See this Recipe in English
கும்பகோணம் கடப்பா தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், போன்ற ஊர்களில் மிகவும் பிரபலம். இது பாசிபருப்பு, உருளைக்கிழங்கு, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இட்லி, தோசை, பொங்கல், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இது தவிர சப்பாத்தி மற்றும் பூரியுடன் கடப்பா சுவையாக இருக்கும். இதனை மிகவும் எளிமையான முறையில் வீட்டில் செய்யலாம். சுவை அபாரமாகவும், சிறப்பாகவும் இருக்கும். திருமண வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் கடப்பா அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகை. பாசி பருப்பு மற்ற பருப்பு வகைகளை விட ஊட்டச்சத்து நிறைந்த பருப்பு, அதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து வேகவைத்து செய்வதால் குழந்தைகளுக்கு ஏற்றது.
சுவையான கடப்பா செய்ய சில குறிப்புகள்
- கடப்பா பாசிப்பருப்பு கொண்டு செய்ய வேண்டும். இது பாசிப்பருப்பு தவிர மற்ற பருப்புகள் செய்யமுடியாது.
- விருப்பப்பட்டால் உருளைக்கிழங்கு சேர்த்து கொள்ளலாம் அல்லது காய்கறிகள் எதுவும் சேர்க்காமலும் செய்யலாம்.
- தேங்காய் விழுது அரைக்கும் பொழுது மற்ற பொருட்களுடன், அரை தேக்கரண்டி கசகசாவை ஊறவைத்து சேர்த்து அரைக்கலாம்.
- விருப்பப்பட்டால் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, ஆகியவற்றை தாளித்து சேர்த்துக் கொள்ளலாம்.
இதர வகைகள் – வேர்க்கடலை சட்னி, பூண்டு இட்லி பொடி, இட்லி மிளகாய் பொடி, வெங்காய சட்னி, கமகமக்கும் புதினா சட்னி, பீர்க்கங்காய் துவையல், ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி, புதினா சட்னி, பூண்டு தக்காளி தொக்கு , தக்காளி சட்னி , பருப்பு துவையல், கத்திரிக்காய் சட்னி
See this Recipe in English
கடப்பா செய்ய தேவையான பொருட்கள்
- 1/2 கப் பாசிப்பருப்பு
- 2 உருளைக்கிழங்கு
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
- சிறிய துண்டு பட்டை
- 2 லவங்கம்
- 1 பிரிஞ்சி இலை
- 5 பூண்டுப் பற்கள் லேசாக நசுக்கியது
- 1 பெரிய வெங்காயம்
- தேவையான அளவு உப்பு
- நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
அரைக்க தேவையான பொருட்கள்
- தேங்காய் கால் மூடி சிறிதாக நறுக்கியது/ துருவியது
- பொட்டுக்கடலை 2 தேக்கரண்டி
- அரை தேக்கரண்டி சோம்பு
- 3 பச்சை மிளகாய்
செய்முறை
1. ஒரு பிரஷர் குக்கரில் அரை கப் பாசிப்பருப்பை தண்ணீரில் அலசி சேர்த்துக் கொள்ளவும், அதனுடன் இரண்டு உருளைக் கிழங்குகளை தோல் சீவி நான்காக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
2. தேவையான தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும்.
3. இப்பொழுது குக்கரை மூடி 2 விசில் வைக்கவும்.
4. பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு மென்மையாக வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
5. ஒரு மிக்ஸி ஜாரில் கால் மூடி தேங்காய் ( நறுக்கியது அல்லது துருவியது), இரண்டு தேக்கரண்டி பொட்டுக்கடலை, அரை தேக்கரண்டி சோம்பு, 3 பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
6. இப்பொழுது ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும், அதனுடன் ஒரு சிறிய துண்டு பட்டை, 2 லவங்கம், ஒரு பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்க்கவும்.
7. இப்பொழுது 5 பல் பூண்டு, லேசாக நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
8. அதனுடன் ஒரு ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
9. வெங்காயம் ஓரளவுக்கு வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
10. இப்பொழுது வேகவைத்து வைத்துள்ள பாசிப்பருப்பு மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
11. இப்பொழுது மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
12. கடப்பா கொதித்து வந்த பிறகு தயாராக வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்துக் கொள்ளவும்.
13. தேங்காய் பச்சை வாசனை போக ஒரு கொதி விட்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
14. சுவையான கும்பகோணம் கடப்பா தயார்.