See this Recipe in English
ராகி கொழுக்கட்டை சுவை மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி வகை. இதனை விநாயகர் சதுர்த்தி, சங்கட சதுர்த்தி, போன்ற நாட்களில் இறைவனுக்கு செய்து படைக்கலாம். இது தவிர மற்ற நாட்களிலும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக வழங்கலாம். இதனை மிகவும் சுலபமான முறையில் 10 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யலாம். ராகி மற்றும் வெல்லம் போன்ற பொருட்களை சேர்த்து செய்வதால் ஆரோக்கியமானது இதற்கு எண்ணெய் சேர்க்க தேவையில்லை. ஆவியில் வேக வைத்த சுவையான உணவு வகை.
சுவையான ராகி கொழுக்கட்டை செய்ய சில குறிப்பு
- கொழுக்கட்டை செய்வதற்கு வெள்ளை அல்லது சிவப்பு அவல் எது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- ராகி மாவை வறுக்கும்போது குறைவான தீயில் வைத்து வறுக்கவும்.வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- ராகி மாவை எடுத்து சம அளவில் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது உங்கள் சுவைக்கு ஏற்ப வெல்லம் சேர்க்கவும்.
- வெல்லம் கரைந்தால் போதுமானது கம்பி பதம் வரும் வரை கொதிக்க வைக்க வேண்டியதில்லை.
இதர வகைகள்
இனிப்பு பிடி கொழுக்கட்டை
தேங்காய் பூரண கொழுக்கட்டை
எள்ளு பூரண கொழுக்கட்டை
பால் கொழுக்கட்டை
பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயசம்
சிவப்பு அவல் பாயசம்
கோதுமை ரவை பாயசம்
கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
- அவல் – ½ கப்
- துருவிய தேங்காய் – ¼ கப்
- ராகி மாவு – ½ கப்
- வெல்லம் – ½ கப்
- உப்பு – 1 சிட்டிகை
- ஏலக்காய் பொடி – ¼ தேக்கரண்டி
- நெய் – 1 தேக்கரண்டி
செய்முறை
1. ஒரு மிக்ஸி ஜாரில் ½ கப் அவல் சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனை நைசாக அரைத்து, ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.
3. அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து கொள்ளவும்.
4. பின்னர் ½ கப் ராகி மாவை வறுத்துக் கொள்ளவும்.
5. வாசனை வரும் வரை வறுத்து பின்னர் அவல் மற்றும் தேங்காய் கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.
6. அதனுடன் 1 சிட்டிகை உப்பு மற்றும் ½ தேக்கரண்டி ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.
7. ஒரு பாத்திரத்தில் ½ கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.
8. அதனுடன் ¼ கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
9. வெல்லம் கரைந்ததும் அதனை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.
10. எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
11. இதனுடன் 1 தேக்கரண்டி நெய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
12. பின்னர் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நான்கு விரல்களால் பிடித்துக் கொள்ளவும்.
13. ஒரு இட்லி தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி அதன் மீது கொழுக்கட்டைகளை வைக்கவும்.
14. அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் வைத்து வேக வைக்கவும்.
15. சுவையான ராகி கொழுக்கட்டை தயார்.