பால் கொழுக்கட்டை தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை, இது மென்மையான அரிசிமாவு கொழுக்கட்டை, பாலில் வேக வைத்து தேங்காய் பால், மற்றும் வெல்லப்பாகு சேர்க்கும் பொழுது அலாதியான சுவையுடன் இருக்கும்.
சுவையான பால் கொழுக்கட்டை செய்ய சில குறிப்புகள்
- பால் கொழுக்கட்டை, தேங்காய் பால் தவிர சாதாரண பாலிலும் செய்யலாம்.
- வெல்லப்பாகு சேர்ப்பதற்கு பதிலாக சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இது பாரம்பரிய பால் கொழுக்கட்டை காட்டிலும் விரைவாக செய்யக்கூடியது .
- வீட்டிலேயே தேங்காயை துருவி வெந்நீர் கலந்து மைய அரைத்து பிழிந்து தேங்காய்பால் எடுத்துக் கொள்ளலாம் அல்லது கடைகளில் கிடைக்கும் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளலாம். அது வீட்டில் செய்வதை விட கெட்டியாக இருப்பதால் பாதி அளவு சேர்த்தால் போதும்.
- தேங்காய்ப்பால் சேர்த்த பிறகு கொதிக்க கூடாது பால் திரிந்து விடும்.
இதர வகைகள் – தேங்காய் பூரண கொழுக்கட்டை, கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை, எள்ளு பூரண கொழுக்கட்டை, உளுந்து பூரண கொழுக்கட்டை, இனிப்பு பிடி கொழுக்கட்டை
.
பால் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்
- அரிசி மாவு – 1 கப்
- வெல்லம் – 1 கப்
- துருவிய தேங்காய் – 1/2 கப்
- ஏலக்காய் – 3
- பால் – 1 கப்
- சர்க்கரை – 1 தேக்கரண்டி
- அரிசி மாவு – 1 தேக்கரண்டி
- உப்பு சிறிதளவு
பால் கொழுக்கட்டை செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து சூடானதும் பொடித்து வைத்து வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
2. 15 – 20 நிமிடங்களுக்குப் பிறகு திக்கான வெல்ல பாகு தயாரானதும், அடுப்பை அணைத்து தனியே எடுத்து வைக்கவும்.
2. தேங்காயை துருவி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் மற்றும் லேசாக சூடான நீரை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
3. அரைத்த தேங்காயை பிழிந்து தேங்காய் பால் எடுக்கவும்.
4. மீண்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து இரண்டாவது முறையும் தேங்காய் பாலை எடுத்து வடிகட்டி வைக்கவும்
5. ஒரு சிறிய பாத்திரத்தில் 1 தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து, அதனுடன் 4 அல்லது 5 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
6. ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக சூடானதும் அதனுடன் 1 கப் அரிசி மாவு சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்.
7. மாவு திரண்டு கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஆற வைக்கவும்.
8. மாவு கை தாங்கும் சூட்டிற்கு வந்ததும் மென்மையாக பிசைந்து வைக்கவும்.
9. அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
10. ஒரு பாத்திரத்தில் 1 கப் பாலுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்.
11. பால் காய்ந்ததும் உருட்டி வைத்த உருண்டைகளை சேர்த்து வேக வைக்கவும்.
12. கொழுக்கட்டைகள் வெந்ததும் மேலெழும்பி வரும், அப்பொழுது வெல்ல பாகு சேர்த்து கலக்கவும்.
13. அதனுடன் சிறிய பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள அரிசி மாவு கலவையை சேர்த்து சூடாக்கவும்.
14. ஓரளவு கெட்டியானதும் தேங்காய் பால் சேர்த்து கிளறவும் லேசாக சூடானதும் அடுப்பை அணைத்து விடவும்.
15. சுவையான பால் கொழுக்கட்டை தயார்.