கோயில் புளியோதரை/ புளி சாதம்

புளியோதரை அல்லது புளி சாதம்  கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் மிகவும் முக்கியமானது,  புளியோதரை கடவுளுக்கு சிறந்த நெய்வேதியம் / பிரசாதம். கோயில்களில் செய்வது போலவே சுவையான புளி சாதம் நம் வீட்டிலும் செய்யலாம்.புளியோதரை வடித்த சாதம், புளிக்காய்ச்சல், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய், வேர்க்கடலை, கருப்பு / வெள்ளை எள் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.

புளிக்காய்ச்சல் நாம் ஒருமுறை செய்து ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்தினால் மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். சுவையான புளியோதரை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

புளியோதரை செய்ய தேவையான பொருட்கள்

  • 2 கப் சாதம்
  • 4 தேக்கரண்டி நல்லெண்ணெய்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 2 தேக்கரண்டி கடலை பருப்பு
  • 4 தேக்கரண்டி வேர்க்கடலை
  • 2 தேக்கரண்டி  வெள்ளை அல்லது கறுப்பு எள்
  • சிறிதளவு கருவேப்பிலை
  • புளி எலுமிச்சை பழ அளவு
  • 10 முதல் 12 காய்ந்த மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்

அரைக்க தேவையான பொருட்கள்

  • 1 தேக்கரண்டி வெந்தயம்
  • 2 தேக்கரண்டி வரக்கொத்தமல்லி
  • 3 காய்ந்த மிளகாய்

செய்முறை

1. புளியை ஊறவைத்து  சக்கையைப் பிழிந்து, புளித்தண்ணீரை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2. சாதத்தை வடித்து ஆற வைத்துக் கொள்ளவும்.

3. ஒரு வாணலியை சூடாக்கி அதில் வெந்தயத்தை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

3. பின்னர் கொத்தமல்லியை சேர்த்து லேசாக வறுக்கவும் அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்களுக்கு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

4. வறுத்து வைத்த பொருட்கள் ஆறியதும்  மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

5. ஒரு வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும், கடுகு உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

6. கடுகு வெடித்ததும் கடலை பருப்பு  சேர்க்கவும்.

7. அதனுடன் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

8. பின்னர் வெள்ளை / கருப்பு எள் சேர்த்து கலக்கவும்.

9. அதனுடன் கருவேப்பிலை சேர்க்கவும்.

10. பின்னர் புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்.

11. புளித் நன்கு கொதிக்கும் பொழுது காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.

12. அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

 

13. மூடி வைத்து 8 முதல் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

14. ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்ததும் ஒரு ஸ்பூன் அரைத்து வைத்த புளிசாத பொடியை சேர்க்கவும்.

15. கொடி சேர்த்தவுடன் கலவை கெட்டியாக மாறுவதை காணலாம்.

16. இப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு தேவையான அளவு சாதத்துடன் புளிக்காய்ச்சல் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி மென்மையாக கிளறி விடவும்.

17. சுவையான புளி சாதம் தயார். இந்த புளிசாதம் ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே மூன்று நாள் வரை கெடாமல் இருக்கும்.

Leave a Reply