Crispy Vada in Tamil | மொரு மொரு வடை | Rice vada recipe in Tamil | Vadai without dal

மொரு மொரு வடை பொதுவாக வடை உளுத்தம் பருப்பு அல்லது கடலைப் பருப்பு கொண்டு செய்யப்படும், உளுந்து வைத்து செய்யப்படுவது மெதுவடை. கடலை பருப்பு வைத்து செய்யப்படுவது மசால்வடை. வடை செய்வதற்கு பருப்பை ஊற வைத்து மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் அரைக்கவேண்டும். அதற்கு ஒரு மணி நேரமாவது தேவைப்படும் ஆனால் இந்த வடை செய்வதற்கு 10 நிமிடம் போதும், மேலும் உளுந்து  வேண்டாம், ஊறவைக்க வேண்டாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் பத்தே நிமிடங்களில் வடை செய்யலாம்.

மொரு மொரு  வடை செய்வதற்கு சில குறிப்புகள்

  • வடித்து ஆற வைத்த சாதத்தை பயன்படுத்தவேண்டும்,  சூடான சாதமோ அல்லது தண்ணீர் ஊற்றி வைத்த சாதமோ பயன்படுத்தவேண்டாம்.
  • ரவை மற்றும் அரிசி மாவு போன்றவை சேர்க்கும் பொழுது வடை நன்கு மொறுமொறுப்பாக இருக்கும்.
  • வடையை பொரிக்கும் பொழுது எண்ணெயில் சேர்த்து இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு ஒவ்வொரு பக்கமும் வேக வைக்கவும்.
  • வெங்காயம், கருவேப்பிலை தவிர இதில் மிளகு, சீரகம் போன்றவற்றையும் சேர்த்து வடை செய்யலாம்.
  • இதனை வழக்கமான வடை போன்று சட்னி, சாம்பார் ஆகியவற்றுடன் பரிமாறலாம் சுவையாக இருக்கும்.

இதர வகைகள் –  சேமியா போண்டாமைசூர் போண்டா, இட்லி மாவு போண்டா, மெது பக்கோடா, தயிர் வடை, உடனடி மெதுவடை, மொரு மொரு வடை, சாம்பார் வடை, மெதுவடை, வாழைப்பூ வடை

 

தேவையான பொருட்கள்

  • சாதம் – 1  கப்
  • தயிர் –  2 தேக்கரண்டி 
  • ரவை –  3 தேக்கரண்டி
  • அரிசி மாவு –  3 தேக்கரண்டி 
  • பெரிய வெங்காயம் – 1  பொடியாக நறுக்கியது
  • பச்சை மிளகாய் – 2  பொடியாக நறுக்கியது
  • கருவேப்பிலை –  சிறிதளவு
  • இஞ்சி  – சிறிதளவு பொடியாக நறுக்கியது
  • உப்பு – தேவையான அளவு 
  • சமையல் எண்ணெய் –  பொரிக்க தேவையான அளவு

செய்முறை

1. ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் சாதம் எடுத்துக் கொள்ளவும்.

2. அதனுடன் இரண்டு தேக்கரண்டி கெட்டியான தயிர், மூன்று தேக்கரண்டி ரவை மற்றும் 3 தேக்கரண்டி அரிசி மாவு ஆகியவற்றை சேர்க்கவும்.

3. அதனை நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

4. அதனை ஒரு பௌலில் மாற்றி அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

5. அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய் 2,  பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும்.

6.  தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.

7. பிசைந்த பின்னர் ஒரு உருண்டை மாவை எடுத்து உருட்டி லேசாக தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டுக் கொள்ளவும்.

8. பின்னர் மிதமான சூட்டில் இருக்கும் எண்ணையில் சேர்த்து பொரிக்கவும்.

9.  இரண்டு மூன்று நிமிடங்களுக்கு பின்னர் திருப்பி போட்டு பொரிக்கவும்.

10. பொன்னிறமானதும்  எண்ணெயை வடித்து விட்டு எடுக்கவும்.

11. மொறுமொறுப்பான வடை தயார். 

Leave a Reply