See this Recipe in English
கஸ்டர்ட் சர்பத் கஸ்டர்ட் பவுடர், பால், ஜவ்வரிசி, கடல்பாசி, சப்ஜா விதைகள், ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு சுவைகளுடன் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான மற்றும் சுவையான குளிர்பானமாகும். இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானம் மற்றும் கோடைகாலத்திற்கு ஏற்றது. கோடைகாலத்திற்கு மட்டுமின்றி இப்தார் நோன்பு திறப்பதற்கு இதனை குடிக்கலாம். வெயில் காலங்களில் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரக்கூடிய பானம், இதனை சுலபமான முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
கஸ்டர்ட் சர்பத் பலவிதமான பொருட்களை சேர்த்து செய்வதால் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. சப்ஜா விதைகள் மற்றும் அகர் அகர் போன்றவை உடல் சூட்டை தணிக்க வல்லது. இதனை மில்க்ஷேக் போலமேலே ஐஸ்கிரீம் வைத்தும் கொடுக்கலாம். வெயில் காலம் தவிர திருமண விழாக்கள் மற்றும் வீட்டு விசேஷங்களில் விருந்து சாப்பாட்டுடன் பரிமாறலாம்.
சுவையான கஸ்டர்ட் சர்பத் செய்ய சில குறிப்புகள்
- சப்ஜா விதைகள் எனப்படும் துளசி விதைகள் ஊறியதும் அளவில் பெரியதாகிவிடும், எனவே விருப்பப்பட்ட அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- கடல்பாசி, அகர் அகர் என்றும் கூறப்படுகிறது. இது பவுடர் வடிவிலும் கிடைக்கிறது அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- கடைகளில் கிடைக்கும் ஜெல்லி பவுடரையும் கடல்பாசி க்கு பதிலாக பயன்படுத்தலாம்.
- பார்ப்பதற்கு வண்ணமயமாக இருப்பதற்காக, இருவேறு நிறங்களை பயன்படுத்தி உள்ளேன். விருப்பப்பட்டால் நிறம் சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் ஜெல்லி செய்யலாம்.
- ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்ளலாம் அல்லது ஜவ்வரிசி சேர்க்காமலும் செய்யலாம்.
- கஸ்டர்ட் பவுடரை சொன்ன அளவை விட அதிகமாக சேர்க்கக் கூடாது, அவ்வாறு சேர்த்தால் பால் மிகவும் கெட்டியாகி விட வாய்ப்புள்ளது.
- கஸ்டர்ட் பவுடர் சேர்த்ததும் பாலை குறைவான தீயில் வைத்துக் கிளறவும்.
இதர வகைகள்
கோடை காலத்திற்கு 5 விதமான பானங்கள்
பால் சர்பத்
நன்னாரி சர்பத்
பலுடா
மதுரை ஸ்பேஷல் ஜிகர்தண்டா
குல்பி
See this Recipe in English
தேவையான பொருட்கள்
ஜெல்லி செய்ய தேவையான பொருட்கள்
- கடல் பாசி | அகர் அகர் – 10 கிராம்
- சர்க்கரை – ½ கப் – 100g
- தண்ணீர் – 500ml
- பச்சை மற்றும் சிகப்பு நிறம் (food color) – தேவையான அளவு
இதரப் பொருட்கள்
- சப்ஜா விதைகள் – 2 தேக்கரண்டி
- கஸ்டட் பவுடர் – 2 மேஜை கரண்டி
- பால் – 1 லிட்டர் + 4 மேஜை கரண்டி
- சர்க்கரை – ½ கப்
- பாதாம் – 10
- முந்திரி – 10
- ஜவ்வரிசி – ¼ கப்
- பேரிச்சம்பழம் – 5
செய்முறை
1. ஒரு கப்பில் 2 தேக்கரண்டி சப்ஜா விதை சேர்த்துக் கொள்ளவும்.
2. சிறிதளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
3. ஒரு பவுலில் 10 gram கடல் பாசியை சேர்த்துக் கொள்ளவும்.
4. சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
6. தண்ணீர் சூடானதும், ஊறவைத்துள்ள கடல் பாசியை சேர்த்துக் கொள்ளவும்.
7. அதனுடன் ½ கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
8. கடல் பாசி மற்றும் சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.
9. பின்னர் ஒரு வடிகட்டியில் ஊற்றி வடிகட்டவும்.
10. இரண்டு பாத்திரங்களில் பச்சை மற்றும் சிவப்பு நிறம் எடுத்துக் கொள்ளவும், அதனுடன் தயார் செய்து வைத்துள்ள கலவையை சம அளவில் பிரித்து ஊற்றவும்.
11. ஓரளவு ஆறும் வரை வெளியே வைக்கவும், பின்னர் ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்களுக்கு வைக்கவும்.
12. ஒரு கப்பில் 2 மேஜைக்கரண்டி கஸ்டட் பவுடர் சேர்த்துக்கொள்ளவும்.
13. அதனுடன் 4 மேஜைக்கரண்டி பால் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்.
14. ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால் சேர்த்து காய்ச்சவும்.
15. பால் சூடானதும் அதனுடன் அரை கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
16. அதனுடன் கரைத்து வைத்துள்ள கஸ்டர்ட் பவுடர் சேர்த்துக் கொள்ளவும். குறைவான தீயில் கிளறவும்.
17. பாதாம் மற்றும் முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.
18. பத்து நிமிடங்கள் குறைவான தீயில் கொதிக்க வைத்த பின்னர் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். ஆறியதும் 2 மணிநேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
19. ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
20. அதனுடன் கால் கப் ஜவ்வரிசி சேர்த்து கொள்ளவும்.
21. மிதமான தீயில் வைத்து ஜவ்வரிசி கண்ணாடி பதம் வரும் வரை வேக வைக்கவும்.
22. பின்னர் அதனை வடிகட்டி 2 – 3 முறை தண்ணீரில் அலசவும்.
23. ஜெல்லி தயார் ஆனதும் அதனை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
24. ஒரு கிளாஸில் வேக வைத்த ஜவ்வரிசி சேர்த்து கொள்ளவும், அதனுடன் தேவையான அளவு சப்ஜா விதைகள் சேர்க்கவும். உடன் தயாராக உள்ள ஜெல்லியை சேர்க்கவும். சிறிதளவு பேரிச்சம்பழ துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும்.
25. கஸ்டட் பாலை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும்.
26. சிறிதளவு பொடித்த பாதாம் தூவி பரிமாறவும் சுவையான கஸ்டர்டு சர்பத் தயார்.