See this Recipe in English
காய்கறி குருமா கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி, மற்றும் காலிஃப்ளவர் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது. காய்கறி குருமாவை சப்பாத்தி, பூரி, மற்றும் பரோட்டா உடன் பரிமாறலாம், காய்கறிகள் நிறைந்த சுவையான, ஆரோக்கியமான இந்த குருமாவில் விருப்பப்பட்டால் ப்ராக்கோலி, பன்னீர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
காய்கறி குருமா பலவிதங்களில் செய்யப்படுகிறது உதாரணமாக வெள்ளை குருமா இதுவும் பல விதமான காய்கறிகளை சேர்த்து செய்யப்பட்டாலும் மிளகாய்தூள், மஞ்சள்தூள், போன்றவை சேர்க்காமல் பச்சை மிளகாய் கொண்டு செய்யப்படுகிறது. இதனால் இதன் நிறம் வெள்ளையாக இருக்கும். இதுதவிர வெங்காயம், தக்காளியை கொண்டு குருமா செய்யலாம். இதற்கு வேறு வகையான காய்கறிகள் சேர்க்க தேவையில்லை. இது தக்காளி குருமா எனப்படுகிறது.
சுவையான காய்கறி குருமா செய்ய சில குறிப்புகள்
- குருமாவில் இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலா போன்றவை சேர்க்கப்படும். விருப்பமில்லை எனில் அது இரண்டையும் தவிர்த்து மற்றவற்றை அதே அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- தேங்காய் விழுது அரைக்கும்போது முந்திரி பருப்புடன் 1 தேக்கரண்டி பொட்டுக்கடலை சேர்த்து அரைக்கலாம்.
- குருமா கொதித்து அடுப்பை அணைக்கும் முன்பு 1/2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தால் குருமா சுவையாக இருக்கும்.
இதர வகைகள் – சால்னா, வெஜிடபிள் சால்னா, சால்னா, ஹோட்டல் ஸ்டைல் சால்னா, சோயா குருமா, வடைகறி, கததிரிக்காய் கிரேவி, பன்னீர் கிரேவி, கும்பகோணம் கடப்பா, தக்காளி குருமா, ஆந்திரா கத்திரிக்காய் மசாலா, வெஜிடபிள் குருமா , சென்னா மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, காளிஃபிளவர் பட்டாணி குருமா.
அசைவ குருமா வகைகள் – முட்டை குழம்பு, செட்டிநாடு சிக்கன் குழம்பு, முட்டை மசாலா, ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி, சிக்கன் சால்னா, உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு, இறால் தொக்கு.
காய்கறி குருமா செய்ய தேவையான பொருட்கள்
காய்கறிகள்
- 1 கப் பொடியாக நறுக்கிய கேரட்
- 1 கப் பச்சை பட்டாணி
- 1 கப் பொடியாக நறுக்கிய பீன்ஸ்
- 1 கப் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு
- 1 கப் நறுக்கிய காலிஃப்ளவர்
- 1 பெரிய வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது)
- 1 தக்காளி (நீளவாக்கில் நறுக்கியது)
- 1 சிறிய துண்டு இஞ்சி (பொடியாக நறுக்கியது)
- 3 பல் பூண்டு (பொடியாக நறுக்கியது)
- 3 பச்சை மிளகாயை (நடுவில் கீறியது)
- கொத்தமல்லி இலை சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
- புதினா இலைகள் சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
மசாலா பொருட்கள்
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
- 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
- 1 தேக்கரண்டி மல்லித்தூள்
- 1 இன்ச் பட்டை
- 3 ஏலக்காய்
- 3 லவங்கம்
இதர பொருட்கள்
- தேவையான அளவு உப்பு
- 1/4 கப் பால்
- 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
அரைக்க தேவையான பொருட்கள்
- 4 தேக்கரண்டி துருவிய தேங்காய்
- 1/2 தேக்கரண்டி கசகசா
- 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
- 10 முந்திரி பருப்பு
செய்முறை
தேங்காய் விழுது
1. தேங்காய் விழுது செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் 4 தேக்கரண்டி துருவிய தேங்காய், 1/2 தேக்கரண்டி கசகசா, 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம், 10 முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
2. அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
குருமா செய்முறை
1. ஒரு பிரஷர் குக்கரில் 3 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், 1 சிறிய துண்டு பட்டை 3 ஏலக்காய் மற்றும் 3 லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
2. 1 பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
3. அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் 3 பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்.
4. இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போகும் வரை மிதமான சூட்டில் வதக்கிக்கொள்ளவும்.
5. இப்பொழுது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து வதக்கவும்.
6. அதனுடன் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, 1 தேக்கரண்டி மல்லி தூள், தேவையான அளவு உப்பு, ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
7. அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை கலக்கவும்.
8. பொடியாக நறுக்கிய கேரட் 1 கப், பட்டாணி 1 கப், நறுக்கிய பீன்ஸ் 1 கப், உருளைக்கிழங்கு 1 கப், மற்றும் நறுக்கிய காலிஃப்ளவர் 1 கப், ஆகியவற்றை சேர்க்கவும்.
9. அதனுடன் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரை மூடி 2 விசில் வைக்கவும்.
10. பிரஷர் ரிலீஸ் ஆனதும் தயாராக வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கலக்கவும்.
11. 4 முதல் 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
12. இப்பொழுது 1/4 கப் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்க்கவும், 1 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
13. சுவையான காய்கறி குருமா தயார்.