See this Recipe in English
சிக்கன் சால்னா பரோட்டா, முட்டை தோசை, இட்லி, சப்பாத்தி ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதுதவிர முட்டை பரோட்டா, கொத்து பரோட்டா, ஆகியவற்றிற்கு சிக்கன் சால்னா மிகவும் பொருத்தமாக இருக்கும். சாதாரணமாக வெங்காயம், தக்காளி சேர்த்து செய்யப்படும் சால்னா, சிக்கன் குருமா போன்ற சுவையுடன் இருக்கும் அதற்கு பதிலாக தனிப்பட்ட முறையில் மசாலா அரைத்து சேர்க்க வேண்டும். அப்பொழுது கடைகளில் கிடைக்கும் அதே சுவை மணத்துடன் சிக்கன் சால்னாவை சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். சுவையான சிக்கன் சால்னா நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான சிக்கன் சால்னா செய்ய சில குறிப்புகள்
- சால்னா செய்வதற்கு எலும்பு இருக்கும் சிக்கனை பயன்படுத்தவும். எலும்புகள் அதிகமாகவும் சதை குறைவாகவும் இருக்கும் பாகங்களை பயன்படுத்தினால் மிகவும் சுவையாக இருக்கும்.
- மசாலாவிற்கு பொருட்களை வறுக்கும் பொழுது மிதமான தீயில் வைத்து மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- மிளகாய் வற்றல், மிளகாய் தூள், பச்சை மிளகாய், ஆகியவற்றை உங்கள் காரத்திற்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
- வெங்காயம் தக்காளி போன்ற பொருட்களை வதக்கும் பொழுது நன்றாக வதங்கி மசிந்து வந்த பிறகு சிக்கனை சேர்க்கவும்.
- புதினா சற்று கூடுதலாக சேர்த்துக் கொண்டால் சால்னா மிகவும் சுவையாக இருக்கும்.
- கறி மசாலா சேர்ப்பது உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டது. அதற்கு பதிலாக சிறிதளவு கரம் மசாலா சேர்க்கலாம் அல்லது இவை இரண்டும் சேர்க்காமலும் செய்யலாம்.
- வறுத்து வைத்த மசாலா அரைக்கும் போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- தண்ணீர் சேர்த்த பின் 20 – 25 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்தால், சால்னா தயார்.
இதர அசைவ குருமா வகைகள் – இறால் தொக்கு, செட்டிநாடு சிக்கன் குழம்பு, முட்டை மசாலா, ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி, முட்டை குழம்பு.
சைவ குருமா வகைகள் – வெஜிடபிள் சால்னா, சோயா குருமா, வடைகறி, ரோட்டுக்கடை காளான் மசாலா, கத்திரிக்காய் கிரேவி, பன்னீர் கிரேவி, கும்பகோணம் கடப்பா, தக்காளி குருமா, ஆந்திரா கத்திரிக்காய் மசாலா, பூரி மசாலா, வெஜிடபிள் குருமா, சென்னா மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, காளிஃபிளவர் பட்டாணி குருமா.
See this Recipe in English
தேவையான பொருட்கள்
மசாலா
- கடலை எண்ணெய்/நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
- பட்டை – 1 துண்டு
- கிராம்பு – 4
- ஏலக்காய் – 4
- மிளகு – ½ தேக்கரண்டி
- சீரகம் – ½ தேக்கரண்டி
- சோம்பு – ½ தேக்கரண்டி
- கொத்தமல்லி – 1 தேக்கரண்டி
- கசகசா – ½ தேக்கரண்டி
- முந்திரி பருப்பு – 4
- மிளகாய் வற்றல் – 4
- தேங்காய் – ¼ கப்
இதர பொருட்கள்
- எலும்புடன் கூடிய சிக்கன் – 400g
- கடலை எண்ணெய்/நல்லெண்ணெய் – 5 தேக்கரண்டி
- பிரிஞ்சி இலை – 1
- சோம்பு – ½ தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 2
- இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 2
- கருவேப்பிலை – சிறிது
- புதினா – 1 கையளவு
- கொத்தமல்லி தழை – 1 கையளவு
- தக்காளி – 1
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- கறி மசாலா தூள் – ½ தேக்கரண்டி
செய்முறை
1. மசாலா அரைப்பதற்கு ஒரு பாத்திரத்தில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
2. எண்ணெய் சூடானதும், பட்டை 1 துண்டு, கிராம்பு 4, ஏலக்காய் 4, மிளகு ½ தேக்கரண்டி, சீரகம் ½ தேக்கரண்டி, சோம்பு ½ தேக்கரண்டி, கொத்தமல்லி 1 தேக்கரண்டி, கசகசா ½ தேக்கரண்டி ஆகியவற்றை சேர்த்து லேசாக மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
3. அதனுடன் 4 முந்திரிப் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
4. பின்னர் 4 மிளகாய் வற்றல், ¼ கப் துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
5. பின்னர் அதனை ஆற விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
6. சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
7. சால்னா செய்வதற்கு ஒரு பேனில் 5 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் 1 பிரிஞ்சி இலை, ½ தேக்கரண்டி சோம்பு சேர்த்துக் கொள்ளவும்.
8. சோம்பு பொரிந்ததும், 2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
9. வெங்காயம் ஓரளவு வதங்கிய பின்னர், 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 2 பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும்.
10. அதனுடன் தேவையான அளவு புதினா மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
11. பின்னர் ஒரு பழுத்த தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும், தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
12. பின்னர் தேவையான அளவு உப்பு, ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 மிளகாய்த்தூள், ½ தேக்கரண்டி கறிமசாலா தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
13. ஓரளவு வதக்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுது சேர்த்துக் கொள்ளவும். இதனை மிதமான தீயில் வைத்து 4 – 5 நிமிடங்கள் கொதிக்க விடவும் .
14. ஓரங்களில் சிறிதளவு எண்ணை பிரிந்து வந்த பின்னர், சிக்கனை சேர்த்து கலக்கவும்.
15. அதனுடன் ½ லிட்டர் முதல் ¾ லிட்டர் வரை தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
16. மூடி வைத்து மிதமான தீயில் 20 – 25 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
17. சுவையான சிக்கன் சால்னா தயார்.