Sambar Vadai in Tamil | சாம்பார் வடை | Sambar Vadai recipe in Tamil

See this Recipe in English

சாம்பார் வடை மிகவும் சுவையான காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டி வகை,  சாம்பார் வடை மெது வடையை சாம்பாரில் ஊற வைத்து பரிமாறப்படுகிறது.  இவை ஹோட்டல்களில் மிகவும் பிரபலம்,  அதே சுவை மாறாமல் வீட்டிலும் சாம்பார் வடை செய்யலாம்,  பொதுவாக மெதுவடை செய்யும் அதே முறையில் வடை  செய்து,  அதனை சாம்பாரில் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைத்தால் சுவையான சாம்பார் வடை தயார்.

சுவையான சாம்பார் வடை செய்ய சில குறிப்புகள்

  • வடை செய்யும் போது  தரமான உளுந்து பயன்படுத்தவும் அப்பொழுது வடை சுவையாக இருக்கும்.
  • சாம்பார் வைக்கும் பொழுது கெட்டியாக இல்லாமல் ஓரளவு  நீர்த்து வைக்கவும். வடை  ஊறும் பொழுது சரியாக இருக்கும் .
  • சாம்பார் வைக்கும் பொழுது காய்கறிகள் சேர்க்காமல் செய்யலாம் அல்லது சிறிதளவு மஞ்சள் பூசணிக்காய் சேர்த்து செய்யும்பொழுது அசல் சுவை கிடைக்கும்.
  • சாம்பார் செய்ய நான் பெரிய வெங்காயம் பயன்படுத்தியுள்ளேன்,  நீங்கள் விருப்பப்பட்டால் ஒரு கப் அளவு சின்னவெங்காயம் பயன்படுத்தலாம்.

இதர சிற்றுண்டி வகைகள் – காராபூந்தி,  சில்லி மசாலா இட்லி, மெது பக்கோடா, செட்டிநாடு ஸ்பெஷல் கார சீயம், மசாலா பிரட் டோஸ்ட், ராகி புட்டு, சோயா கட்லட், மசாலா பாஸ்தா,  பிரட் சில்லி, பாசிப்பருப்பு ஃப்ரை, போண்டா சூப், பிரெட் பீட்சா, உடனடி மெதுவடை,  உருளைக்கிழங்கு ரிங்ஸ், சேமியா போண்டா, சாம்பார் வடை,காலிஃப்ளவர்  ஸ்னாக்ஸ்.

 

 

See this Recipe in English

சாம்பார் வடை செய்ய தேவையான பொருட்கள்

சாம்பார் 

  • 1/4 கப் துவரம்பருப்பு
  • 1 தக்காளி
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  • கருவேப்பிலை சிறிதளவு
  • 1 பெரிய வெங்காயம் 
  • 3 பச்சை மிளகாய்
  • தேவையான அளவு உப்பு
  • 2 தேக்கரண்டி சாம்பார் தூள் 
  • நெல்லிக்காய் அளவு புளி ( தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்) 
  • சிறிதளவு பொடித்த வெல்லம் 
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு 
  • 2 தேக்கரண்டி நெய் 

வடை 

  • 2 கப்  வெள்ளை உளுந்து
  • 2 தேக்கரண்டி அரிசி 
  • 1 பெரிய வெங்காயம்
  • சிறிய துண்டு இஞ்சி
  • 3 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது 
  • சிறிதளவு கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது
  • சிறிதளவு கொத்தமல்லி பொடியாக நறுக்கியது 
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொரிக்க தேவையான அளவு 

சாம்பார் செய்முறை

1. சாம்பார் செய்வதற்கு ஒரு பிரஷர் குக்கரில் கால் கப் துவரம்பருப்பு, ஒரு முறை தண்ணீரில் கழுவி சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு தக்காளி சேர்த்துக் கொள்ளவும்,  கால் தேக்கரண்டி  மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

 2. இப்பொழுது பிரஷர் குக்கரை மூடி 5 விசில் வைக்கவும்.

3. குக்கரை திறந்து பருப்பு மற்றும் தக்காளியை ஒரு முறை லேசாக மசித்து விடவும்.

4. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்,  அதனுடன் அரை தேக்கரண்டி கடுகு சேர்த்து கொள்ளவும்.

5. கடுகு வெடித்த பின்னர் கால் தேக்கரண்டி சீரகம், கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள், சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

6. இப்போது பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

7. வெங்காயம் வதங்கிய பின்னர் 3 பச்சை மிளகாயை நடுவில் கீறி சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு மற்றும் 2 தேக்கரண்டி சாம்பார் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

8. சாம்பார் தூள் பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பிறகு ஒரு நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் கரைத்து சேர்த்துக் கொள்ளவும். 

9. இப்பொழுது ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

10. நன்கு கொதித்த பின்னர் வேக வைத்து வைத்துள்ள பருப்பு மற்றும் தக்காளியை சேர்த்துக் கொள்ளவும். 

11. அதனுடன் சிறிதளவு பொடித்த வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து மீண்டும் 2 முதல் 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

12. கடைசியாக 2 தேக்கரண்டி நெய் சேர்த்து இரக்கவும் இப்பொழுது சாம்பார் தயார்.

வடை செய்முறை

1. வடை செய்வதற்கு இரண்டு கப் உளுந்து மற்றும் 2 தேக்கரண்டி அரிசி ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

2. பின்னர் தண்ணீரை வடித்து ஒரு மிக்ஸி அல்லது கிரைண்டரில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

3. பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, இஞ்சி சிறிதளவு, 3 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது, ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

4. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு,  கருவேப்பிலை சிறிதளவு,  மற்றும் வடைக்கு தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

5. ஒரு கடாயில் எண்ணெய் சூடானதும், வடை மாவை எடுத்து உருட்டி நடுவில் ஒரு ஓட்டை விட்டு எண்ணெயில் போடவும்.

6. ஒரு பக்கம் சிவந்த பிறகு மறுபக்கம் திருப்பி போடவும். பொன்னிறமாக வெந்ததும்  எண்ணெய் வடித்து தனியே வைக்கவும். இப்பொழுது வடை தயார்.

சாம்பார் வடை செய்முறை

1. ஒரு பவுலில் இரண்டு அல்லது மூன்று வடை வைத்துக்கொள்ளவும் அதன் மீது சாம்பார் ஊற்றி ஊற்றி 30 முதல் 40 நிமிடங்களுக்கு பிறகு பரிமாறவும்.

2. நீங்கள் விருப்பப்பட்டால் அதன் மீது சிறிதளவு பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.

Leave a Reply