See this Recipe in English
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை மிகவும் புகழ்பெற்ற விநாயகர் சதுர்த்தி அன்று எல்லா வீடுகளிலும் செய்யக்கூடிய கொழுக்கட்டை. இது மிகவும் சுலபமான முறையில் தேங்காய் மற்றும் வெல்லம் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. பல விதமான கொழுக்கட்டை வகைகள் இருந்தாலும் தேங்காய் பூரணம் மற்றும் எள்ளு பூரணம் போன்றவை விநாயகர் சதுர்த்தி அன்று செய்து விநாயகருக்கு படைப்பது சிறப்பாகும்.
உளுந்து பூரண கொழுக்கட்டை இது காரக்கொழுக்கட்டை அல்லது உப்பு கொழுக்கட்டை என்று விதவிதமான பெயர்களில் அழைக்கப்படுகிறது. உளுந்து, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், தேங்காய் ஆகியவற்றை கொண்டு பூரணம் செய்து அதனை உள்ளே வைத்து கொழுக்கட்டை செய்தால் உளுந்து பூரணம் கொழுக்கட்டை. காரக்கொழுக்கட்டை பலவிதமாக செய்யப்படுகிறது ஆனால் பூரணம் வைத்து செய்வது உளுந்து பூரண கொழுக்கட்டை.
See this Recipe in English
இதர வகைகள் – கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை, எள்ளு பூரண கொழுக்கட்டை, உளுந்து பூரண கொழுக்கட்டை, இனிப்பு பிடி கொழுக்கட்டை, பருப்பு பாயசம், கடலை பருப்பு பாயசம், அவல் பாயசம்
கொழுக்கட்டை மாவு செய்ய தேவையான பொருட்கள்
- அரிசி மாவு – 1. 5 கப்
- தண்ணீர் – 2 . 5 கப்
- உப்பு – தேவையான அளவு
- நெய் / நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்.
2. அதனுடன் அரை தேக்கரண்டி உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
3. ஒரு கடாயில் ஒன்றரை கப் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும். அதனை மூன்று நான்கு நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுத்து கொள்ளவும்.
4. தண்ணீர் சூடானதும் அதனை அரிசி மாவுடன் சேர்த்து கரண்டியால் கலக்கவும்.
5. மாவு சேர்ந்து வந்த பிறகு அடுப்பை அனைத்து விட்டு கை பொறுக்கும் சூடு வந்ததும் மாவை மென்மையாக பிசைந்து மூடி வைக்கவும்.
தேங்காய் பூரணம்
தேவையான பொருட்கள்
- 1 கப் வெல்லம்
- 1/2 கப் தண்ணீர்
- 1 கப் துருவிய தேங்காய்
- 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
1. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் வெல்லம் சேர்த்து அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
2. வெல்லம் கரைந்த பின்னர் அதனை வடிகட்டி கொள்ளவும்.
3. வெள்ளம் கொதித்து ஓரளவு கெட்டியானதும் அரைத்தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
4, அதனுடன் ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.
5. கெட்டியானதும் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை செய்முறை
1. சோப்பு செய்து அதனுள் சிறிதளவு பூரணம் வைத்து மூடி வைக்கலாம், அல்லது கொழுக்கட்டை அச்சில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவிக் கொள்ளவும்.
2. சிறிதளவு மாவை உள்ளே வைத்து அழுத்தவும்.
3. அதனுள் சிறு உருண்டை பூரணத்தை வைத்து மீண்டும் அழுத்தி விடவும்.
4. மேலும் சிறிதளவு மாவு சேர்த்து மூடவும்.
5. இதே போன்று எல்லா மாவிலும் கொழுக்கட்டை செய்து வைத்துக் கொள்ளவும்.
6. ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடானதும் அதன்மீது இட்லி தட்டு அல்லது இடியாப்ப தட்டு வைத்து எண்ணெய் தடவிக் கொள்ளவும்.அதில் தயார் செய்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக அடுக்கவும்.
7. மூடி வைத்து 5 முதல் 7 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
8. சுவையான தேங்காய் பூரண கொழுக்கட்டை தயார்.
உளுந்து பூரணம்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் உளுந்து ( இரண்டு மணி நேரம் ஊற வைத்தது)
- 3 பச்சைமிளகாய்
- 2 சிவப்பு மிளகாய்
- தேவையான அளவு உப்பு
- 2 தேக்கரண்டி நல்லெண்ணெய்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1/4 தேக்கரண்டி பெருங்காயம்
- கருவேப்பிலை சிறிதளவு
- 1/4 துருவிய தேங்காய்
செய்முறை
1. அரை கப் உளுந்தை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்து மிக்ஸியில் சேர்த்து கொள்ளவும்.
2. அதனுடன் 3 பச்சை மிளகாய், 2 காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
3. கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் அரைத்து வைத்துள்ள உளுந்தை சிறிது சிறிதாக வைத்து கொள்ளவும்.
5. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
6. வெந்த பிறகு தனியே எடுத்து உளுந்தை ஓரளவு உடைத்துவிட்டு வைக்கவும்.
7. ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
8. எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து பொரியவிடவும்.
9. பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து கிளறவும்.
10. கால் கப் துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.
11. தேங்காய் ஓரளவு வறுத்த பின்னர் வேக வைத்து வைத்துள்ள உளுந்தை சேர்த்துக் கொள்ளவும்.
12. இரண்டு நிமிடங்களுக்குப் பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
13. ஒரு வாழை இலையில் சிறிதளவு எண்ணெய் தடவி ஒரு எலுமிச்சம் பழ அளவு கொழுக்கட்டை மாவை உருட்டி வைக்கவும்.
14. அதனை மெதுவாக தட்டிக் கொள்ளவும், மொத்தமாக இல்லாமல் மிதமாக தட்டிக் கொள்ளவும்.
15. அதனுள் ஒரு தேக்கரண்டி பூரணம் வைத்து, வாழை இலையுடன் சேர்த்து மூடி ஓரங்களை ஒட்டி விடவும்.
16. ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடானதும் இட்லி தட்டு அல்லது இடியாப்ப தட்டில் எண்ணை தடவி, அதன் மீது தயார் செய்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை அடுக்கவும்.
17. மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
18. சுவையான கொழுக்கட்டை தயார்.