See this Recipe in English
முட்டை மசாலா சப்பாத்தி தோசை மற்றும் சாதம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். முழு முட்டைகளை பயன்படுத்தி செய்யக்கூடிய சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவு வகை. முட்டை பயன்படுத்தி நாம் விதவிதமான உணவு வகைகளை செய்யலாம், ஆம்லெட், முட்டை தொக்கு, மிளகு முட்டை வறுவல், முட்டை குழம்பு, உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு, போன்றவை தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம்.
சுவையான முட்டை மசாலா செய்ய சில குறிப்புகள்
- முட்டை மசாலாவிற்கு முட்டை வேக வைக்கும் பொழுது, ஒரு அகலமான பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரில் முட்டைகளை சேர்க்கவும்.
- ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைத்த பின்னர், அடுப்பை அனைத்து விட்டு 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
- பின்னர் முட்டைகளை எடுத்து ஐஸ்கட்டிகள் உள்ள பாத்திரத்தில் போட்டு 10 முதல் 15 நிமிடங்களுக்கு வைக்கவும், இப்பொழுது முட்டை சுலபமாக உரிக்கலாம்.
- முட்டை மசாலா செய்ய நான் வீட்டில் அரைத்த மசாலா பயன்படுத்தி உள்ளேன், நீங்கள் மசாலா அரைக்கலாம் அல்லது கடையில் கிடைக்கும் முட்டை மசாலா பயன்படுத்தலாம்.
- தயிர் சேர்க்கும் பொழுது அதிகம் புளிப்பில்லாத தயிர் சேர்த்துக் கொள்ளவும்.
- வெங்காயம் தக்காளி மசாலா செய்யும் போது எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்,
- விருப்பப்பட்டால் காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது அது சேர்க்காமலும் செய்யலாம்.
- 4 முதல் 5 தேக்கரண்டி வரை எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் குறைவாக எண்ணெய் சேர்த்தால் முட்டை மசாலாவில் சுவையிருக்காது.
சைவ குருமா வகைகள் – சால்னா, சோயா குருமா, வடைகறி, ரோட்டுக்கடை காளான் மசாலா, கத்திரிக்காய் கிரேவி, பன்னீர் கிரேவி, கும்பகோணம் கடப்பா, தக்காளி குருமா, ஆந்திரா கத்திரிக்காய் மசாலா, பூரி மசாலா, வெஜிடபிள் குருமா, சென்னா மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, காளிஃபிளவர் பட்டாணி குருமா.
அசைவ குருமா வகைகள் – இறால் தொக்கு, செட்டிநாடு சிக்கன் குழம்பு, முட்டை மசாலா, ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி, முட்டை குழம்பு.
See this Recipe in English
தேவையான பொருட்கள்
முட்டை வறுக்க தேவையான பொருட்கள்
- 6 முட்டை
- 1/2 தேக்கரண்டி உப்பு
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1 தேக்கரண்டி எண்ணெய்
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
- 4 ஏலக்காய்
- 3 லவங்கம்
- 1 சிறிய துண்டு பட்டை
- 2 தேக்கரண்டி மிளகு
- 1 தேக்கரண்டி சோம்பு
- 3 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள்
- 10 காய்ந்த மிளகாய்
- 1 தேக்கரண்டி கசகசா
முட்டை மசாலாவிற்கு தேவையான பொருட்கள்
- 4 தேக்கரண்டி எண்ணெய்
- 1 தேக்கரண்டி சீரகம்
- 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- கருவேப்பிலை சிறிதளவு
- 3 பச்சை மிளகாய்
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
- 1 தக்காளி பொடியாக நறுக்கியது
- 1 கப் கெட்டியான தயிர்
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
1. ஆறு முட்டைகளை வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.
2. அதனுடன் அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், மற்றும் அரை தேக்கரண்டி மிளகாய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
3. ஒரு அகலமான பாத்திரத்தில், ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் மசாலா கலந்து வைத்துள்ள முட்டைகளை சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுத்து கொள்ளவும்.
4. பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.
5. ஒரு அகலமான கடாயில் 4 ஏலக்காய், மூன்று லவங்கம், ஒரு துண்டு பட்டை, 2 தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சோம்பு, 3 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள் 10 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
6. பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி அதனுடன் ஒரு தேக்கரண்டி கசகசா சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
7. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 4 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
8. ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
9. வெங்காயம் ஓரளவு வதங்கிய பின்னர், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு கறிவேப்பிலை, 3 பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
10. அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் ஒரு தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
11. இப்பொழுது ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும், தக்காளி மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும்.
12. இப்பொழுது அரைத்து வைத்துள்ள முட்டை மசாலா பவுடர் 3 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.
13. நன்கு கலந்த பின்னர் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி கொள்ளவும். இப்பொழுது கால் கப் அல்லது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
14. ஒரு கப் தயிர் சேர்த்துக் கொள்ளவும், மூடி வைத்து குறைவான தீயில் ஐந்து நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
15. இப்பொழுது தயாராக உள்ள முட்டைகளை சேர்த்துக் கொள்ளவும். நன்கு கலந்த பின்னர் மூடி வைத்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வேக வைக்கவும்
16. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இரக்கவும் சுவையான முட்டை மசாலா தயார்.