Veg Salna in Tamil | ஹோட்டல் ஸ்டைல் சால்னா | Salna recipe in Tamil | How to make salna

See this Recipe in English

சால்னா பரோட்டாவுடன் மிகவும் சுவையாக இருக்கும். பரோட்டா-சால்னா ஏராளமான சாலையோர உணவகங்களில் மிகவும் பிரபலமானது.  சால்னா, பரோட்டா மட்டுமின்றி சப்பாத்தி, முட்டை தோசை, கொத்து பரோட்டா, ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.  சுவையான சால்னாவை சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். காய்கறிகள் எதுவும் சேர்க்காமல் சால்னா செய்து உள்ளேன் நீங்கள் விருப்பப்பட்டால் சிக்கன், முட்டை அல்லது கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி, போன்ற காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.  சுவையான ஹோட்டல் ஸ்டைல் சால்னாவை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். 

சுவையான சால்னா செய்ய சில குறிப்புகள்

  • சால்னா செய்ய நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 
  • மசாலா அரைப்பதற்கு சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் தான் சுவையாக இருக்கும்.
  • மசாலா அரைக்கும் பொழுது உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகு சேர்த்துக் கொள்ளலாம்.
  • தேங்காய் விழுது அரைக்கும்போது தேங்காய் தாராளமாகச் சேர்க்கலாம்.
  • சால்னா செய்வதற்கு 125ml – 150ml    எண்ணெய் சேர்த்து செய்தால் தான் குழம்பு கொதித்த பின்னர் எண்ணெய் மேலே மிதந்து வரும்.
  • சால்னாவில் எண்ணெய் மேலே மிதந்தால் தான் சால்னா சுவையாக இருக்கும்.
  • தேங்காய் விழுது அரைக்கும் பொழுது முந்திரி பருப்பு சேர்ப்பதற்கு பதிலாக பொட்டுக்கடலை சேர்த்து அரைக்கலாம். 
  • காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

இதர சைவ குருமா வகைகள் – சோயா குருமா, வடைகறி, ரோட்டுக்கடை காளான் மசாலா, கத்திரிக்காய் கிரேவி, பன்னீர் கிரேவி, கும்பகோணம் கடப்பா, தக்காளி குருமா, ஆந்திரா கத்திரிக்காய் மசாலா, பூரி மசாலா, வெஜிடபிள் குருமா, சென்னா மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, காளிஃபிளவர் பட்டாணி குருமா.

அசைவ குருமா வகைகள் –  இறால் தொக்கு, செட்டிநாடு சிக்கன் குழம்பு, முட்டை மசாலா, ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி, முட்டை குழம்பு.

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

  • சமையல் எண்ணெய் – 1  தேக்கரண்டி
  • மிளகு – 1  தேக்கரண்டி
  • சோம்பு – 1  தேக்கரண்டி
  • சீரகம் – 1  தேக்கரண்டி
  • பட்டை – 1  துண்டு
  • லவங்கம் – 3 
  • அன்னாசிப்பூ – 1
  • ஏலக்காய் – 3
  • சின்ன வெங்காயம் – 100g
  • தக்காளி – 2

தேங்காய் விழுது அரைக்க தேவையான பொருட்கள்

  • தேங்காய் – ¼  கப்
  • முந்திரிப் பருப்பு – 7
  • கசகசா – ½  தேக்கரண்டி

சால்னா செய்ய தேவையான பொருட்கள்

  • கடலை எண்ணெய் – ¼ கப் – 125ml
  • பிரிஞ்சி இலை – 1
  • சோம்பு – ¼  தேக்கரண்டி
  • பெரிய வெங்காயம் – 1
  • இஞ்சி பூண்டு விழுது – 1  தேக்கரண்டி
  • புதினா  –   சிறிதளவு
  • கொத்தமல்லி தழை –  சிறிதளவு
  • தக்காளி பழம் – 2
  • உப்பு –  தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – ¼  தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 2  தேக்கரண்டி
  • மல்லித்தூள் – 1  தேக்கரண்டி

செய்முறை

1. ஒரு வானலியில்  ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்,  எண்ணெய் சூடானதும் 1  தேக்கரண்டி மிளகு சேர்த்துக் கொள்ளவும்.

2. 1  தேக்கரண்டி சோம்பு, 1 தேக்கரண்டி சீரகம்,  1 துண்டு பட்டை, 3  லவங்கம்,  1 அன்னாசிப்பூ, 3  ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

3. மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

4. 100g சின்ன வெங்காயம் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும்.

5. 2 தக்காளி பழம் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும்.

 6. அதனை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து  நைசாக அரைத்துக் கொள்ளவும்.

7. தேங்காய் விழுது செய்வதற்கு  ஒரு மிக்ஸி ஜாரில் ¼  கப் துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 7 முந்திரிப்பருப்பு, ½  தேக்கரண்டி கசகசாவை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து சேர்த்துக் கொள்ளவும்.

8. இதனை நைசாக அரைத்துக் கொள்ளவும். 

9. ஒரு கடாயில் ¼  கப் எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.

10. எண்ணெய் சூடானதும் 1 பிரிஞ்சி இலை, ¼  தேக்கரண்டி சோம்பு சேர்க்கவும்.

 11. சோம்பு பொரிந்த பின்னர் 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

12. வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கிய பின்னர், 1  தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது,  புதினா சிறிதளவு,  கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து,  இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

13. 2 பழுத்த தக்காளி பழங்கள் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும்.

14. இப்பொழுது  சால்னாவிற்கு தேவையான அளவு உப்பு, ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், 2  தேக்கரண்டி மிளகாய்த்தூள், 1  தேக்கரண்டி மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

15. அதனுடன் அரைத்து வைத்துள்ள  மசாலா விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

16. கொதித்த பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து அதனுடன் 2  கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

17. மூடி வைத்து மிதமான தீயில் 20 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.  அவ்வப்போது கிளறி விடவும் அல்லது அடி பிடிக்கும் வாய்ப்புள்ளது.

18. நன்றாக கொதித்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்த பின்னர்  சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைக்கவும்.

19. சுவையான  கெட்டி சால்னா தயார்.

Leave a Reply