See this Recipe in English
சாம்பார் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டின் பாரம்பரிய மிக்க உணவு வகை. துவரம் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சாம்பார். எல்லாவிதமான டிபன் வகைகளுடனும் சுவையாக இருக்கும். இட்லி, தோசை, பொங்கல், உப்புமா, வடை ஆகியவற்றுடன் பரிமாறப்படுகிறது. அது தவிர சாம்பாரில் குட்டி குட்டி இட்லிகளை ஊறவைத்து இட்லி சாம்பார் செய்யப்படுகிறது இதன் சுவை அலாதியாக இருக்கும்.
சாம்பாருக்கு சுவை கூட்டுவது அதனுடன் சேர்க்கப்படும் சாம்பார் பவுடர். சாம்பார் பொடி பல விதமான முறைகளில் செய்யப்படுகிறது. சாம்பார் பொடியின் தரம் மற்றும் அளவைப் பொறுத்து சாம்பாரின் சுவை மாறுபடும். இந்த பதிவில் மிகவும் விரைவாக 30 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யக்கூடிய சாம்பாரை பகிர்ந்துள்ளேன். இட்லி அல்லது தோசை செய்யும் நேரத்திலேயே விரைவாக சாம்பார் செய்து விடலாம்.
சுவையான இட்லி சாம்பார் செய்ய சில குறிப்புகள்
- துவரம்பருப்பை வேக வைக்கும்போது அதனுடன் ஒரு பல் பூண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து மென்மையாக வேக வைத்துக் கொள்ளவும்.
- பருப்பு வேக வைக்கும் போது 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொண்டால் பருப்பு குக்கரில் இருந்து பொங்கி வராமல் இருக்கும்.
- சாம்பார் செய்வதற்கு பெரிய வெங்காயம் பயன்படுத்துவதற்கு பதிலாக சின்ன வெங்காயம் பயன்படுத்தும் பொழுது அதன் பாரம்பரிய சுவையும் மணமும் இருக்கும்.
- பச்சை மிளகாய் மற்றும் சாம்பார் தூள் ஆகியவற்றை உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
- கேரட் மற்றும் உருளைகிழங்கு தவிர்த்து, விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
- கத்திரிக்காய், முருங்கைக்காய், மஞ்சள் பூசணி, வெள்ளை பூசணி ஆகியவை சேர்க்கலாம் அல்லது தக்காளி சேர்த்து தக்காளி சாம்பார் ஆகவும் செய்யலாம்.
இதர வகைகள்
கொத்தமல்லி சட்னி
கத்திரிக்காய் சட்னி
ஆந்திரா ஸ்டைல் பருப்பு இட்லி பொடி
வேர்கடலை இட்லி பொடி
பூண்டு இட்லி பொடி
இட்லி மிளகாய் பொடி
பூண்டு தக்காளி தொக்கு
கமகமக்கும் புதினா சட்னி
தேவையான பொருட்கள்
பருப்பு வேகவைக்க தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு – ¼ கப்
- பூண்டு பல் – 1
- மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
- பெருங்காயத் தூள் – சிறிதளவு
சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்
- சமையல் எண்ணெய் – 2 தேக்கரண்டி
- கடுகு – ½ தேக்கரண்டி
- கருவேப்பிலை – சிறிது
- சின்ன வெங்காயம் – 10
- பச்சை மிளகாய் – 3
- உருளைக்கிழங்கு – 2
- கேரட் – 2
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
- சாம்பார் தூள் – 2 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு
செய்முறை
1. மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைப் பயன்படுத்தி பிரஷர் குக்கரில் 3-4 விசில் வைத்து பருப்பை மென்மையாக வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் 1/2 தேக்கரண்டி கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்க்கவும்.
2. கடுகு பொரிந்ததும் சிறிதளவு சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
3. அதனுடன் கேரட், உருளைக்கிழங்கு அல்லது விருப்பமான காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
4. காய்கறிகள் வதங்கிய பின்னர் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
5. காய்கறிகள் ஓரளவு வெந்த பின்னர், சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு, இரண்டு தேக்கரண்டி சாம்பார் தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து மிளகாய் தூள் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
6. பின்னர் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து கலக்கவும்.
7. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து மேலும் 5 முதல் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
8. சுவையான இட்லி சாம்பார் தயார்.