See this Recipe in English
முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக் முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக் மைதா மாவு, சர்க்கரை, கோகோ பவுடர், சமையல் எண்ணெய், தயிர் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இதனை ஓவனிலும் செய்யலாம் அல்லது ஓவன் இல்லாமல் பாத்திரத்திலும் செய்யலாம், இரண்டு செய்முறைகளையும் கீழே குறிப்பிட்டுள்ளேன். சாக்லேட் கேக், மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு மிகச் சிறந்த சிற்றுண்டி. வீட்டிலேயே சுத்தமான, சுகாதாரமான முறையில் செய்து கொடுக்கலாம். சுவையான சாக்லேட் கப் கேக் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான சாக்லேட் கப் கேக் செய்ய சில குறிப்புகள்
- மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு சேர்த்தும் இதே முறையில் செய்யலாம்.
- சமையல் எண்ணெய் சேர்க்கும் பொழுது நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் தவிர்த்து வாசனை வராத எந்த எண்ணெய் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
- சமையல் எண்ணெய் சேர்ப்பதற்கு பதிலாக வெண்ணெய் சேர்த்தும் இதே முறையில் கேக் செய்யலாம்.
- சர்க்கரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
- தயிர் பயன்படுத்தும்போது கெட்டியான தயிர் இல்லாமல் ஓரளவுக்கு நீர்த்துள்ள தயிர் பயன்படுத்திக் கொள்ளவும்.
இதர கேக் வகைகள் – முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக், ஹனி கேக், ரவா கேக் , முட்டை சேர்க்காத சாக்லேட் கேக், ஓரியோ கேக், ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி? ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக், பாவ் பன், பால் பன்
தேவையான பொருட்கள்
- மைதா மாவு – ¾ கப் – 100g
- சர்க்கரை – ½ கப் – 100g
- பால் – ⅓ கப்
- சமையல் எண்ணெய் – ¼ கப்
- பேக்கிங் சோடா – ½ தேக்கரண்டி
- காபி டிகாஷன் – 2 தேக்கரண்டி
- பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
- உப்பு – ¼ தேக்கரண்டி
- வெண்ணிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
- தயிர் – ⅓ கப்
- கொக்கோ பவுடர் – ¼ கப்
செய்முறை
1. ஒரு பெரிய பௌலில் ⅓ கப் பால் சேர்த்துக் கொள்ளவும், அதனுடன் ¼ கப் சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனை ஒரு விஸ்க் வைத்து கலந்து கொள்ளவும்.
3. அதனுடன் 2 தேக்கரண்டி காபி டிகாஷன், 1 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும்.
4. ⅓ கப் தயிர், ½ கப் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
5. சர்க்கரை கரையும் வரை நன்றாக கலந்து கொள்ளவும்.
6. பின்னர் பௌல் மீது ஒரு சல்லடை அல்லது வடிகட்டி வைத்துக் கொள்ளவும். அதில் ¾ கப் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்.
7. ¼ கப் கொக்கோ பவுடர், 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.
8. 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா, ¼ தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை சேர்த்து சலித்துக் கொள்ளவும்.
9. அதனை நன்றாக கலந்து கொள்ளவும்.
10. கரண்டியில் எடுத்து மாவை ஊற்றும் பொழுது ரிப்பன் போல விட வேண்டும், அந்த பக்குவத்திற்கு மாவை கலந்து கொள்ளவும்.
11. இப்பொழுது கப் கேக் டின்னில் லைனர் வைத்து கொள்ளவும்.
12. அதில் பாதி அளவு மாவு நிரப்பிக் கொள்ளவும்.
13. ஓவனை 360 டிகிரி பாரன்ஹீட் / 180 டிகிரி செல்சியஸ் preheat செய்து கொள்ளவும், பின்னர் தயாராக உள்ள கேக் டின்னை உள்ளே வைக்கவும். 15 முதல் 18 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
14. கூலிங் ரேக்கில் வைத்து ஆறவைக்கவும்.
15. பாத்திரத்தில் செய்வதற்கு ஒரு சிறிய கப்பில் வெண்ணெய் / எண்ணெய் தடவி அதன்மீது மைதா மாவு தூவி கொள்ளவும்.
16. பின்னர் கப்பில் பாதி அளவு மாவை ஊற்றவும்.
17. ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மூடி வைத்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் சூடாக்கவும்.
18. பாத்திரம் சூடானதும் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன் மீது ஒரு சிறிய தட்டு வைக்கவும்.
19. மாவு நிரப்பிய கப்புகளை அதனுள் வைக்கவும்.
20. மூடி வைத்து மிதமான தீயில் 20 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
21. 20 நிமிடங்களுக்குப் பின்னர் ஒரு குச்சி வைத்துக் குத்தி பார்க்கவும் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் தயாராக உள்ளது.
22. சுவையான சாக்லேட் கேக் தயார்.