Veg Salna in Tamil | வெஜிடபிள் சால்னா | Salna for Parotta | Salna recipe in Tamil | How to make Salna

See this Recipe in English

வெஜிடபிள் சால்னா  பரோட்டா,  தோசை,  இட்லி,  பூரி,  சப்பாத்தி ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். காய்கறிகள் சேர்க்காமல் செய்யப்படும் சால்னாவை காட்டிலும், இது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.   இதில் நாம் விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்,  கேரட்,  உருளைக்கிழங்கு,  பட்டாணி,  காலிஃபிளவர் சேர்த்துள்ளேன்.  இதுதவிர பீன்ஸ், பீட்ரூட், ப்ராக்கோலி,  போன்ற காய்கறிகளை சேர்த்து மேலும் ஆரோக்கியமான சால்னாவை செய்யலாம். சுவையான காய்கறி சால்னா நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான காய்கறி சால்னா செய்ய சில குறிப்புகள்

  • சால்னா செய்ய கடலை எண்ணெய் பயன்படுத்தி உள்ளேன்,  அதற்குபதில் நல்லெண்ணெய்  சேர்க்கலாம் அல்லது விருப்பப்பட்ட சமையல் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம்.
  • இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி சேர்த்துள்ளேன். மசாலா விழுது அரைக்கும் போது சிறிதளவு இஞ்சியும்-பூண்டும் சேர்த்து அரைத்தால் வெங்காயம் வதக்கும்போது 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்தால் போதுமானது. 
  • காய்ந்த பட்டாணியை 8  மணி நேரம் ஊறவைத்து சேர்த்துள்ளேன்,  இதற்குபதிலாக நீங்கள் பிரஷ்ஷான பச்சை பட்டாணி சேர்த்துக் கொள்ளலாம்.
  • வாசனைக்காக  கறி மசாலா தூள் சேர்த்துள்ளேன்,  இது எல்லா கடைகளிலும் பாக்கெட்டுகளில் கிடைக்கும். 
  • கறி மசாலா தூள் சேர்ப்பதற்கு பதிலாக 1/4  தேக்கரண்டி கரம் மசாலா செய்யலாம் அல்லது இவை இரண்டும் சேர்க்காமலும் செய்யலாம்.
  • தேங்காய் விழுது அரைக்கும் பொழுது  முந்திரி பருப்பு சேர்ப்பதற்கு பதிலாக 3 தேக்கரண்டி பொட்டுக்கடலை சேர்த்து அரைக்கலாம்.

இதர சைவ குருமா வகைகள் – சோயா குருமாவடைகறிரோட்டுக்கடை காளான் மசாலாகத்திரிக்காய் கிரேவிபன்னீர் கிரேவிகும்பகோணம் கடப்பாதக்காளி குருமாஆந்திரா கத்திரிக்காய் மசாலாபூரி மசாலாவெஜிடபிள் குருமாசென்னா மசாலாபன்னீர் பட்டர் மசாலாகாளிஃபிளவர் பட்டாணி குருமா.

அசைவ குருமா வகைகள் –  இறால் தொக்குசெட்டிநாடு சிக்கன் குழம்புமுட்டை மசாலாஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவிமுட்டை குழம்பு.

 

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

மசாலா விழுது 

  • சமையல் எண்ணெய்/கடலெண்ணெய் – 2  தேக்கரண்டி
  • சோம்பு – ½  தேக்கரண்டி
  • சீரகம் – ½  தேக்கரண்டி
  • பட்டை – 1  துண்டு
  • கிராம்பு – 4
  • ஏலக்காய் – 4 
  • மிளகு – ½  தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் – 10 – 15
  • தக்காளி – 1

தேங்காய் விழுது 

  • துருவிய தேங்காய் – ¾  கப்
  • முந்திரி பருப்பு – 10 
  • கசகசா – ½  தேக்கரண்டி

இதர பொருட்கள்

  • சமையல் எண்ணெய்/கடலெண்ணெய் – 5  தேக்கரண்டி
  • பிரிஞ்சி இலை – 1
  • சோம்பு – ½  தேக்கரண்டி
  • பெரிய வெங்காயம் – 1 
  • இஞ்சி பூண்டு விழுது – 2  தேக்கரண்டி
  • புதினா – 1 கைப்பிடி 
  • கொத்தமல்லி – 1  கைப்பிடி 
  • உருளைக்கிழங்கு – 1 
  • கேரட் – 2 
  • காலிபிளவர் –   சிறிதளவு 
  • காய்ந்த பட்டாணி – ½ கப் ((8 மணிநேரம் ஊற வைத்தது) 
  • உப்பு –  தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – ½  தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 1  தேக்கரண்டி
  • மல்லித் தூள் – ½  தேக்கரண்டி
  • கறி மசாலா தூள் – ½  தேக்கரண்டி 

செய்முறை

1. மசாலா விழுது அரைப்பதற்கு ஒரு பேனில் 2  தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.  எண்ணெய் சூடானதும் சோம்பு ½  தேக்கரண்டி, சீரகம் ½ தேக்கரண்டி, பட்டை 1 துண்டு, கிராம்பு 4, ஏலக்காய் 4, மிளகு  ½ தேக்கரண்டி ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

2. அதனுடன் 10 – 15 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

3. வெங்காயம் வதங்கியதும் 1  தக்காளி சேர்த்து,  மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும்.

4. இந்த கலவையை ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

5. ஒரு அடிகனமான பாத்திரத்தில் 5 தேக்கரண்டி கடலை எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் 1  பிரிஞ்சி இலை, ½  தேக்கரண்டி சோம்பு சேர்த்து தாளிக்கவும்.

6. அதனுடன் 1  பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

7. வெங்காயம் பாதியளவு வதங்கியதும் 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.

8. அதனுடன் 1  கைப்பிடி புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து  பச்சை வாசனை போக வதக்கவும். 

9. பின்னர்  1 உருளைக்கிழங்கு, 2 கேரட் ஆகியவற்றை தோல் நீக்கி பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்,  அதனுடன் சிறிதளவு காலிபிளவரை பூ போல நறுக்கி சேர்க்கவும், 8 மணி நேரம் ஊறவைத்து காய்ந்த பட்டாணியை சேர்த்துக் கொள்ளவும். காய்கறிகளை சேர்த்த பின்னர் மிதமான தீயில் வதக்கவும்.

10. இதனுடன்  தேவையான அளவு உப்பு, ½  தேக்கரண்டி மஞ்சள் தூள், 1  தேக்கரண்டி மிளகாய் தூள், ½  மல்லித் தூள், ½  கறி மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

11. ஒரு முறை வதக்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுது சேர்த்துக் கொள்ளவும்.

12. நன்றாக கலந்து ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.

13. ஒரு மிக்ஸி ஜாரில் ¾  கப் துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 10  முந்திரிப் பருப்பு, ½  தேக்கரண்டி கசகசாவை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து சேர்த்துக் கொள்ளவும்.

14. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும்.

15. தேங்காய் விழுதை வதக்கி வைத்துள்ள கலவையுடன் சேர்க்கவும்.

16. இப்பொழுது அதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.  

17. நன்றாக கலந்த பின்னர் மூடி வைத்து மிதமான தீயில் 20 முதல் 25 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

18. ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்த பின்னர் சிறிதளவு கொத்தமல்லியை பொடியாக தூவிக் கொள்ளவும்.

19.  சுவையான வெஜிடபிள் சால்னா தயார். 

Leave a Reply