Madatha Kaja in Tamil | இனிப்பு காஜா | மடக்கு காஜா | Sweet kaja recipe

இனிப்பு காஜா மைதா மாவு, நெய், சர்க்கரை, ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை. இது விரைவில் செய்யக்கூடிய சுலபமான மற்றும் சுவையான மொறுமொறுப்பான இனிப்புவகை. இதனை 20 முதல் 30 நிமிடங்களில் செய்யலாம். தீபாவளி போன்ற விசேஷங்களுக்கு நாம் வித விதமான பலகாரங்கள்  செய்வோம், லட்டு, குலோப் ஜாமுன், போன்று இந்த இனிப்பு மடக்கு காஜாவையும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான இனிப்பு காஜா செய்ய சில குறிப்புகள்

  • மைதா மாவுடன் நெய் சேர்க்கும் பொழுது  நெய்யை உருக்கிய பின்சேர்த்துக் கொள்ளவும்.
  • நெய் சேர்ப்பதற்கு பதிலாக அதே அளவு டால்டா அல்லது வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
  • டால்டா அல்லது வெண்ணெய் சேர்த்தாலும், நெய் சேர்த்த அதே அளவில் உருக்கி அல்லது சூடாக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  • மாவு பிசையும் பொழுது வெடிப்புகள் இல்லாமல் 8 முதல் 10 நிமிடங்களுக்கு நன்றாக பிசையவும்.
  • எண்ணெயில் பொரிக்கும் பொழுது மிதமான தீயை விட சற்று குறைவாக வைத்து பொரிக்கவும்.
  • சர்க்கரை பாகில் 30 முதல் 40 வினாடிகள் ஊறவைத்தால் போதும்.

இதர தீபாவளி பலகாரங்கள் – பொட்டுக்கடலை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, மெது பக்கோடா, ரிப்பன் பக்கோடா,  தட்டை முறுக்கு, முறுக்கு.

இதர தீபாவளி இனிப்பு வகைகள் – ரவா லட்டு , மோட்டிச்சூர் லட்டுபாசிப்பருப்பு உருண்டை, பூந்திலட்டு, ரோஸ் பர்பி , குலாப் ஜாமுன், கோதுமை குலாப் ஜாமுன், கோதுமை அல்வா,  பாதாம் அல்வா, அசோகா அல்வா, திருநெல்வேலி அல்வா,   பால்கோவா, இனிப்பு காஜா, சாக்லேட் பர்ஃபி.

 

 

இனிப்பு காஜா செய்ய தேவையான பொருட்கள்

  • மைதா மாவு – 1  கப்
  • உருக்கிய நெய் – 1/4  கப் 
  • சமையல் சோடா – 1/8  தேக்கரண்டி
  • சர்க்கரை – 2 கப் 

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் 1 கப் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்.

2. அதனுடன் 1/4 கப் நெய்யை உருக்கி வெதுவெதுப்பாக சேர்த்துக் கொள்ளவும்.

3.  அதனுடன் 1/8  தேக்கரண்டி சமையல் சோடா சேர்த்துக் கொள்ளவும்.

4. எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

5. அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து வெடிப்பு இல்லாமல் 8 முதல் 10 நிமிடங்களுக்கு நன்கு பிசையவும். பின்னர் மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு வைக்கவும்.

6. சர்க்கரை பாகு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

7. அதனுடன் 3/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

8. சர்க்கரைப் பாகு  ஓரளவு திக்கானதும் அடுப்பை அணைத்து தனியே வைக்கவும்.

 9. அடுப்பு மேடையில் சிறிதளவு  மைதா மாவு தூவி கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் நைசாக தேய்த்துக் கொள்ளவும்.

10. அதனை சதுரமாக அல்லது செவ்வகமாக வெட்டவும்.

11. அதன் மீது  சிறிதளவு  நெய் தடவவும். 

12. அதன் மீது சிறிதளவு மைதா மாவு தூவவும்.

13. அதனை மெதுவாக சுற்றிக் கொள்ளவும்.

14. கடைசியாக சிறிதளவு தண்ணீர் தடவி, ஒட்டி வைக்கவும்.

15. அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

16. நறுக்கிய பின்னர் கட்டை விரலால் லேசாக அழுத்தி, மெதுவாக தேய்த்து விடவும்.

17. இப்பொழுது ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

 18. மிதமான தீயை விட குறைவாக வைத்துக் கொள்ளவும். அவ்வப்போது கிளறி விடவும்.

19. பொன்னிறமானதும் எண்ணெயில் இருந்து தனியே எடுக்கவும்.

20. அதனை சர்க்கரை பாகில் போடவும்.

21. மெதுவாக  கிளறி விடவும்.

22. 30 வினாடிகளுக்கு பிறகு எடுத்து விடவும்.

23. சுவையான இனிப்பு காஜா தயார்.

 

Leave a Reply