பட்டாணி மசாலா சுண்டல் தெருவோரக் கடைகளில் கிடைக்கும் சுவையான மாலை நேர சிற்றுண்டி, இதனை சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம். மற்ற தின்பண்டங்களை போன்று எண்ணெயில் பொரிக்க தேவையில்லை. அதேசமயத்தில் சுவையும் அலாதியாக இருக்கும். பட்டாணி மசாலா சுண்டல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த சிற்றுண்டி.
சுவையான பட்டாணி மசாலா சுண்டல் செய்ய சில குறிப்புகள்
- பட்டாணி மசாலா சுண்டல் செய்ய வெள்ளை பட்டாணி பயன்படுத்தவும் இதற்கு பச்சைபட்டாணி பயன்படுத்தக்கூடாது.
- 8 முதல் 10 மணி நேரம் வரை ஊறவேண்டும், 8 மணிநேரத்திற்கு குறைவாக ஊறினால் சரியாக வேகாது.
- இதே முறையில் நீங்கள் வெள்ளை பட்டாணிக்கு பதிலாக கொண்டைக்கடலை பயன்படுத்திக்கொள்ளலாம்.
- பட்டாணியை வேக வைக்கும் பொழுது மென்மையாக பஞ்சு போன்று வேக வைக்கவும், அல்லது மசாலா சுண்டல் சுவையும் இருக்காது செரிமானமும் ஆகாது.
- பச்சை மிளகாய் மற்றும் மிளகாய்த் தூள் ஆகியவற்றை உங்கள் காரத்திற்கு ஏற்றாற்போல் சேர்த்துக் கொள்ளலாம்.
இதர சிற்றுண்டி வகைகள் – மிக்சர் செய்வது எப்படி, பிரட் சில்லி, பன்னீர் பர்கர், காராபூந்தி, சில்லி மசாலா இட்லி, மெது பக்கோடா, மசாலா பிரட் டோஸ்ட், செட்டிநாடு ஸ்பெஷல் கார சீயம், பாதாம் பால் பவுடர், கேழ்வரகு புட்டு, சோயா கட்லட், பாசிப்பருப்பு ஃப்ரை
தேவையான பொருட்கள்
- வெள்ளை பட்டாணி – 1 cup / 250 கிராம்
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- சமையல் எண்ணெய் – 2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
- இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- பச்சைமிளகாய் – 3
- கொத்தமல்லி – சிறிதளவு
- தக்காளி – 1 விழுதாக அரைத்து
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
1. பட்டாணி மசாலா செய்வதற்கு ஒரு கப் பட்டாணி எடுத்துக் கொள்ளவும்.
2. அதனை ஒரு முறை தண்ணீரில் கழுவி 8 முதல் 10 மணி நேரம் ஊற வைக்கவும்.
3. நன்கு ஊறிய பின்னர், ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து பிரஷர் குக்கரில் சேர்த்துக் கொள்ளவும்.
4. அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
5. குக்கரை மூடி 4 முதல் 5 விசில் வைத்து வேக வைக்கவும்.
6. பட்டாணி மென்மையாக வெந்த பிறகு தனியே எடுத்து வைக்கவும்.
7. இப்பொழுது ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
8. எண்ணெய் சூடானதும் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
9. வெங்காயம் கண்ணாடி போல் ஆகும் வரை வதக்கிக்கொள்ளவும்.
10. வதங்கிய பின்னர் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு, மற்றும் 3 பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
11. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
12. பின்னர் ஒரு பெரிய தக்காளியை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
13. தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
14. அதனுடன் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மல்லிதூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
15. நன்கு கலந்த பின்னர் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவைக்கவும்.
16. பின்னர் வேக வைத்து வைத்துள்ள பட்டாணியை சேர்த்து கிளறவும்.
17. ஒன்று முதல் ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
18. இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு கொதிக்கவைத்து அடுப்பை அணைத்து விடவும்.
19. இப்பொழுது பட்டாணி மசாலா தேவையான அளவு பவுலில் எடுத்துக்கொள்ளலாம். அதன் மீது சிறிதளவு பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், கொத்தமல்லி போன்றவற்றை தூவிக் கொள்ளலாம் அல்லது உங்களுக்கு விருப்பமானவற்றை துவி பரிமாறலாம். சுவையான பட்டாணி மசாலா தயார்.