See this Recipe in English
முட்டை மசாலா சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, மட்டுமல்லாது வெறுமனே வெள்ளை சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும். அதே சமயத்தில் பிரியாணி அல்லது குஸ்கா உடன் வைத்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த முட்டை மசாலாவை மிகவும் சுலபமாக 15 – 20 நிமிடங்களுக்குள்ளாகவே செய்து முடிக்கலாம். நாள்தோறும் ஒரு முட்டை எடுத்துக் கொள்வது உடல்நலத்துக்கு ஏற்றது என்பதை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள், எனவே இதுபோன்று சுவையான முட்டை மசாலாவை செய்து அன்றாட உணவுகளுடன் எடுத்து சுவையுடன் ஆரோக்கியமும் பெற்று நலமுடன் வாழவும்.
சுவையான முட்டை மசாலா செய்ய சில குறிப்புகள்
- முட்டையை வேக வைத்த பின்னர் அதனை ஐஸ் தண்ணீரில்போட்டு வைத்தால்தோல் உரிப்பதற்கு சுலபமாக இருக்கும்.
- மசாலா பொருட்களை வறுத்து அரைக்கும் பொழுது மீதமுள்ளவற்றை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்தால் நீண்ட நாட்களுக்கு வாசனையுடன் இருக்கும், தேவைப்படும் பொழுது மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- மசாலா பொருட்களை வறுக்கும்போது மிதமான தீயில் அல்லது குறைவான தீயில் வைத்து வறுக்கவும் தீ அதிகமாக இருந்தால் கரிந்துவிடும் வாய்ப்புள்ளது.
- விரைவாக செய்வதற்கு மசாலா பொருட்களை வறுத்து அரைக்காமல் கரம் மசாலா 1/2 தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளலாம்.
- இஞ்சி பூண்டு விழுது அரைக்கும் பொழுது அதனுடன் சிறிதளவு பச்சை மிளகாய் அரைத்து சேர்த்தால் மசாலா காரமாகவும் சுவையாகவும் இருக்கும்.
- கொத்தமல்லி தழை சேர்க்கும் பொழுது அதனுடன் சிறிதளவு புதினாவையும் நறுக்கி சேர்த்துக் கொண்டால் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.
இதர வகைகள்
முட்டை மசாலா
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
பன்னீர் கிரேவி
ஐதராபாத் முட்டை பிரியாணி
முட்டை ஃப்ரைட் ரைஸ்
முட்டை குழம்பு
பன்னீர் பட்டர் மசாலா
சிக்கன் சால்னா
See this Recipe in English
தேவையான பொருட்கள்
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
- மிளகு – 1 தேக்கரண்டி
- சோம்பு – ½ தேக்கரண்டி
- சீரகம் – ½ தேக்கரண்டி
- மிளகாய் – 6
- கொத்தமல்லி விதைகள் – 2 தேக்கரண்டி
இதர பொருட்கள்
- அவித்த முட்டை – 5
- சமையல் எண்ணெய் – 3 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 1
- தக்காளி – 1
- இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை
1. ஐந்து முட்டைகளை வேக வைத்து தோலுரித்து நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் 1 தேக்கரண்டி மிளகு, 1/2 தேக்கரண்டி சோம்பு, 1/2 தேக்கரண்டி சீரகம், 2 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். மிதமான தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
3. அதனுடன் 6 காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
4. ஓரளவு வறுபட்ட பின்னர் அதனை ஆற வைக்கவும்.
5. மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
6. ஒரு அகலமான வாணலியில் 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
7. எண்ணெய் சூடானதும் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும். வெங்காயம் ஓரளவு வதங்கிய பின்னர் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
8. இஞ்சி பூண்டு பச்சை வாசனை போன பின்னர் கொத்தமல்லி தழைகளை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
9. பின்னர் ஒரு தக்காளியை மிக்ஸியில் அரைத்துச் சேர்க்கவும்.
10. அதனுடன் வறுத்து அரைத்த மசாலா தூள் 2 தேக்கரண்டி சேர்க்கவும்.
11. பின்னர் 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
12. அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
13. ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்த பின்னர் தயாராக உள்ள முட்டைகளை சேர்த்து குறைவான தீயில் வைத்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
14. சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைக்கவும்.
15. சுவையான முட்டை மசாலா தயார்.