Halkova in Tamil | ஹல்கோவா | ஏலக்காய் பர்ஃபி | மைதா பர்பி | Maida Burfi in Tamil

See this Recipe in English

ஹல்கோவா  90 களின் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டி வகை.  இது  பெட்டி கடை முதல் பெரிய கடைகள் வரை எல்லா கடைகளிலும் கிடைக்கும். 50 பைசா மற்றும் 1 ரூபாய் விலைகளில் கிடைக்கும். இது மைதா பர்பி, ஏலக்காய் பர்பி, 1 ரூபாய் பால்கோவா போன்ற பல பெயர்களில் அழைக்கப்படும்.  மூன்றே மூன்று பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் 90 களின் பிரபலமான இந்த சிற்றுண்டி செய்யலாம்.

சுவையான ஏலக்காய் பர்ஃபி செய்ய சில குறிப்புகள்

  • பர்பி செய்வதற்கு தரமான நெய் பயன்படுத்திக்கொள்ளவும் அப்போதுதான் சுவையும் மனமும்  நன்றாக இருக்கும்.
  • மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு சேர்த்தும் இதே முறையில் பர்ஃபி செய்யலாம்.
  • மாவு பிசையும்போது சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்,  நீர்த்துப்போய் இருந்தால் சிறிதளவு பால் பவுடர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • சர்க்கரை உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.

இதர இனிப்பு வகைகள் – பிரட் குலாப் ஜாமுன், கோதுமை ரவை கேசரி, காசி அல்வா, மால்புவா, கோதுமை அல்வா, குலாப் ஜாமுன், ரவா லட்டு, இனிப்பு காஜா, கடலை பர்ஃபி, ரவா  இனிப்பு அப்பம், கோவில் சக்கரை பொங்கல், ரசமலாய், நெய்யப்பம்.

 

 

See this Recipe in English

ஏலக்காய் பர்ஃபி செய்ய தேவையான பொருட்கள்

  • நெய் –  ½  கப் ( 120g)
  • மைதா மாவு – 1 கப் (140g)
  • சர்க்கரை – ¾  கப் (150g)
  • ஏலக்காய் – 3
  • உப்பு – 1  சிட்டிகை

செய்முறை

1. ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் ¾  கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

2. அதனுடன் 3 ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும்.

3. அதனை நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

4. ஒரு  பாத்திரத்தில் ½  கப் நெய் சேர்த்துக் கொள்ளவும்.

5. நெய் சூடானதும் 1 கப் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்.

6. குறைவான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்.

7. 8 முதல் 10 நிமிடங்களுக்கு வறுத்தால் மைதாவின் இதமான மனம் வருவதை காணலாம்.

8. ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஒரு நிமிடத்திற்கு கிளரவும்.

9. பின்னர் அதனை ஒரு பௌலில் மாற்றி ஆறவைக்கவும்.

10. ஆறிய பின்னர் பொடித்து வைத்துள்ள சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்.

11. சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

12. ஒரு பாத்திரத்தில் நெய் தடவி கொள்ளவும், விருப்பப்பட்டால் அதன்மீது பட்டர் பேப்பர் வைக்கலாம்.

13. பின்னர் தயாராக வைத்துள்ள பர்ஃபி மாவை அதில் வைத்து சமமாக தேய்க்கவும்.

14. அதனை 30 நிமிடங்களுக்கு பிரிட்ஜில் வைக்கவும்.

15. பின்னர் ஒரு தட்டில் மாற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.

 16. சுவையான ஏலக்காய் பர்பி தயார். 

Leave a Reply