கடலை பர்பி 80 மற்றும் 90களில் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு. இது எல்லா கடைகளிலும் கிடைக்கும், தற்போதைய காலகட்டத்தில் அவ்வளவாக பிரபலமாக இல்லாவிட்டாலும் அதன் சுவை அபாரமாக இருக்கும். சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த கடலை பர்ஃபியை நாம் சுலபமான முறையில் 15 நிமிடங்களிலேயே வீட்டில் செய்யலாம். கடலை பர்பி, வறுத்த கடலை மற்றும் சர்க்கரை அல்லது வெல்லம் கொண்டு செய்யப்படுகிறது. கீழே குறிப்பிட்டுள்ள செய்முறையில் சர்க்கரையை பயன்படுத்தி செய்துள்ளோம். மற்றொரு முறை வெல்லம் பயன்படுத்தி கடலை பர்பி செய்முறையை பதிவிடுகிறோம், சுவையான கடலை பர்பி நீங்களும் வீட்டிலேயே செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான கடலை பர்பி செய்ய சில குறிப்புகள்
- வறுத்த கடலை பயன்படுத்தவும் அல்லது பச்சைக் கடலை வாங்கி அதனை மிதமான தீயில் நன்கு வறுத்து ஆற வைத்து பின்னர் பயன்படுத்தவும்.
- அரை கப் முதல் முக்கால் கப் வரை சர்க்கரை பயன்படுத்தலாம் உங்கள் இனிப்பு சுவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- சர்க்கரை பாகு செய்வதற்கு தண்ணீர் சேர்க்க வேண்டாம் சர்க்கரையை உருக்கி பாகு செய்யவும்.
- சர்க்கரை பாகு செய்யும் பொழுது மிகக் குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும்.
- நான்ஸ்டிக் பாத்திரம் பயன்படுத்தவும் அப்பொழுது ஒட்டாமல் சுலபமாக வரும், சாதாரண பாத்திரத்தில் செய்யும் பொழுது சர்க்கரை சுற்றிலும் ஒட்டி வீணாவதற்கு வாய்ப்புள்ளது.
- அடுப்பிலிருந்து இறக்கிய பின்னர் ஒரு சப்பாத்தி கட்டையில் எண்ணெய் தேய்த்து அல்லது ஒரு பட்டர் பேப்பர் போட்டு அதன் மேல் வைத்து பர்ஃபியை தேய்க்கவும்.
- சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய பின்னர் ஐந்து நிமிடங்களுக்கு ஆற விட்டு பின்னர் பிரித்தெடுக்கவும்.
- இதனை ஏர் டைட் டப்பாவில் போட்டு வைத்து பத்து நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
இதர சிற்றுண்டி வகைகள் – காராபூந்தி, பர்கர் பன், சில்லி மசாலா இட்லி, மெது பக்கோடா, செட்டிநாடு ஸ்பெஷல் கார சீயம், கேழ்வரகு புட்டு,சோயா கட்லட், மசாலா பாஸ்தா, பாசிப்பருப்பு ஃப்ரை, பிரட் சில்லி, பிரெட் பீட்சா
தேவையான பொருட்கள்
- வறுத்த கடலை – 1 கப்
- சர்க்கரை – 1/2 கப்
செய்முறை
1. ஒரு கப் தோல் நீக்கிய வறுத்த கடலை எடுத்துக் கொள்ளவும் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, விட்டு விட்டு ஐந்து வினாடிகளுக்கு அரைத்துக்கொள்ளவும்.
2. கொரகொரப்பாக பொடித்து பின்னர் அதனை தனியே வைக்கவும்.
3. ஒரு கடாயில் அல்லது ஒரு பேனில் அரை கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
4. மிதமானது முதல் குறைவான தீயில் வைத்து அதனை உருக்கவும்.
5. ஐந்து முதல் பத்து நிமிடங்களில் கட்டிகளில்லாமல் சர்க்கரை நன்கு உருகி வரும்.
6. இப்பொழுது அரைத்து வைத்துள்ள கடலையை சேர்த்து கொள்ளவும்.
7. குறைவான தீயில் நன்கு கிளறவும்.
8. சர்க்கரையும் கடலையும் நன்கு கலந்து சேர்ந்து வரும் வரை கிளறவும்.
9. இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு குறைவான தீயில் வைத்து கெட்டியாகும் வரை கிளறவும்.
10. இப்போது அடுப்பை அணைத்து ஒரு சப்பாத்தி கட்டை அல்லது பட்டர் பேப்பர் மீது வைக்கவும்.
11. சூடாக இருக்கும் பொழுது சப்பாத்தி உருட்டும் கட்டையால் உருட்டி சமஅளவில் தேய்த்துக் கொள்ளவும்.
12. பின்னர் ஒரு கத்தி அல்லது பீட்சா கட்டர் கொண்டு விருப்பப்பட்ட அளவில் வெட்டிக் கொள்ளவும்.
13. இப்பொழுது ஐந்து நிமிடங்களுக்கு ஆற விட்டு பின்னர் பிரித்து எடுக்கவும்.
14. சுவையான கடலைபர்ஃபி சுலபமான முறையில் தயார்.