Chocolate Burfi in Tamil | சாக்லேட் பர்ஃபி | Two layer Chocolate Burfi | Double Layer Chocolate Burfi

See this Recipe in English

சாக்லேட் பர்பி 10 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு சுவையான இனிப்பு வகை.  பொதுவாக பர்பி என்பது பால்கோவா,  கடலை மாவு,  ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும்.  பாரம்பரிய முறையில் செய்யப்படும் இனிப்பு வகைகள் பால் பவுடர் பயன்படுத்தி செய்யப்படுவதில்லை,  ஆனால் தற்போதைய காலகட்டத்தில் எல்லா கடைகளிலும் பால் பவுடர் கொண்டு செய்யப்படும் விதவிதமான இனிப்பு வகைகள் கிடைக்கின்றன.  பால் பவுடர் சேர்ப்பதற்கு பதிலாக பால்கோவா சேர்த்தும் இதே முறையில் சாக்லேட் பர்ஃபி செய்யலாம். 

சாக்லேட் பர்பி பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அதே சமயத்தில் சாப்பிடுவதற்கும் இரு விதமான சுவைகளில் இருப்பதற்காக பால்கோவா சுவையில் ஒரு அடுக்கும் அதிலேயே சாக்லேட் மனத்துடன் இன்னொரு அடுக்கும் சேர்த்து இரண்டு அடுக்கு சாக்லேட் பர்ஃபி செய்து உள்ளேன் நீங்கள் இதே முறையில் செய்யலாம் அல்லது முழுவதிலும் சாக்லேட் சேர்த்தும் செய்யலாம்.  சுவையான சாக்லேட் பர்ஃபி இந்த தீபாவளிக்கு நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 சுவையான சாக்லேட் பர்ப்பி செய்ய சில குறிப்புகள்

  • பர்பி செய்வதற்கு  தரமான  பால் பவுடர்/ பால்கோவா  மற்றும் கொக்கோ பவுடர் பயன்படுத்தவும்.
  • சர்க்கரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
  • ஏலக்காய் பொடி சேர்ப்பது விருப்பத்திற்கு உட்பட்டது.
  • கொக்கோ பவுடர் சேர்த்தவுடன் கெட்டியாகும் வாய்ப்புள்ளது தேவைப்பட்டால் சிறிதளவு பால் அல்லது நெய்யை ஊற்றி கலந்து கொள்ளலாம்.
  • பால் பவுடர் சேர்த்து செய்வதால் மிகவும் குறைவான தீயில் வைத்து கிளறவும்.
  • பால் சீக்கிரம் கெட்டுவிடும் தன்மை உடையது என்பதால் ஒரு நாளுக்கு மேல் பயன்படுத்துவதாக இருந்தால் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தவும். 

இதர தீபாவளி பலகாரங்கள் – பொட்டுக்கடலை முறுக்குதேங்காய் பால் முறுக்கு, மெது பக்கோடா, ரிப்பன் பக்கோடா,  தட்டை முறுக்கு,  பூந்திலட்டு, முறுக்கு, சாக்லேட் பர்ஃபி,  குலாப் ஜாமுன்,  இனிப்பு காஜா, ரவா லட்டு, கோதுமை குலாப் ஜாமுன்,  பால்கோவா

 

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

  • நெய் – ¼  கப் – 55g
  • பால் – ½ கப் – 125ml
  • பால் பவுடர் – 2 கப் – 200g
  • சர்க்கரை (  பொடித்தது) – ⅓ கப் – 65g
  • ஏலக்காய் பொடி – ¼  தேக்கரண்டி
  • கொக்கோ பவுடர் – 2  மேஜைக்கரண்டி 

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் ¼ கப் நெய் சேர்த்துக் கொள்ளவும்.

2. நெய் உருகியதும் ½ கப்  ஏற்கனவே காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்துக் கொள்ளவும்.

3. பால் சூடானதும் 1 கப் பால் பவுடர் சேர்த்துக் கிளறவும்.

4. கட்டிகளில்லாமல் கிளறிய பின்னர் மீண்டும் 1 கப் பால் பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.

 5. நன்றாக கிளறி ஓரளவு கெட்டியானதும் ⅓  கப் பொடித்த சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

6. அதனுடன் 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

7. ஓரளவு  கெட்டியாகி  ஓரங்களில் ஒட்டாமல் வந்ததும்,  கைகளால் உருட்டி பார்க்கவும்.

8. பால்கோவா உருண்டை ஒட்டாமல் வந்தால் தயாராகிவிட்டது,   ஒருவேளை ஒட்டியிருந்தால் இன்னும் சற்று நேரம் கிளறவும்.

9. ஒரு பாத்திரத்தில் நெய் தடவி தயார் செய்துள்ள பால் கோவாவில் பாதியை மட்டும் அதில் வைத்து கரண்டியால் ஷேப் (shape) செய்யவும்.

10. மீதமுள்ள பால் கோவாவில் 2 மேஜைக்கரண்டி கொக்கோ பவுடர் (cocoa powder) சேர்த்துக் கொள்ளவும்.

 

11. கட்டிகளில்லாமல் கிளறிய பின்னர் கீழே உள்ள லேயரின் (layer) மேல் இதனை வைக்கவும்.

 

 

12. பின்னர் கரண்டியால் ஷேப் செய்யவும்.

 

13. மூன்று மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.

14. மூன்று மணி நேரத்திற்குப் பிறகு விருப்பப்பட்ட வடிவில் வெட்டிக் கொள்ளலாம்.

 15. சுவையான சாக்லேட் பர்ஃபி தயார். 

Leave a Reply