See this Recipe in English
பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயசம் ஜவ்வரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய் பால், ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் சுவையான பாயாசம். இதனை விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, போன்ற எல்லாவிதமான விசேஷங்களுக்கும் வைத்து இறைவனுக்கு படைக்கலாம். பாசிப்பருப்பு மற்றும் ஜவ்வரிசி ஆகியவற்றின் கூட்டு சுவையில் தேங்காய் பாலுடன் சேர்த்து செய்யும் பொழுது அபாரமாக இருக்கும். வழக்கமான படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு புதிய சுவையுடன் இருக்கும்.
சுவையான பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயசம் செய்ய சில குறிப்புகள்
- பாசிப்பருப்பு பொன்னிறமாகும் வரை வறுத்து பின்னர் செய்யவும்.
- பாசிப்பருப்பு மற்றும் ஜவ்வரிசி இவை இரண்டையும் தனித்தனியே வேக வைத்துக் கொள்ளவும்.
- வெள்ளை நிற மாவு ஜவ்வரிசி பதிலாக நைலான் ஜவ்வரிசி பயன்படுத்திக் கொள்ளலாம்.
- நைலான் ஜவ்வரிசி பயன்படுத்துவதாக இருந்தால் அதனை ஊற வைக்கத் தேவையில்லை நெய்யில் வறுத்து பின்னர் பயன்படுத்தவும்.
- வெல்லம் உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
- பசும்பாலை விட தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் பொழுது இந்த பாயசம் சுவையாக இருக்கும்.
- விருப்பப்பட்டால் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து சிறிதளவு தேங்காய் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளலாம்.
இதர வகைகள்
கோதுமை ரவை பாயசம்
பாதாம் பாயசம்
சிவப்பு அவல் பாயசம்
பருப்பு பாயசம்
அவல் பாயசம்
கடலை பருப்பு பாயசம்
சிறுதானிய பாயசம்
கேரமல் பாயாசம்
தேவையான பொருட்கள்
- ஜவ்வரிசி – ½ கப்
- பாசிப்பருப்பு – ¼ கப்
- வெல்லம் – 1 கப்
- தேங்காய் பால் – 1 கப்
- ஏலக்காய் பொடி – ¼ தேக்கரண்டி
- நெய் – 2 தேக்கரண்டி
- முந்திரிப் பருப்பு – 10
- காய்ந்த திராட்சை – 10
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் அரை கப் ஜவ்வரிசியை கழுவி சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
3. ஒரு பானில் ¼ கப் பாசிப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
4. மிதமான தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பாசிப்பருப்பு வறுத்த பின்னர் அதனை ஒருமுறை கழுவி பிரஷர் குக்கரில் மாற்றி மூன்று விசில் வைத்து வேக வைக்கவும்.
5. பின்னர் ஒரு பேனில் ஒரு கப் வெல்லம் சேர்த்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
6. வெல்லம் கரைந்து ஓரளவு கெட்டியானதும் தனியே எடுத்து வைக்கவும்.
7. ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி வேக வைக்கவும்.
8. மிதமான தீயில் வைத்து கண்ணாடி பதம் வரும் வரை வேக வைக்கவும்.
9. பாசிப்பருப்பு நன்றாக வெந்த பின்னர் தயாராக உள்ள வெல்லத்தை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.
10. அதனை ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். பின்னர் வேக வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
11. பின்னர் 1 கப் கெட்டியான தேங்காய்ப்பால் சேர்த்து குறைவான தீயில் இரண்டு நிமிடங்கள் வைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
12. பின்னர் கால் தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
13. முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளவும்.
14. சுவையான பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயசம் தயார்.