See this Recipe in English
எள்ளுருண்டை விநாயகர் சதுர்த்தி மட்டுமன்றி மற்ற நேரங்களிலும் செய்யக்கூடிய ஒரு சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சிற்றுண்டி வகை. இதனை மூன்றே மூன்று பொருட்கள் வைத்து மிகவும் சுலபமான முறையில் 10 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யலாம். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு படைக்க கூடிய பல விதமான பலகாரங்கள் முக்கியமானது எள்ளுருண்டை.
எள்ளு உருண்டை மற்றும் எள்ளு கொழுக்கட்டை ஆகியவை விநாயகர் சதுர்த்தி அன்று வைத்துப் படைப்பது விசேஷமானது. அது தவிர பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு இதனை உடனடியாக செய்து கொடுக்கலாம் பலவிதமான ஆரோக்கியம் நிறைந்த, சுவையான, எள்ளு உருண்டை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான எள்ளுருண்டை செய்ய சில குறிப்புகள்
- எள்ளுருண்டை செய்ய வெள்ளை மற்றும் கருப்பு எள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
- நாட்டுச் சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- வேர்க்கடலை சேர்க்காமலும் இதே முறையில் செய்யலாம்.
- எள்ளு வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கும்போது கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும், அதிக நேரம் அரைத்தால் எண்ணெய் கசிந்தது போலிருக்கும்.
- ஏலக்காய் பொடி சேர்க்காமலே எள்ளுருண்டை வாசனையாக இருக்கும், விருப்பப்பட்டால் ஏலக்காய் பொடிசேர்த்துக்கொள்ளலாம்.
இதர வகைகள்
ராகி பிடி கொழுக்கட்டை
இனிப்பு பிடி கொழுக்கட்டை
தேங்காய் பூரண கொழுக்கட்டை
உளுந்து பூரண கொழுக்கட்டை
கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை
எள்ளு பூரண கொழுக்கட்டை
பால் கொழுக்கட்டை
பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயசம்
பாதாம் பாயசம்
தேவையான பொருட்கள்
- எள்ளு – ½ கப்
- வேர்க்கடலை – ¼ கப்
- நாட்டுச் சர்க்கரை – ¼ கப்
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 1/2 கப் எள்ளு சேர்த்து படபடவென பொரியும் வரை வறுத்து கொள்ளவும்.
2. பின்னர் அதனை தனியே எடுத்து வைக்கவும்.
3. பின்னர் 1/4 கப் வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும். லேசாக சிவந்து வரும் வரை வறுக்கவும்.
4. பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.
5. மிக்ஸி ஜாரில் வறுத்து ஆற வைத்துள்ள எள்ளு மற்றும் வேர்க்கடலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
6. அதனுடன் கால் கப் நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
7. இப்பொழுது அரைத்து வைத்துள்ள அவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
8. சுவையான எள்ளு உருண்டை தயார்.