இறால் தொக்கு இறாலை கொண்டு செய்யப்படுகிறது. இதற்கு தனியாக மசாலா அரைக்க தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சுலபமான முறையில் சுவையான இறால் தொக்கு செய்யலாம்.
சுவையான இறால் தொக்கு செய்ய சில குறிப்புகள்
1. மிளகாய் தூள் சேர்க்கும் பொழுது உங்கள் காரத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
2. கரம் மசாலா சேர்ப்பதற்கு பதிலாக, சிறிய துண்டு பட்டை, மூன்று லவங்கம், இரண்டு ஏலக்காய் ஆகியவற்றை தாளித்துக் கொள்ளலாம்.
3. இதே செய்முறையில் எலும்பில்லாத சிக்கன் சேர்த்து சிக்கன் மசாலா செய்யலாம்.
இதர அசைவ குருமா வகைகள் – சிக்கன் சால்னா, செட்டிநாடு சிக்கன் குழம்பு, முட்டை மசாலா, ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி, முட்டை குழம்பு.
சைவ குருமா வகைகள் – வெஜிடபிள் சால்னா, சோயா குருமா, வடைகறி, ரோட்டுக்கடை காளான் மசாலா, கத்திரிக்காய் கிரேவி, பன்னீர் கிரேவி, கும்பகோணம் கடப்பா, தக்காளி குருமா, ஆந்திரா கத்திரிக்காய் மசாலா, பூரி மசாலா, வெஜிடபிள் குருமா, சென்னா மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, காளிஃபிளவர் பட்டாணி குருமா.
இறால் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்
- இறால் – 400 கிராம்
- சமையல் எண்ணெய் – 2 தேக்கரண்டி
- சோம்பு – 1/2 தேக்கரண்டி
- கருவேப்பிலை – சிறிதளவு
- பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
- இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- பழுத்த தக்காளி – 1
- உப்பு – தேவையான அளவு
- மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
- மல்லி தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
செய்முறை
1. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
2. எண்ணெய் சூடானதும் 1/2 தேக்கரண்டி சோம்பு சேர்த்துக் கொள்ளவும்.
3. அதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.
4. ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
5. வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும். அதனுடன் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
6. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போன பின்னர் ஒரு தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
7. தக்காளி மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, 1 தேக்கரண்டி மல்லித்தூள், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
8. நன்கு கலந்த பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
9. மசாலா கொதிக்கும் பொழுது மீண்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
10. மசாலாவில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவைக்கவும்.
11. இப்போது 400 கிராம் இறாலை சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளவும்.
12. இறால் மற்றும் மசாலா நன்கு கலக்கும்படி கலந்து கொள்ளவும்.
13. இப்பொழுது மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
14. கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு தூவி அடுப்பை அணைத்து விடவும்.
15. சுவையான இறால் தொக்கு தயார்.