Sakkarai pongal in Tamil | கோவில் சக்கரை பொங்கல் | Temple style Pongal | Sweet pongal in Tamil

கோவில் சக்கரை பொங்கல் கோவிலில் செய்வது போன்று அதே சுவையில் வீட்டிலும் சர்க்கரை பொங்கல் செய்யலாம். இதனை புரட்டாசி மாதம், ஆடி மாதம் போன்ற விசேஷமான மாதங்களில் செய்து கடவுளுக்கு படைக்கலாம் மற்றும் கோயில்களில் சென்று விநியோகம் செய்யலாம். கோவில் சக்கரை பொங்கல், சக்கரை பொங்கல் இருந்து வேறுபட்டது. இதற்கு பாசிப்பருப்பு சேர்க்க தேவையில்லை மற்றபடி அதே செய்முறை. பொதுவாக சர்க்கரை பொங்கலில் பால் வாழைப்பழம் போன்றவற்றை சேர்ப்பார்கள். ஆனால் கோயில் சர்க்கரை பொங்கலில் எதுவும் சேர்க்க தேவையில்லை.  சுவையான கோவில் சர்க்கரை பொங்கல் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

கோயில் சர்க்கரை பொங்கல் செய்ய சில குறிப்புகள்

  • சாதம் வேக வைக்கும் பொழுது நன்கு குழையும்படி வேக வைக்கவும்.
  • ஒரு பங்கு அரிசிக்கு  ஒன்றரை பங்கு முதல் இரண்டரை பங்கு வரை வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • வெல்ல பாகு காய்ச்சிய பிறகு அதனை வடிகட்டவும் வெள்ளத்தில் சிறிய கற்கள் மற்றும் மண் இருக்க வாய்ப்புள்ளது.
  • நீங்கள் விருப்பப்பட்ட அளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பசு நெய் பயன்படுத்தும் பொழுது சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.
  • தவறாமல் சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளவும் (இது எல்லா மளிகை கடைகளிலும் கிடைக்கும்).
  • பச்சை கற்பூரம் சேர்க்காமல்  கோவில் சர்க்கரைப்பொங்கல் சுவையும் மணமும் வராது.

இதர பாரம்பரிய உணவுகள் –   கோவில் சக்கரை பொங்கல்சக்கரை பொங்கல்,  இனிப்பு பிடி கொழுக்கட்டை,  ராகி புட்டு, அவல் பாயசம்,  பருப்பு போளி, பால் கொழுக்கட்டை, புளி சாதம், சுவையான எலுமிச்சை சாதம், சுசியம், பருப்பு பாயசம் , சிறுதானிய பாயசம் , கோதுமை ரவை பாயசம், எள்ளு பூரண கொழுக்கட்டை, தேங்காய் பூரண கொழுக்கட்டை | உளுந்து பூரண கொழுக்கட்டை,  கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை

 

தேவையான பொருட்கள் 

  • பச்சரிசி – 1 கப்
  • வெல்லம் –  2 கப்
  • ஏலக்காய் பொடி –  1/2 தேக்கரண்டி
  • நெய் –  3  மேஜைக்கரண்டி/ தேவையான அளவு
  • முந்திரிப் பருப்பு –  தேவையான அளவு
  • காய்ந்த திராட்சை –  தேவையான அளவு
  • பச்சை கற்பூரம் –  1 சிட்டிகை

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் 1 கப் அளவு பச்சரிசி எடுத்துக் கொள்ளவும்.

2. அதனை 2 முறை கழுவி விட்டு 4 கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

3. பிரஷர் குக்கரை மூடி வைத்து 4 விசில் வைத்துக்கொள்ளவும்.

4. ஒரு பானில் 2 கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.

5. வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

6.  வெல்லம் கரைந்து கொதித்த பின்னர் வடிகட்டிக்கொள்ளவும்.

7. வெள்ளம் காய்ச்சிய  பாத்திரத்தை கழுவி  வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்த்துக் கொள்ளவும்.

8. அதனை ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.

9. பிரஷர் ரிலீஸ் ஆனதும் குக்கரை திறந்து சாதத்தை மசித்துக் கொள்ளவும்.

10. அதனை தயார் செய்து வைத்துள்ள பாகில் சேர்த்துக் கொள்ளவும்.

11. நன்கு கலந்த பின்னர் அரை தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

12. ஒரு சிறிய   கடாயில் 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.

13. நெய் சூடானதும் தேவையான அளவு முந்திரிப்பருப்பு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

14. பின்னர் தேவையான அளவு காய்ந்த திராட்சை சேர்த்து  வறுத்துக் கொள்ளவும்.

 15. இதனை சர்க்கரை பொங்கலில் சேர்த்து கலக்கவும்.

16. பின்னர் 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கலக்கவும்.

17. கடைசியாக ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்து கலந்து கொள்ளவும்.

18. சுவையான கோயில் சர்க்கரை பொங்கல் தயார்.


Leave a Reply