See this Recipe in English
செட்டிநாடு ஸ்பெஷல் கார சீயம் அரிசி, உளுந்து ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் ஒரு அருமையான மாலை நேர சிற்றுண்டி. அரிசி, உளுந்தை ஊறவைத்து, அரைத்து உடனே செய்யலாம், பொதுவாக கார சீயம் விரத நாட்களில் செய்து சாப்பிடப்படுகிறது. கார சீயத்துடன் அதற்கேற்றார் போல் ஓர் அருமையான சட்னியும் இதனுடன் பதிவிட்டுள்ளேன், நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான கார சீயம் மற்றும் சட்னி செய்ய சில குறிப்புகள்
- அரிசி மற்றும் உளுந்தை அதன் தன்மைக்கேற்ப 2 – 4 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளலாம்.
- மிக்ஸியை விட கிரைண்டரில் மாவு அரைத்தால் மாவு கூடுதலாகவும் அதே சமயத்தில் சீயம் பஞ்சு போன்றும் இருக்கும்.
- மாவு அரைக்கும்போது அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
- வடை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும், தண்ணீர் அதிகம் சேர்த்தால் சீயம் பொரிக்கும் பொழுது எண்ணெய் குடிக்கும்.
- மாவு திக்காக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
- சீயத்திற்கு கடுகு, வெங்காயம் தாளிக்கும் பொழுது அதனுடன் சிறிதளவு துருவிய தேங்காய் சேர்த்துக்கொள்ளலாம்.
- சட்னியில் கலந்த மிளகாய் தூள் சேர்த்துள்ளேன், தனி மிளகாய் தூள் சேர்ப்பதாக இருந்தால் அதனுடன் 1 தேக்கரண்டி மல்லித்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
இதர வகைகள் – பாசிப்பருப்பு ஃப்ரை, பிரட் சில்லி, போண்டா சூப், பிரெட் பீட்சா, சாக்லேட் காபி, உடனடி மெதுவடை, உருளைக்கிழங்கு ரிங்ஸ், உடனடி தோசை, சேமியா போண்டா, மொரு மொரு வடை, பட்டாணி மசாலா சுண்டல், மசாலா கடலை, சாம்பார் வடை, காலிஃப்ளவர் ஸ்னாக்ஸ், இட்லி மாவு போண்டா, ஓவென் இல்லாமல் பீஸ்ஸா, மிளகாய் பஜ்ஜி,வெஜிடபிள் பர்கர் , வெஜிடபிள் கட்லெட்.
See this Recipe in English
கார சீயம் செய்ய தேவையான பொருட்கள்
- வெள்ளை உளுந்து – 1 கப் (200g)
- பச்சரிசி – 1 கப் (200g)
- சமையல் எண்ணெய் – 1 தேக்கரண்டி
- கடுகு – ¼ தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
- கருவேப்பிலை – சிறிதளவு
- பச்சை மிளகாய் – 2
- பெரிய வெங்காயம் – ½
- உப்பு – தேவையான அளவு
- சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
சட்னி செய்ய தேவையான பொருட்கள்
- தக்காளி – 3
- சமையல் எண்ணெய் – 3 தேக்கரண்டி
- கடுகு – ¼ தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
- கருவேப்பிலை – சிறிது
- பூண்டு பற்கள் – 6
- பெரிய வெங்காயம் – 1/2
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 1 கப் வெள்ளை உளுந்து சேர்த்து கொள்ளவும்.
2. அதனுடன் 1 கப் பச்சரிசி சேர்த்துக் கொள்ளவும்.
3. இரண்டையும் சேர்த்து ஒரு முறை அலசிய பின்னர், தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
4. பின்னர் ஒரு மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கலாம்.
5. ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
6. எண்ணெய் சூடானதும் ¼ தேக்கரண்டி கடுகு மற்றும் ½ தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
7. கடுகு உளுத்தம்பருப்பு பொரிந்த பின்னர் சிறிதளவு கறிவேப்பிலை, 2 பச்சை மிளகாய் மற்றும் ½ பெரிய வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
8. வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும்.
9. பின்னர் தாளித்த கலவையை அரைத்துவைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
10. தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
11. ஒரு வாணலியில் சீயம் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் தயாராக வைத்துள்ள மாவை போண்டா போடுவது போன்று சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு கொள்ளவும்.
12. மிதமான தீயில் வைத்து அவ்வப்போது திருப்பி போடவும்.
13. எல்லா பக்கமும் பொன்னிறமானதும் எண்ணையை வடித்து தனியே எடுக்கவும்.
சட்னி செய்முறை
1. ஒரு மிக்ஸி ஜாரில் 3 தக்காளிகளை காம்பை வெட்டி விட்டு சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனை நைஸாக அரைத்துக் கொள்ளவும் .
3. ஒரு வாணலியில் 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
4. எண்ணெய் சூடானதும் ¼ தேக்கரண்டி கடுகு, ½ உளுத்தம் பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
5. கடுகு, உளுத்தம்பருப்பு பொரிந்த பின்னர், 6 பூண்டு பற்களை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
6. பின்னர் ½ பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
7. பூண்டு மற்றும் வெங்காயம் மென்மையாக வதங்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்துக் கொள்ளவும்.
8. ஒரு கொதி வந்த பின்னர் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
9. அதனுடன் ¼ தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
10. 2 தேக்கரண்டி மிளகாய்தூள் சேர்த்து கலக்கவும்.
11. இதனை மூடி வைத்து மிதமான தீயில் அல்லது குறைவான தீயில் 10 முதல் 12 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
12. ஓரங்களில் எண்ணை பிரிந்து வருவதை பார்க்கலாம், சுவையான சட்னி தயார்.
13. சூடான கார சீயத்துடன்த்துடன் வைத்து பரிமாறலாம்.