உடனடி தோசை காலை நேரங்களில் வழக்கமான இட்லி தோசைக்கு பதிலாக / இட்லி மாவு இல்லாத சமயங்களில் இதுபோன்று உடனடியான டிபன் செய்தால் வித்தியாசமாகவும் அதே சமயத்தில் சுவையாகவும் இருக்கும். ரவா, கோதுமை மாவு, போன்றவற்றை கொண்டு மிக சுலபமாக பத்து நிமிடங்களில் இதனை செய்யலாம், அதே சமயத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய வகையில் இருக்கும்.
உடனடி தோசை செய்ய சில குறிப்புகள்
- வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றுடன் கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளையும் துருவி சேர்த்துக் கொள்ளலாம்.
- குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் பச்சை மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
- ரவை மற்றும் கோதுமை மாவுடன் சிறிதளவு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
- பேக்கிங் சோடா சேர்த்தால் தோசை பஞ்சு போன்று இருக்கும்.
- பேக்கிங் சோடா சேர்க்க விருப்பம் இல்லை என்றால் அதற்கு பதிலாக மாவை 15 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளலாம்.
- தோசை போன்று மெலிசாக ஊற்ற வேண்டாம் ஊத்தப்பம் போன்று ஒரளவு திக்காக ஊற்றிக் கொள்ளவும்
- ஒவ்வொரு பக்கமும் ஒன்று முதல் இரண்டு நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளவும்.
- எல்லா வகையான சட்னி மற்றும் சாம்பாருடன் இதனை பரிமாறலாம்.
இதர காலை நேர உணவுகள் – பிரட் சில்லி, ரவா இட்லி, ராகி புட்டு, பாசிப்பருப்பு இட்லி, மசாலா பாஸ்தா, சாம்பார் வடை, மசாலா இட்லி
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு – 1 கப்
- ரவை – 1/2 கப்
- பெரிய வெங்காயம் – 1
- தக்காளி – 1
- பச்சை மிளகாய் – 2
- கொத்தமல்லி – சிறிதளவு
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- பேக்கிங் சோடா – 1/4 தேக்கரண்டி
- தயிர் – 3/4 கப்
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
1. ஒரு பவுலில் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனுடன் அரை கப் ரவை சேர்த்துக் கொள்ளவும்.
3. ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
4. அதனுடன் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
5. அதனுடன் முக்கால் கப் திக்கான தயிர் சேர்த்துக் கொள்ளவும்.
6. சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து திக்காக கரைத்துக் கொள்ளவும்.
7. தோசைக் கல் சூடானதும் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
8. ஒரு கரண்டி மாவு சேர்த்துக் கொள்ளவும். தேய்த்துவிட வேண்டாம், ஊத்தப்பம் போன்று ஊற்றவும்.
9. சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
10. ஒரு சிவந்த பிறகு திருப்பிப் போடவும்.
11. நன்கு வெந்த பிறகு எடுத்து விடவும்.
12. சூடான உடனடி தோசை தயார் இதனை சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.