See this Recipe in English
முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக் மைதா மாவு, சர்க்கரை, சமையல் எண்ணெய், தயிர் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இதனை ஓவன் பயன்படுத்தியும் செய்யலாம் அல்லது ஓவன் அல்லாமல் வீட்டிலிருக்கும் பாத்திரத்திலும் செய்யலாம். பிறந்தநாள், திருமணநாள் போன்றவற்றிற்கு அலங்காரம் செய்யக்கூடிய கேக்காகவும் பயன்படுத்தலாம், அல்லது ஸ்னாக்ஸ் போல அப்படியேவும் சாப்பிடலாம். சுவையான முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான வெண்ணிலா கேக் செய்ய சில குறிப்புகள்
- மைதா விற்கு பதிலாக கோதுமை மாவு சேர்த்தும் இதே முறையில் கேக் செய்யலாம்.
- சர்க்கரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
- சமையல் எண்ணை சேர்க்கும் போது வாசனை வராத எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் சேர்ப்பதற்கு பதிலாக அதே அளவிற்கு வெண்ணெய் சேர்த்தும் செய்யலாம்.
- பாத்திரத்தில் செய்வதாக இருந்தால் ஒரு அகலமான பாத்திரத்தை மூடி வைத்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் சூடாக்கவும், பின்னர் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன்மீதுகேக் பாத்திரத்தை வைத்து மூடி வைத்து குறைவான தீயில் 45 முதல் 55 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- கேக் பானில் பட்டர் பேப்பர் போடுவதற்கு பதிலாக சிறிதளவு மைதா மாவு தூவி கொள்ளலாம்.
இதர கேக் வகைகள் – முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக், ஹனி கேக், ரவா கேக், முட்டை சேர்க்காத சாக்லேட் கேக், ஓரியோ கேக், ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி? ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக், பாவ் பன், பால் பன், முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக்
See this Recipe in English
தேவையான பொருட்கள்
- சர்க்கரை – ½ கப் – 100g
- தயிர் – ⅓ கப் – 80g
- சமையல் எண்ணெய் – ½ கப் – 110g
- வெண்ணிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
- மைதா மாவு – 1 கப் – 140g
- பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
- பேக்கிங் சோடா – ¼ தேக்கரண்டி
- உப்பு – ¼ தேக்கரண்டி
செய்முறை
1. ஓவனை 360 டிகிரி பாரன்ஹீட் / 180 டிகிரி செல்சியசுக்கு பிரிஹீட் செய்து கொள்ளவும். 6 இன்ச் அகலம் உள்ள கேக் பானில் எண்ணெய் /வெண்ணெய் தடவி அதன் மீது பட்டர் பேப்பர் போட்டு வைக்கவும்.
2. ஒரு பவுலில் ½ கப் சர்க்கரை, ⅓ கப் தயிர் ஆகியவற்றை சேர்த்து சர்க்கரை கரையும் வரை ஒரு விஸ்க் வைத்து கலந்து கொள்ளவும்.
3. அதனுடன் ½ கப் சமையல் எண்ணை, 1 தேக்கரண்டி வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து கலக்கவும்.
4. நன்றாக கலந்த பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.
5. மற்றொரு பவுலில் சல்லடை வைத்துக் கொள்ளவும்.
6. 1 கப் மைதா, 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர், ¼ தேக்கரண்டி பேக்கிங் சோடா, ¼ தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை சேர்த்து சலித்துக் கொள்ளவும்.
7. இப்பொழுது சர்க்கரை, எண்ணெய் கலவையுடன் சலித்து வைத்துள்ள மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து ஒரு விஸ்க் வைத்து கலந்து கொள்ளவும்.
8. கலந்த பின்னர் மாவை ஊற்றும் பொழுது ரிப்பன் போன்று இருக்க வேண்டும்.
9. இப்பொழுது கலந்து வைத்துள்ள மாவை கேக் பானில் ஊற்றிக் கொள்ளவும்.
10. கேக் பானை ஓவனில் வைத்து 40 முதல் 50 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
11. கேக் தயார் ஆனதும் ஒரு கூலிங் ரேக்கில் வைத்து ஆறவைக்கவும். சுவையான வெண்ணிலா கேக் தயார்.