ரசகுல்லா பெங்காலியில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இனிப்பு வகை, இது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ் பெற்றது. இதற்கு அதிக பொருட்கள் தேவை இல்லை. பால், சர்க்கரை, மற்றும் எலுமிச்சை பழம் ஆகியவை மட்டும் போதும். ரோஸ்மில்க் ரசகுல்லா சாதாரண ரசகுல்லா வில் இருந்து சற்று மாறுபட்டது. பாலில் ரோஸ் சிரப் கலந்து அதற்குப் பின்னர் ரசகுல்லா செய்ய வேண்டும். ரோஸ் சிரப் இன் வாசனை மற்றும் ரசகுல்லாவின் சுவையும் இணைந்து இதன் சுவை அபாரமாக இருக்கும்.
சுவையான ரோஸ் ரசகுல்லா செய்ய சில குறிப்புகள்
- ரசகுல்லா செய்வதற்கு முழு கொழுப்பு சத்துள்ள பால் பயன்படுத்தவும்.
- பால் தெரிவதற்கு எலுமிச்சை பழம் அல்லது வினிகர் பயன்படுத்தலாம்.
- பன்னீர் எடுத்த பின்னர் 10 முதல் 12 நிமிடங்களுக்கு பிசைந்துகொள்ளவும்.
- சர்க்கரை தண்ணீர் செய்வதற்கு ஒரு கப் அளவு சர்க்கரை பயன்படுத்தியுள்ளேன், விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரையை கூடவே அல்லது குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்.
- பிரஷர் குக்கரில் சேர்த்து செய்தால் மூன்று விசில் வைத்தால் போதும், மூடி வைத்து செய்வதாக இருந்தால் 15 முதல் 20 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவைக்கவும்.
- ஏலக்காய் பொடி பதிலாக ரோஸ் எஸ்என்ஸ் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- 2 லிட்டர் பாலில் 12 முதல் 15 ரசகுலா வரை செய்யலாம்.
- ரோஸ் சிரப் சேர்க்காமலும் வழக்கமான ரசகுல்லா இதே முறையில் செய்யலாம்.
இதர இனிப்பு வகைகள் – மால்புவா, ரசமலாய், பாதாம் பாயசம், பால் சர்பத், கோதுமை அல்வா, பால் பவுடர் குலாப் ஜாமுன், சாக்லேட் பர்ஃபி, கேழ்வரகு புட்டு, ஏலக்காய் பர்ஃபி.
ரசகுல்லா செய்ய தேவையான பொருட்கள்
- பால் – 2 லிட்டர்
- ரோஸ் சிரப் – 1/2 கப் (125 ml)
- வினிகர் அல்லது எலுமிச்சை பழச்சாறு – 3 தேக்கரண்டி
- சர்க்கரை – 1 கப்+ 2 தேக்கரண்டி
- மைதா மாவு – 1 தேக்கரண்டி
- ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் பால் சேர்த்துக் கொள்ளவும்.
2. பால் சூடானதும் அதில் அரை கப் ரோஸ் சிரப் சேர்த்து கலக்கவும்.
3. நன்கு கலந்த பின்னர் 3 தேக்கரண்டி வினிகர் சேர்த்துக் கலக்கவும்.
4. இப்போது பால் திரிந்து வருவதை காணலாம்.
5. பால் முற்றிலுமாக திரிந்த பின்னர் ஒரு வடிகட்டி மீது ஒரு துணி போட்டு அதன் மீது திரிந்த பாலை ஊற்றவும்.
6. தண்ணீரை சுத்தமாக வடிகட்டிய பின்னர் கட்டி வைத்து 15 நிமிடங்களுக்கு தொங்க விடவும்.
7. இப்பொழுது ரோஸ் பன்னீர் தயாராக உள்ளது.
8. அதனுடன் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் ஒரு தேக்கரண்டி மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்.
9. 10 முதல் 12 நிமிடங்களுக்கு பிசைந்து கொள்ளவும் அல்லது மாவு ஆகும்வரை பிசைந்து கொள்ளவும்.
10. அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
11. ஒரு பிரஷர் குக்கரில் ஒரு கப் அளவு சர்க்கரை சேர்க்கவும் அதனுடன் அரை தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
12. நான்கு கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
13. சர்க்கரை நன்கு கரைந்து பின்னர் கொதிக்க வைக்கவும்.
14. இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள ரோஸ் ரசகுல்லா ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
15. மூடி வைத்து மூன்று விசில் வைக்கவும்.
16. பிரஷர் ரிலீசானதும் குக்கரை திறக்கவும்.
17. இப்பொழுது ரசகுல்லா பெரிதாக இருப்பதைக் காணலாம். இரண்டு மணி நேரங்களுக்கு சர்க்கரை தண்ணீரில் ஊற வைக்கவும்.
18. சுவையான ரோஸ் ரசகுல்லா தயார்.