See this Recipe in English
தலப்பாக்கட்டி பிரியாணி தமிழகத்தின் மிகவும் பாரம்பரியமிக்க உணவு வகை. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தொடங்கி தமிழகம் முழுவதும் பிரபலமானது. இதில் சேர்க்கப்படும் ஜீரக சம்பா அரிசியில் இதற்கு தனி சுவை கிடைக்கும், மற்ற அனைத்து வகையான பிரியாணி களும் பாஸ்மதி அரிசியில் செய்யப்படும். ஆனால் தலப்பாகட்டி பிரியாணி மற்றும் ஆம்பூர் பிரியாணி போன்றவை தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகையான சீரக சம்பா அரிசி. தலப்பாகட்டி பிரியாணி, சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணி ஆகியவை மிகவும் பிரபலம். மிகச்சிறந்த சுவை மற்றும் மணம் கொண்ட தலப்பாக்கட்டி பிரியாணி நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
தலப்பாகட்டி பிரியாணி சுவையாக செய்ய சில குறிப்புகள்
- பிரியாணி சீரக சம்பா அரிசி கொண்டு செய்ய வேண்டும், ஒருவேளை உங்களிடம் சீரகசம்பா அரிசி இல்லை என்றால் நீங்கள் பாஸ்மதி அரிசி பயன்படுத்தலாம்.
- பிராய்லர் கோழி அல்லது நாட்டுக்கோழி இரண்டும் பயன்படுத்தலாம் ஒரு கப் அரிசிக்கு (200 grams) பிராய்லர் கோழி என்றால் 400 கிராம் சிக்கன் சேர்த்துக்கொள்ளலாம், நாட்டுக் கோழியாக இருந்தால் 300 கிராம் சேர்த்துக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும், பெரிய வெங்காயம் சேர்க்கும்போது அசல் சுவை கிடைக்காது.
- எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை கலந்து பயன்படுத்தும்போது சுவை கூடுதலாக இருக்கும்.
- இதே முறையில் நீங்கள் மட்டன் பிரியாணியும் செய்யலாம்.
- பிரஷர் குக்கர் அல்லது மூடி போட்ட பாத்திரம் இரண்டையும் பயன்படுத்தலாம், அரிசி வேகும் பொழுது கண்டிப்பாக குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும்.
- தேவைப்பட்டால், இடையிடையே அரிசி உடையாமல் மெதுவாக கிளறவும்.
இதர அசைவ குருமா வகைகள் –ஐதராபாத் முட்டை பிரியாணி, சிக்கன் பிரியாணி,வெஜிடபிள் பிரியாணி, இறால் தொக்கு, செட்டிநாடு சிக்கன் குழம்பு, முட்டை மசாலா, ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி, முட்டை குழம்பு.
See this Recipe in English
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்
- 1 கப் சீரக சம்பா அரிசி (200 grams)
- 400 கிராம் சிக்கன்
- 200 கிராம் சின்ன வெங்காயம்
- 2 தேக்கரண்டி சமையல் எண்ணை
- 3 தேக்கரண்டி நெய்
- 2 தேக்கரண்டி மிளகாய் தூள் (மிளகாய் மற்றும் மல்லி சம அளவு சேர்த்து அரைத்து)
- 1/4 கப் தயிர்
- 1 தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு
- 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 கைப்பிடி புதினா
- 1 கைப்பிடி கொத்தமல்லி
- தேவையான அளவு உப்பு
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
- 3 லவங்கம்
- 1 துண்டு பட்டை
- 2 ஏலக்காய்
- 1 ஜாதிபத்திரி
- 1 துண்டு இஞ்சி
- 4 பல் பூண்டு
- 2 பச்சை மிளகாய்
செய்முறை
1. 200 கிராம் சீரக சம்பா அரிசியை தண்ணீரில் ஒரு முறை அலசி 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
2. 400 கிராம் பிராய்லர் சிக்கனை கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு உப்பு, ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
3. ஒரு மிக்ஸி ஜாரில் 3 லவங்கம், சிறிய துண்டு பட்டை, 2 ஏலக்காய், 1 ஜாதிபத்திரி, ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 1 துண்டு இஞ்சி, நான்கு பல் பூண்டு, இரண்டு பச்சை மிளகாய், ஆகியவற்றை பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளவும்.
4. தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் .
5. ஒரு அகலமான, அடிகனமான பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.
6. சூடானதும் 200 கிராம் சின்ன வெங்காயத்தை லேசாக நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
7. வெங்காயம் ஓரளவு வதங்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
8. அதனுடன் ஒரு கைப்பிடி அளவு நறுக்கிய புதினா இலைகள் மற்றும் ஒரு கைப்பிடி அளவு நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
9. இப்பொழுது ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து மசாலாவுடன் நன்கு கலக்கவும்.
10. அரிசி எடுக்க பயன்படுத்திய அதே (1) கப் அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
11. இப்பொழுது குக்கரை மூடி இரண்டு விசில் வைக்கவும் அல்லது மூடி வைத்து குறைவான தீயில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
12. சிக்கன் முக்கால் பாகம் வெந்த பின்னர் கால் கப் அளவு தயிர், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, மற்றும் தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
13. இப்பொழுது 2 தேக்கரண்டி மிளகாய்தூள் ( மிளகாய் மற்றும் மல்லி சேர்த்து அரைத்து / 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் மற்றும் 1 தேக்கரண்டி மல்லித்தூள்) சேர்த்து கலக்கவும்.
14. நன்கு கலந்த பின்னர் ஊற வைத்துள்ள சீரக சம்பா அரிசியில் தண்ணீரை வடித்து விட்டு சேர்க்கவும்.
15. பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும் (1 cup சீரகசம்பா = 2.5 cups தண்ணீர்). சிக்கன் வேக வைக்க ஒரு கப் தண்ணீர் சேர்த்து போக மீதமுள்ள ஒன்றரை கப் தண்ணீர் இப்பொழுது பயன்படுத்தலாம்.
16. கடைசியாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.
17. மூடி வைத்து 15 முதல் 20 நிமிடங்களுக்கு குறைவான தீயில் வேக வைக்கவும்.
18. சுவையான சிக்கன் பிரியாணி தயார்.