Potato Smiley | பொட்டேட்டோ ஸ்மைலி | Potato smiley in tamil | Kids Snacks | School Snacks for Kids

See this Recipe in English

உருளைக்கிழங்கு ஸ்மைலி உருளைக்கிழங்கு, கான்பிளவர், பிரெட் கிரம், ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது எண்ணெயில் பொரித்து செய்யப்படும் ஒரு சுவையான மொறுமொறுப்பான மாலை நேர சிற்றுண்டி. மேலைநாடுகளில் உருளைக்கிழங்கு கொண்டு விதவிதமான பொரித்து செய்யப்படும் சிற்றுண்டிகள் உள்ளது. அதில் உருளைக்கிழங்கு ஸ்மைலி, ஃப்ரெஞ்ச் ப்ரைஸ், போன்றவை இந்தியாவிலும் மிகவும் பிரபலம். சுவையும் அபாரமாக இருக்கும்.

பொட்டேட்டோ ஸ்மைலி குழந்தைகளின் சிற்றுண்டி டப்பா அல்லது மாலை நேரம் காபி மற்றும் டீ யுடன் சுவையாக இருக்கும். இது செய்வது மிகவும் சுலபமானது. அதே நேரத்தில் சுவையும் அபாரமாக இருக்கும் மேலும் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.

சுவையான பொட்டேட்டோ ஸ்மைலி செய்ய சில குறிப்புகள்

  • காரமில்லாத சிவப்பு மிளகாய் தூள் பயன்படுத்தி உள்ளேன், சிறிதளவு காரத்துடன் செய்வதற்கு அதற்கேற்றார்போல் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  • எண்ணெயில் பொரிக்கலாம் அல்லது ஓவனில் வைத்து பேக் செய்து கொள்ளலாம். இதற்கு 180C/360F 10 முதல் 12 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும்.
  • மாவு பிசையும் பொழுது நீர்த்துப் போகாமல் ஓரளவுக்கு கெட்டியாக இருந்தால்தான் எண்ணெயில் போடும் பொழுது கரையாமல் இருக்கும்.
  • பொட்டேட்டோ ஸ்மைலி எண்ணெயில் சேர்த்து பொரிக்கும் பொழுது மிதமான தீயில் வைத்து பொரிக்கவும் தீ அதிகமாக இருந்தால்  கரிந்து  போகும் வாய்ப்புள்ளது.

இதர வகைகள் –  பாசிப்பருப்பு ஃப்ரை, பிரட் சில்லி, போண்டா சூப்,  பிரெட் பீட்சா, சாக்லேட் காபி, உடனடி மெதுவடை, உருளைக்கிழங்கு ரிங்ஸ், உடனடி தோசை, சேமியா போண்டா, மொரு மொரு வடை, பட்டாணி மசாலா சுண்டல், மசாலா கடலை, சாம்பார் வடை, காலிஃப்ளவர்  ஸ்னாக்ஸ், இட்லி மாவு போண்டா, ஓவென் இல்லாமல் பீஸ்ஸா, மிளகாய் பஜ்ஜி,வெஜிடபிள் பர்கர், வெஜிடபிள் கட்லெட்.

See this Recipe in English

 பொட்டேட்டோ ஸ்மைலி செய்ய தேவையான பொருட்கள்

  • 4 உருளைக்கிழங்கு (450 gram)
  • 1/4 கப் பிரட் கிரும்பஸ் (bread crumbs)
  • 2 தேக்கரண்டி சோள மாவு
  • 2 தேக்கரண்டி மைதா மாவு
  • 1/2  தேக்கரண்டி மிளகு தூள்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

செய்முறை

1. ஒரு அகலமான பாத்திரம் அல்லது பிரஷர் குக்கரில் நான்கு உருளைக்கிழங்குகளை வேக வைக்கவும்.

2. மென்மையாக வெந்த பின்னர் அதனை தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

 

3. அதனுடன் கால் கப் பிரெட் கிரம், 2 தேக்கரண்டி சோள மாவு, 2 தேக்கரண்டி மைதா மாவு ஆகியவற்றை சேர்க்கவும்.

 

4. அதனுடன் அரை தேக்கரண்டி மிளகுத்தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

5. இப்பொழுது கையில் ஒட்டாமல் வரும் அளவிற்கு நன்றாக பிசைந்து உருட்டி கொள்ளவும்.

6. அதனை ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து அரை இன்ச் அளவிற்கு தட்டிக் கொள்ளவும் அல்லது ஒரு சப்பாத்தி கட்டையால் தேய்த்துக் கொள்ளவும்.

7. இப்பொழுது ஒரு சிறிய மூடி அல்லது குகி கட்டர் கொண்டு சிறிய சிறிய வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

 

8. இப்பொழுது ஒரு ஸ்டா கொண்டு கண்கள் செய்யவும்,  ஒரு ஸ்பூன் கொண்டு வாய் செய்யவும்.

9. இதனை மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

10. சுவையான பொட்டேட்டோ ஸ்மைலி தயார்.

Leave a Reply