See this Recipe in English
பால் சர்பத் நன்னாரி சிரப், பாதாம் பிசின், துளசி விதைகள் மற்றும் பால் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யக்கூடிய சர்பத். இது மிகவும் அற்புதமான நன்மைகளை கொண்டது. இயற்கையிலேயே உடலை குளிர்ச்சியாக வைக்க கூடிய பொருட்களை சேர்த்து செய்யப்படுவதால் பால் சர்பத் வெயில் காலத்திற்கு உகந்த குளிர்பானம். இது தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவில் மிகவும் பிரபலம்.
பாதாம் பிசின் என்றால் என்ன?
பாதாம் பிசின் என்பது இனிப்பு பாதாம் மரத்திலிருந்து பெறப்படும் இயற்கையான பசையாகும். இது வெள்ளை, வெளிர் மஞ்சள் அல்லது வெளிர் பழுப்பு நிறத்தில் உள்ளது மற்றும் மரத்தின் பட்டையின் மேல் சிறிய பாறைகளின் வடிவத்தில் காணப்படுகிறது. இது மத்திய கிழக்கு, பாகிஸ்தான், துருக்கி மற்றும் சிரியாவில் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
பாதாம் பிசின் நன்மைகள்
இயற்கையாகவே உடலை குளிர்விக்க பயன்படுகிறது. உடல்சூட்டை தணிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவுகிறது. தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கோடைகாலங்களில் ஏற்படக்கூடிய தோல் நோய்களை தடுக்க உதவுகிறது மேலும் இது கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்வது நல்லது.
துளசி விதையின் நன்மைகள்
இயற்கையாகவே உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க சர்க்கரை நோயாளிகள் இதனை எடுத்துக் கொள்ளலாம். எடையை குறைக்கவும் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
சுவையான பால் சர்பத் செய்ய சில குறிப்புகள்
- சர்பத் செய்வதற்கு கெட்டியான பால் பயன்படுத்தலாம் அல்லது சுவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
- நன்னாரி சர்பத் பிராண்டை பொருத்து மாறும் எனவே சேர்க்கும் பொழுது உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
- பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகள் சேர்க்காமலும் பால் சர்பத் செய்யலாம்.
- பாதாம் பிசின் பார்ப்பதற்கு கல்கண்டு போல காட்சியளிக்கும், அதை அப்படியே ஊற வைத்தால் 10 – 15 மணி நேரம் வரை ஆகும், எனவே மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து பின்னர் ஊற வைத்தால் 2 மணி நேரத்தில் ஊறிவிடும்.
- பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகள் மீதம் இருந்தால் அதனை ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
- டூட்டி ஃப்ரூட்டி, பாதாம், முந்திரி ஆகியவை சேர்ப்பது உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டது.
இதர குளிர்பானங்கள்
நன்னாரி சர்பத்
பால் சர்பத்
பழ சர்பத்
கோடை காலத்திற்கு 5 விதமான பானங்கள்
பலுடா
கேரட் மில்க் ஷேக்
பால் சர்பத் செய்ய தேவையான பொருட்கள்
- பால் – 2 கப் – 500ml
- நன்னாரி சிரப் – 6 மேஜை கரண்டி
- பாதாம் பிசின் – 4 – 5 துண்டுகள்
- சப்ஜா விதைகள் – 2 தேக்கரண்டி
- பாதாம் – 4
- முந்திரிப் பருப்பு – 4
- டூட்டி ஃப்ரூட்டி – 2 தேக்கரண்டி
செய்முறை
1. பால் சர்பத் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை சேர்த்து காய்ச்சவும்.
2. பால் சூடானதும் அதனை ஆற வைத்து, ஆறிய பின்னர் ஃப்ரிட்ஜில் 2 முதல் மூன்று 3 நேரம் வைக்கவும்.
3. 4 – 5 துண்டுகள் பாதாம் பிசினை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.
4. அதனை சிறிதளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
5. ஒரு சிறிய கப்பில் 2 தேக்கரண்டி சப்ஜா விதைகள் எடுத்துக் கொள்ளவும்.
6. அதனுடன் ¼ கப் தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
7. ஒரு கிளாஸ் தம்ளரில் 1 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு ஊறவைத்த பாதாம் பிசின் சேர்த்துக் கொள்ளவும்.
8. அதனுடன் 2 – 3 தேக்கரண்டி ஊற வைத்த சப்ஜா விதைகள் சேர்த்துக் கொள்ளவும்.
9. பாதாம் மற்றும் முந்திரி பருப்பை சிறு சிறு துண்டுகளாக இடித்து சேர்த்துக் கொள்ளவும்.
10. அதனுடன் 1 தேக்கரண்டி டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கொள்ளவும்.
11. பின்னர் 3 மேஜை கரண்டி நன்னாரி சர்பத் சேர்த்துக் கொள்ளவும்.
12. இப்பொழுது காய்ச்சி, ஆறவைத்து பிரிட்ஜில் வைத்துள்ள பால் 1 கப் சேர்த்துக் கொள்ளவும்.
13. ஒரு கரண்டி வைத்து நன்றாக கலக்கவும்.விருப்பப்பட்டால் சிறிதளவு ஐஸ் கட்டிகள் சேர்த்து கொள்ளலாம்.
14. கடைசியாக சிறிதளவு உடைத்த பாதாம் மற்றும் டூட்டி ஃப்ரூட்டி ஆகியவற்றைத் தூவி பரிமாறவும். சுவையான பால் சர்பத் தயார்.