Motichoor Laddu | மோட்டிச்சூர் லட்டு | Laddu recipe in Tamil | How to make motichoor laddu

See this Recipe in English

மோட்டிச்சூர் லட்டு குட்டி முத்து என்றும் கூறப்படுகிறது. இது வழக்கமான பூந்தியை போன்று அல்லாமல் சிறு சிறு பூந்திகளை வைத்து செய்யப்படுகிறது, இது பார்ப்பதற்கு அழகாகவும் சாப்பிடும்போது வித்தியாசமான சுவையுடனும் இருக்கும். மோத்திசூர் லட்டு செய்வது சிறிய துளையுள்ள பிரத்தியேக மோட்டிச்சூர் லட்டு கரண்டி பயன்படுத்தப்படுகிறது, அது எல்லா கடைகளிலும் கிடைப்பதில்லை, அதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் கரண்டியைப் பயன்படுத்தி மோத்தி சூர் லட்டு செய்யலாம், கடைகளில் கிடைக்கும் அதே சுவையில் வீட்டிலும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

மோட்டிச்சூர் லட்டு செய்ய சில குறிப்புகள்

  • மோட்டிச்சூர் லட்டு செய்ய, பிரத்தியேக சிறு துளையுள்ள கரண்டி பயன்படுத்தலாம் அல்லது வீட்டில் இருக்கும் கரண்டி பயன்படுத்தலாம்.
  • அலுமினியம் பாயில் பேப்பர் பயன்படுத்தி பூந்தி கரண்டி அல்லது ஜல்லி கரண்டியை சிறு துளை உள்ள கரண்டியாக மாற்றி பயன்படுத்தலாம்.
  • மாவு கலக்கும் பொழுது மிகவும் கெட்டியாகவும் அல்லது தண்ணியாகவும் இல்லாமல்  கலக்கிக் கொள்ளவும்.
  • பூந்தி பொறிப்பதற்கு அடுப்பு பக்கத்தில் ஒரு கனமான டப்பா வைத்து அதன் மீது ஒரு துணி வைத்துக் கொள்ளவும், இவ்வாறு செய்யும்பொழுது முத்துக்கள் சிறிது சிறிதாக விழுகும்.
  • பூந்தி செய்வதற்கு எண்ணெய் அதிக சூட்டுடன் இருக்க வேண்டும், சூடு கம்மியாக இருந்தால் பூந்தி சரியாக வராது.
  • கடைகளில் கிடைக்கும் பூந்தி போன்று செய்வதற்கு ஒரு சிட்டிகை ஆரஞ்சு நிறம் பயன்படுத்தி உள்ளேன், விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது சேர்க்காமலும் லட்டு செய்யலாம்.
  • பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு பயன்படுத்தி உள்ளேன் அதற்கு பதிலாக, பூசணிக்காய் மற்றும் வெள்ளரிக்காய் விதைகளை காயவைத்து (melon seeds) கடைகளில் கிடைக்கும், விருப்பப்பட்டால் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் சுவை கூடுதலாக இருக்கும்.
  • குங்குமப்பூ, பிஸ்தா போன்றவற்றை விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது சேர்க்காமலும் செய்யலாம்.
  • பூந்தி செய்வதற்கு தவறாமல் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும் அப்பொழுது பூந்தி முத்து முத்தாக வரும்.
  • லட்டு செய்து 5 முதல் 6 மணி நேரத்திற்குப் பிறகு பரிமாறவும்.

தீபாவளி பலகாரங்கள் – பொட்டுக்கடலை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, மெது பக்கோடா, ரிப்பன் பக்கோடா,  தட்டை முறுக்கு, முறுக்கு.

தீபாவளி இனிப்பு வகைகள் – ரவா லட்டு , மோட்டிச்சூர் லட்டுபாசிப்பருப்பு உருண்டை, பூந்திலட்டு, ரோஸ் பர்பி , குலாப் ஜாமுன், கோதுமை குலாப் ஜாமுன், கோதுமை அல்வா,  பாதாம் அல்வா, அசோகா அல்வா, திருநெல்வேலி அல்வா,   பால்கோவா, இனிப்பு காஜா, சாக்லேட் பர்ஃபி.

 

See this Recipe in English

மோத்தி சூர் லட்டு செய்ய தேவையான பொருட்கள்

  • 1 கப் கடலை மாவு
  • 3/4 கப் சர்க்கரை
  • 4 தேக்கரண்டி முந்திரிப்பருப்பு ( சிறிது சிறிதாக நறுக்கியது)
  • 2 தேக்கரண்டி பிஸ்தா ( மேலே தூவி அலங்கரிக்க)
  • 1 சிட்டிகை ஆரஞ்சு நிறம் (2 தேக்கரண்டி தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்)
  • 1 சிட்டிகை பேக்கிங் சோடா
  • 1 சிட்டிகை உப்பு
  • 1 சிட்டிகை குங்குமப்பூ
  • 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
  • எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

செய்முறை

1. மோட்டிச்சூர் லட்டு கரண்டி இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது, அலுமினியம் பாயில் பேப்பரை இரண்டாக மடித்துக் கொள்ளவும், அதன்மீது ஜல்லி கரண்டி அல்லது பூந்தி கரண்டியை வைத்து, டைட்டாக அழுத்தி விடவும்.

2. இப்போது அதனுள் ஒரு ஊசி வைத்து சிறு ஓட்டைகள் போடவும், லட்டு கரண்டி தயார்.

3. ஒரு பவுலில் ஒரு கப் கடலை மாவு, ஒரு சிட்டிகை உப்பு, மற்றும் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

4. சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக அல்லது தண்ணியாக இல்லாமல் மிதமான பதத்தில் மாவு கரைத்துக் கொள்ளவும்.

5. அதனுடன் ஒரு சிட்டிகை ஆரஞ்சு நிறத்தை இரண்டு தேக்கரண்டி தண்ணீரில் கரைத்து சேர்த்துக் கொள்ளவும்.

6. அதனை நன்கு கலந்து கொள்ளவும், இப்பொழுது பூந்தி செய்ய மாவு தயார்.

7. இப்பொழுது அடுப்பு பக்கத்தில் ஓரளவுக்கு உயரமான கனமான டப்பா வைத்துக் கொள்ளவும், அதன் மீது ஒரு துணி வைத்துக் கொள்ளவும்.

8. ஒரு கடாயில் எண்ணெய் சூடானதும், பூந்தி கரண்டி வைத்து அதன்மீது இரண்டு கரண்டி மாவை ஊற்றிக் கொள்ளவும்.

9. இப்பொழுது டப்பா மீது தட்டவும், சிறு சிறு முத்துக்களாக எண்ணெயில் பூந்தி விழுவதை பார்க்கலாம்.

10. 20 முதல் 30 வினாடிகள் வெந்த பிறகு எண்ணெய் வடித்து தனியே வைக்கவும். இதேபோன்று எல்லா மாவிலும் பூந்தி பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

11. ஒரு பேனில் முக்கால் கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

12. அரை கப் அல்லது சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

13. சர்க்கரை கரைந்த பிறகு அரைத்தேக்கரண்டி ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

14. ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும்.

15. கம்பி பதம் வந்த பிறகு பொரித்து வைத்துள்ள பூந்தியை அதனுடன் சேர்த்துக் கொள்ளவும், அடுப்பை குறைவான தீயில் வைத்து கிளறவும்.

16. இப்பொழுது உடைத்து வைத்துள்ள முந்திரி பருப்புகளை சேர்த்து கிளறவும்.

17. இப்பொழுது மூடி வைத்து ஆறவைக்கவும்.

18. நன்கு ஆறிய பின்னர் கைகளில் நெய் தொட்டுக் கொண்டு, விருப்பப்பட்ட அளவில் உருட்டி கொள்ளவும். 5 முதல் 6 மணி நேரத்திற்குப் பிறகு பரிமாறவும் சுவையான மோட்டிச்சூர் லட்டு தயார்.

Leave a Reply