ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை இட்லி பொடி வேர்க்கடலை, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான இட்லி பொடி. இதனை இட்லி மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். வேர்க்கடலையை விரும்பி உண்பவர்கள் இந்த பொடியை செய்து பார்க்கலாம், சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும், எப்போதும் ஒரே மாதிரியான பொடி வகைகளை செய்வதைவிட இதுபோன்ற வித்தியாசமான பொடிவகைகள் செய்தால் வீட்டில் இருப்பவர்கள் விரும்பி உண்பார்கள்.
சுவையான வேர்கடலை இட்லி பொடி செய்ய சில குறிப்புகள்
- காய்ந்த மிளகாய், வேர்க்கடலை, கடலை பருப்பு, ஆகியவற்றை மிதமான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.
- ஏற்கனவே வறுத்த வேர்கடலையை சேர்த்தாலும் மீண்டும் ஒருமுறை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
- உங்கள் காரத்திற்கேற்ப காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.
- கடலைபருப்பு சேர்க்காமலும் இந்த பொடி செய்யலாம்.
இதர வகைகள் – பூண்டு இட்லி பொடி, இட்லி மிளகாய் பொடி, வெங்காய சட்னி, கமகமக்கும் புதினா சட்னி, பீர்க்கங்காய் துவையல், ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி, புதினா சட்னி, பூண்டு தக்காளி தொக்கு , தக்காளி சட்னி , பருப்பு துவையல்.
தேவையான பொருட்கள்
- சமையல் எண்ணெய் – 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 10
- வேர்கடலை – ½ கப் – 75g
- கடலை பருப்பு – ¼ கப்
- கருவேப்பிலை – சிறிதளவு
- பூண்டு பற்கள் – 5
- கல் உப்பு – ½ தேக்கரண்டி
செய்முறை
1. ஒரு அடிகனமான கடாயில் 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
2. எண்ணெய் சூடானதும் 10 காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
3. பின்னர், ½ கப் வேர்க்கடலை சேர்த்து லேசான பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
4. அதனுடன் ¼ கப் கடலைப்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
5. பின்னர் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து, கறிவேப்பிலை மொறுமொறுப்பாக ஆகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
6. வறுத்தவற்றை ஆற விடவும். ஆறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி அதனுடன் 5 பல் பூண்டு சேர்த்து கொள்ளவும்.
7. அதனுடன் ½ தேக்கரண்டி கல் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
8. அதனை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
9. சுத்தமான டப்பாவில் மாற்றி வைக்கவும். இது 1 மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.