Potato Rings recipe in Tamil | உருளைக்கிழங்கு ரிங்ஸ் | Potato snack in Tamil | Quick snack

உருளைக்கிழங்கு ரிங்ஸ் ஒரு சுவையான மாலை நேர உணவு வகை.  இது உருளைக்கிழங்கு, ரவா, பூண்டு ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. வழக்கமான ஸ்னாக்ஸ் வகைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு புதுமையான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையிலான ஸ்னாக்ஸ். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு மிகவும் எளிமையான முறையில் செய்யலாம்.  பிஸ்கட், சாக்லேட் போன்ற எப்போதும் ஒரே மாதிரி ஸ்நாக்ஸ் வகைகளை காட்டிலும் இது போன்ற வித்தியாசமான ஸ்நாக்ஸ் வகைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சுவையான உருளைக்கிழங்கு ரிங்ஸ் செய்ய சில குறிப்புகள்

  1. பெரிய அளவு உருளைக்கிழங்கு பயன்படுத்தினால் ஒன்று பயன்படுத்தவும், சிறியதாக இருந்தால் இரண்டிலிருந்து மூன்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
  2. உருளைக்கிழங்கை மென்மையாக வேக வைத்துக் கொள்ளவும்,  பிரஷர் குக்கரை பயன்படுத்தினால் சுலபமாக இருக்கும். இரண்டு முதல் மூன்று விசில் வைத்து வேக வைக்கவும்.
  3. ரவையை வறுக்க தேவை இல்லை அப்படியே அரைத்து பயன்படுத்தலாம்.
  4. சில்லி ப்ளேக்ஸ் செய்வதற்கு 3 காய்ந்த மிளகாய்களை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் அல்லது பச்சை மிளகாயை பொடியாக நறுக்கியும் சேர்த்துக் கொள்ளலாம்.
  5. ரிங்ஸ் போன்று வெட்டுவதற்கு பாட்டில் மூடி, சிறிய மருந்து டப்பா மூடி ஆகியவற்றை பயன்படுத்தலாம்
  6. ரிங்சை பொறிக்கும் பொழுது மிதமான தீயில் இருந்து சற்று கூடுதலாக வைத்துக் கொள்ளவும். தீ மிக அதிகமாகவோ அல்லது கம்மியாக இருக்கக் கூடாது.
  7. அவ்வப்பொழுது திருப்பிவிடவும் , ரிங்ஸ் ஒரே அளவில் பொன் நிறமாக இருக்கும்.

இதர சிற்றுண்டி வகைகள் – காராபூந்தி, பர்கர் பன், சில்லி மசாலா இட்லி, மெது பக்கோடா, செட்டிநாடு ஸ்பெஷல் கார சீயம்,  கேழ்வரகு  புட்டு,சோயா கட்லட், மசாலா பாஸ்தா, பாசிப்பருப்பு ஃப்ரை, பிரட் சில்லி, பிரெட் பீட்சா

 

உருளைக்கிழங்கு ரிங்ஸ் செய்ய தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு – 1 (200 grams approx.)
  • ரவை – 1/2 கப் (100 gr am)
  • வெண்ணை –  2 தேக்கரண்டி
  •  பூண்டு பற்கள் – 3  பொடியாக நறுக்கியது
  •  சில்லி ப்ளேக்ஸ் –  1 தேக்கரண்டி
  •  உப்பு –  தேவையான அளவு
  •  எண்ணெய் –  பொரிக்க  தேவையான அளவு

 செய்முறை

1. உருளைக்கிழங்கை மென்மையாக வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.

2. அதனை கேரட் துருவும் கட்டையில் வைத்து சமமாக துருவிக் கொள்ளவும்.

3. ஒரு  மிக்ஸி ஜாரில் அரை கப்  ரவை சேர்த்து கொள்ளவும்.

4. அதனை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

5. ஒரு பானில் இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும்.

6. வெண்ணெய் சூடானதும் மூன்று  பூண்டு பற்களை பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளவும்.

7. பூண்டு ஓரளவு வதங்கிய பின்னர் ஒரு தேக்கரண்டி சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்துக் கொள்ளவும்.

8. அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

9. இப்பொழுது அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

10. தண்ணீர் கொதித்ததும் அரைத்து வைத்துள்ள ரவையை சேர்த்து வேக வைக்கவும்.

11. ரவை நன்கு வெந்த பின்னர் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளவும்.

12. ரவையும் உருளைக்கிழங்கும் நன்கு கலக்கும் வரை கிளறவும்.

13. அடுப்பை அணைத்து ஆற விடவும்.  ஆறிய பின்னர் சப்பாத்தி மாவு போன்று நன்கு பிசைந்து கொள்ளவும்.

14. அதனை சப்பாத்தி கல்லில் எண்ணெய் தடவி அல்லது பட்டர் பேப்பர் போட்டு அதன் மேல் வைக்கவும்.

15. சப்பாத்தி கட்டை கொண்டு   1/4 inch   அளவிற்கு தேய்த்துக் கொள்ளவும்.

16. ஒரு குக்கீ கட்டர் அல்லது பாட்டில் மூடிக்கொண்டு சிறுசிறு வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

17. பின்னர் ஒரு சிறிய பாட்டில் மூடி அல்லது சிறிய குகி கட்டர் கொண்டு நடுவில் வெட்டி எடுக்கவும்.

18. இப்பொழுது உருளைக்கிழங்கு ரிங்ஸ் பொரிக்க தயாராக உள்ளது.

19. ஒரு கடாயில் எண்ணெய் சூடு படுத்திக் கொள்ளவும்,  மிதமான சூட்டை விட சற்று கூடுதலாக வைத்துக் கொள்ளவும். தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு ஒவ்வொன்றாக சேர்க்கவும்.

20. ஓரளவு சிவந்த பின்னர் திருப்பி போடவும்.

21. நுரை ஓரளவு அடங்கிய பின்னர் அல்லது பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து தனியே எடுக்கவும்.

22. சுவையான உருளைக்கிழங்கு ரிங்ஸ் தயார்.

 

Leave a Reply