Kara Boondi in Tamil | காராபூந்தி | Diwali Snack in Tamil | How to make kara boondi

See this Recipe in English

மொறுமொறுப்பான காராபூந்தி தீபாவளிக்கு அவசியம் செய்ய வேண்டிய சுவையான பலகாரம்.  இதனை மிகவும் சுலபமான முறையில் 1/2 மணி நேரத்திற்குள்ளாகவே செய்யலாம்.  இது கடலை மாவு, வேர்க்கடலை, கருவேப்பிலை, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  தீபாவளி பலகாரம் என்றாலும் இதனை செய்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்தால் ஒரு மாதம் வரை மொறுமொறுப்பாகவும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.  தீபாவளி தவிர மாலை நேரங்களில் காப்பி, டீயுடன் சுவையாக இருக்கும்.  சுவையான மொறுமொறுப்பான கார பூந்தி இந்த தீபாவளிக்கு நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 சுவையான கார பூந்தி செய்ய சில குறிப்புகள்

  • பூந்தி  செய்வதற்கு கடலை மாவு கலக்கும் பொழுது தோசை மாவு பக்குவத்திற்கு கலந்து கொள்ளவும்.
  • மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் பூந்தி களும் கெட்டியாக இருக்கும்,  மாவு நீர்த்து இருந்தால் பூந்தி எண்ணெயில் கரைந்துவிடும், எனவே சரியான பக்குவத்திற்கு மாவை கலந்து கொள்ளவும்.
  • அவசியம் சமையல் சோடா சேர்த்து செய்யவும், சமையல் சோடா சேர்க்காமல் பூந்தி முத்து முத்தாக வராது.
  • பூந்தி பொரிக்கும் பொழுது மிதமான  தீயை காட்டிலும் சற்றுக் கூடுதலாக வைத்துக் கொள்ளவும்,  பூந்தியை பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
  • வேர்கடலை கறிவேப்பிலையுடன் நீங்கள் விருப்பப்பட்டால் சிறிதளவு முந்திரிப்பருப்பு பிஸ்தா போன்றவற்றையும் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.
  • உப்பு மற்றும் காரம் ஆகியவை உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
  • காராபூந்தி தயார் செய்து அதனை ஆறவிட்டு ஒரு காற்றுப்புகாத டப்பாவில் வைத்தால் ஒரு மாதம் வரை மொறுமொறுப்பாக/கெட்டுப் போகாமல் இருக்கும்.

இதர தீபாவளி பலகாரங்கள் – பொட்டுக்கடலை முறுக்குதேங்காய் பால் முறுக்கு, மெது பக்கோடா, ரிப்பன் பக்கோடா,  தட்டை முறுக்கு, முறுக்கு.

இதர தீபாவளி இனிப்பு வகைகள் – ரவா லட்டு ,மோட்டிச்சூர் லட்டு,பாசிப்பருப்பு உருண்டை, பூந்திலட்டு, ரோஸ் பர்பி , குலாப் ஜாமுன், கோதுமை குலாப் ஜாமுன்கோதுமை அல்வா,  பாதாம் அல்வா, அசோகா அல்வா, திருநெல்வேலி அல்வா,   பால்கோவா, இனிப்பு காஜா, சாக்லேட் பர்ஃபி,

 

 

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு – 1 கப் – 100g
  • அரிசி மாவு – 2 தேக்கரண்டி
  • உப்பு –   தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – ¼  தேக்கரண்டி 
  • சமையல் சோடா – 1   சிட்டிகை 
  • பெருங்காயத் தூள் – ¼  தேக்கரண்டி
  • வேர்க்கடலை – ¼ கப்
  • கருவேப்பிலை –  சிறிதளவு
  • மிளகாய்த்தூள் – ½  தேக்கரண்டி
  • சமையல் எண்ணெய் –  பொரிக்க தேவையான அளவு 

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில்  1 கப் கடலை மாவு சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன் 2 தேக்கரண்டி அரிசி மாவு, தேவையான அளவு உப்பு,  1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

 2. அதனுடன் 1 சிட்டிகை சமையல் சோடா சேர்த்துக் கொள்ளவும்.

3. ஒருமுறை கலந்த பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.

4. பின்னர் 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

5. அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பக்குவத்திற்கு கலந்து கொள்ளவும்.

6. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் விட சற்று கூடுதலாக வைத்து சூடாக்கவும். ஒரு  பூந்தி  கரண்டி அல்லது  அரி கரண்டியில் சிறிதளவு மாவை ஊற்றி தேய்க்கவும்.

7. பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.

 8. பின்னர் எண்ணெயை வடித்து தனியே வைக்கவும்.

 9. பின்னர் 1/4 கப் வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் வைத்து பொரிக்கவும்.

 10. பொன்நிறமாக/ மொறுமொறுப்பாக பொறித்த பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

 11. அடுப்பை அணைத்து விட்டு சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து பொரிக்கவும்.

12. ஒரு பவுலில்,  தயார் செய்து வைத்துள்ள பூந்தி,  வேர்க்கடலை,  கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

13. அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

 14. பின்னர் தேவையான அளவு மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

15.  சுவையான மொறுமொறு காராபூந்தி தயார். 

Leave a Reply