1  சிட்டிகை ( பாலில் ஊற வைத்தது)
  • சர்க்கரை – ¼  கப்

செய்முறை

1. குல்பி செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் திக்கான தண்ணீர் சேர்க்காத பால் சேர்த்துக் கொள்ளவும்.

2. மிதமான தீயில் வைத்து பாலை காய்ச்சவும்.

3. 1 லிட்டர் பால் 1/2 லிட்டராக வற்றும் வரை காய்ச்சவும், அவ்வப்போது கிளறி விடவும்.

4. ஒரு மிக்ஸி ஜாரில் 15 பாதாம்,  10 பிஸ்தா,  3 ஏலக்காய்  ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

5. அதனை நைசாக அரைக்காமல் கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

6. பின்னர் பாலில் ¼ கப் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும்.

7. ஒரு சிட்டிகை குங்குமப் பூவை சிறிது நேரம் பாலில் ஊறவைத்து அதன் பின்னர் சேர்த்து கொள்ளவும்.  

8. பின்னர் பொடித்து வைத்துள்ள பாதாம் மற்றும் பிஸ்தாவை சேர்த்துக் கொள்ளவும்.

9. 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.

10. பின்னர்  ¼  கப் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

 11. சர்க்கரை கரைந்த பின்னர் நன்றாக ஆறவிடவும்.

12. ஆறிய பின்னர் வீட்டில் உள்ள டீ கிளாஸ் அல்லது பேப்பர் கப்பில் கலவையை ஊற்றி கொள்ளவும்.

13. அதனை அலுமினியம் பாயில் அல்லது பிளாஸ்டிக்  பேப்பரில் மூடவும்.

14. அதன் நடுவில் ஐஸ்க்ரீம் குச்சியை வைக்கவும்.

15. ஃப்ரீசரில் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் வைக்கவும். 8 மணி நேரத்திற்குப் பின்னர் குல்ஃபி எடுத்து தண்ணீரில் 10 முதல் 20 வினாடிகள்  வைக்கவும்.

16. இப்போது மெதுவாக வெளியே எடுக்கவும். சுவையான  குளுகுளு குல்பி தயார். 

Leave a Reply