பன்னீர் பட்டர் மசாலா மிகவும் சுவையான உணவு வகை இது பஞ்சாபிலிருந்து பெறப்பட்டது. ஆனால் இந்தியா முழுவதும் மிக மிகப் பிரபலமானது. பன்னீர் பட்டர் மசாலா, ரொட்டி, பரோட்டா, நான், புல்கா, பிரியாணி, ப்ரைட் ரைஸ், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். இது வெண்ணை, முந்திரிப்பருப்பு, தக்காளி போன்றவற்றை கொண்டு செய்யப்படுகிறது. பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் மக்னி என்றும் அழைக்கப்படுகிறது.
பன்னீர் பட்டர் மசாலாவில் பன்னீர் தவிர நீங்கள் வேக வைத்த சிக்கன்(உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், ஆகியவற்றை கொண்டு ஊற வைத்து) சேர்த்துக் கொள்ளலாம். அது பட்டர் சிக்கன் என்று அழைக்கப்படுகிறது. மேலும் பன்னீர் பட்டர் மசாலாவில் பன்னீருடன் சேர்த்து பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்குகளை பொரித்து சேர்த்துக்கொள்ளலாம். வாசனையும், சுவையும் கிடைக்கும், மேலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா செய்ய சில குறிப்புகள்
- பன்னீர் பட்டர் மசாலா செய்யும்பொழுது முந்திரி பருப்புகளை சேர்ப்பதன் மூலமாக மசாலா மிகவும் சுவையாகவும் இருக்கும்.
- உங்களுக்கு பிரஷ் கிரீம் கிடைக்கவில்லை என்று அதே அளவு திக்கான பால் சேர்த்துக் கொள்ளலாம்.
- கஸ்தூரி மேத்தி எனப்படும் உலர்ந்த வெந்தய கீரைப் பொடி மறக்காமல் சேர்த்துக்கொள்ளவும் பன்னீர் பட்டர் மசாலாவின் வாசனையைக் கொடுக்கும்.
- வீட்டில் செய்த பன்னீர் கடையில் வாங்கிய பன்னீரை காட்டிலும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
பன்னீர் பட்டர் மசாலா செய்ய தேவையான பொருட்கள்
- 250 கிராம் பன்னீர்
- 1 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1 இன்ச் பட்டை
- 3 லவங்கம்
- 3 ஏலக்காய்
- 2 தேக்கரண்டி முந்திரிப்பருப்பு
- 1 இன்ச் இஞ்சி துண்டு
- 6 பூண்டு பற்கள்
- 4 தேக்கரண்டி வெண்ணெய்
- 2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
- 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
- 1/2 தேக்கரண்டி சர்க்கரை
- 1/4 தேக்கரண்டி காய்ந்த வெந்தய கீரை பொடி
- 1/4 கப் பிரஷ் க்ரீம்
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
1. ஒரு கடாயில் 1 நறுக்கிய பெரிய வெங்காயம், 2 தக்காளிகள் நறுக்கியது ஆகியவற்றை சேர்க்கவும்.
2. அதனுடன் 1 இன்ச் பட்டை, 3 ஏலக்காய், 3 லவங்கம் சேர்க்கவும்.
3. மேலும் 2 தேக்கரண்டி முந்திரிப்பருப்பு, 1 சிறிய துண்டு இஞ்சி, 6 பூண்டு பற்கள் ஆகியவற்றை சேர்க்கவும்.
4. மேலும் 500 ml தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
5. தக்காளி மென்மையாகும் வரை வெந்த பிறகு ஆறவைக்கவும்.
6. ஆறிய பின்னர் கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
7. ஒரு கடாயில் 4 தேக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும்.
8. வெண்ணெய் உருகியதும் 2 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
9. குறைந்த தீயில் 2-3 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
10. இப்பொழுது அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கலக்கவும்.
11. அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து, 1/2 தேக்கரண்டி சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
12. மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
13. பின்னர் 1/2 தேக்கரண்டி சர்க்கரை, 1/4 தேக்கரண்டி வெந்தயக்கீரை பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
14. 1/4 தேக்கரண்டி பிரஷ் க்ரீம் சேர்த்து கலக்கவும்.
15. இப்பொழுது 250 கிராம் பன்னீர் துண்டுகளை சேர்த்து குறைவான தீயில் 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
16. கடைசியாக சிறிதளவு பொடியாக நறுக்கியகொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.
17. சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்.