See this Recipe in English
தக்காளி குருமா மிகவும் எளிய முறையில் செய்யக்கூடிய ஒரு சுவையான உணவு வகை. இது இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், போன்றவற்றுடன் சுவையாக இருக்கும். இது 10 முதல் 20 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யக்கூடிய மிக மிக எளிமையான குருமா வகை. இதற்கு வெங்காயம், தக்காளி தவிர வேறு காய்கறிகள் தேவையில்லை. தக்காளி குருமா நாம் பலவிதமாக செய்யலாம் கீழே குறிப்பிட்டுள்ள செய்முறை கொங்குநாடு என கூறப்படும் ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், போன்ற பகுதிகளில் மிகவும் பிரபலம். அங்கே பெரும்பாலான நாட்களில் காலை நேரங்களில் செய்யப்படும், இட்லி, தோசையுடன் பரிமாறப்படும் குருமா.
சுவையான தக்காளி குருமா செய்ய சில குறிப்புகள்
- தேங்காய் விழுது அரைக்கும் பொழுது நீங்கள் பொட்டுக்கடலையுடன் சேர்த்து சிறிதளவு முந்திரிப் பருப்பு சேர்த்துக் கொண்டால் குருமா மேலும் சுவையாக இருக்கும்.
- இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்ப்பதற்கு பதிலாக நீங்கள் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம்.
- பட்டை லவங்கம் ஆகியவற்றுடன் நீங்கள் கடுகு, கறிவேப்பிலை, ஆகியவற்றையும் சேர்த்து தாளித்து கொள்ளலாம்.
- சாம்பார் தூள் சேர்ப்பதற்கு பதிலாக நீங்கள் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மல்லித் தூள், கால் தேக்கரண்டி மஞ்சள்தூள், சேர்த்துக் கொள்ளலாம்.
- நீங்கள் விருப்பப்பட்டால் சிறிதளவு கரம் மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.
இதர வகைகள் – வேர்க்கடலை சட்னி, பூண்டு இட்லி பொடி, இட்லி மிளகாய் பொடி, வெங்காய சட்னி, கமகமக்கும் புதினா சட்னி, பீர்க்கங்காய் துவையல், ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி, புதினா சட்னி, பூண்டு தக்காளி தொக்கு , தக்காளி சட்னி , பருப்பு துவையல், கத்திரிக்காய் சட்னி
See this Recipe in English
தக்காளி குருமா செய்ய தேவையான பொருட்கள்
தேங்காய் விழுது அரைக்க
- 2 தேக்கரண்டி பொட்டுக்கடலை
- 2 தேக்கரண்டி துருவிய தேங்காய்
- 1 துண்டு இஞ்சி
- 3 பல் பூண்டு
- 1/2 தேக்கரண்டி சோம்பு
- 2 பழுத்த தக்காளி நறுக்கியது
- 1 துண்டு பட்டை
- 3 லவங்கம்
குருமா செய்ய
- 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
- 1 சிறிய துண்டு பட்டை
- 4 லவங்கம்
- 1 பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது
- 3 பூண்டு பற்கள் நசுக்கியது
- 1 பச்சை மிளகாய்
- கொத்தமல்லி சிறிதளவு பொடியாக நறுக்கியது
- தேவையான அளவு உப்பு
- 2 தேக்கரண்டி சாம்பார் தூள்
செய்முறை
1. ஒரு மிக்ஸி ஜாரில் 2 தேக்கரண்டி பொட்டுக்கடலை, 2 தேக்கரண்டி துருவிய தேங்காய்
2. ஒரு துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது, 3 பல் பூண்டு
3. அரை தேக்கரண்டி சோம்பு, 2 தக்காளி பழங்கள் நறுக்கியது
4. ஒரு சிறிய துண்டு பட்டை, 3 லவங்கம், ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
5. இப்பொழுது அதனை நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
6. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
7. அதனுடன் ஒரு சிறிய துண்டு பட்டை 4 லவங்கம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
8. ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
9. வெங்காயம் ஓரளவு வதங்கியதும் 3 பல் பூண்டு நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
10. அதனுடன் ஒரு பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
11. பின்னர் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
12. தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும் அதனுடன், 2 தேக்கரண்டி சாம்பார் தூள் சேர்த்துக் கலக்கவும்.
13. சாம்பார் தூள்ன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் தயாராக வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்துக் கொள்ளவும்.
14. அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
15. இப்பொழுது மூடி வைத்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
16. குருமா கொதித்த பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும் சுவையான தக்காளி குருமா தயார்.