See this Recipe in English
பன்னீர் பர்கர் பர்கர் என்பது ஒரு பண்ணை பாதியாக வெட்டி அதன் நடுவில் காய்கறி கட்லட், சீஸ், மெலிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, லெட்யூஸ், தக்காளி சாஸ், மயோனைஸ் ஆகியவற்றை வைத்து வைத்து சாப்பிடுவது. தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் பர்கர், பீட்சா, போன்ற மேற்கத்திய உணவுகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. கடைகளில் பலவிதமான பர்கர் கிடைத்தாலும் காய்கறி பர்கர், சிக்கன் பர்கர், பன்னீர் பர்கர் போன்றவை மிகவும் பிரபலம். வெஜ் பர்கர் மற்றும் சிக்கன் பர்கர் போன்றவை வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்டாலும் இந்திய சுவையை அதில் சேர்த்து செய்யப்படுவதே பன்னீர் பர்கர். என்னதான் மேற்கத்திய உணவுகளாக இருந்தாலும் அதனை சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம், அது ஆரோக்கியத்திற்கு உகந்தது அதேசமயத்தில் குறைவான செலவில் செய்யலாம். சுவையான பன்னீர் பர்கரை சுலபமான முறையில் வீட்டிலேயே செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான பர்கர் செய்ய சில குறிப்புகள்
- பன்னீர் பர்கர் செய்வதற்கு வீட்டில் செய்வதைவிட கடைகளில் கிடைக்கும் பன்னீர் உகந்ததாக இருக்கும்.
- பன்னீர் துண்டுகளை வெட்டும்போது மிகவும் மெலிசாக அல்லாமல் ஓரளவு கெட்டியாக வெட்டிக் கொள்ளவும் அல்லது உடைந்து விடும் வாய்ப்புள்ளது.
- பர்கர் செய்வதற்கு பிரஷ்ஷான பன் பயன்படுத்தவும்.
- லெட்யூஸ் கிடைத்தால் பயன்படுத்தலாம் அல்லது அதைச் சேர்க்காமலும் செய்யலாம்.
- வெங்காயம், தக்காளி, லெட்யூஸ், தவிர்த்து வெள்ளரிக்காய்களை மெலிதாக நறுக்கி மேலே வைத்துக் கொள்ளலாம்.
இதர வகைகள் – பர்கர் வடை, தவா பர்கர், வெஜிடபிள் பர்கர், சோயா கட்லட், பாசிப்பருப்பு இட்லி, மசாலா பாஸ்தா, பாசிப்பருப்பு ஃப்ரை, பிரட் சில்லி, போண்டா சூப், பிரெட் பீட்சா, உடனடி மெதுவடை, உருளைக்கிழங்கு ரிங்ஸ், சேமியா போண்டா , மொரு மொரு வடை
See this Recipe in English
பன்னீர் பர்கர் செய்ய தேவையான பொருட்கள்
கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்
- பன்னீர் – 200g
- மைதா – ½ கப் – 70g
- இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- காஷ்மீர் மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- மிளகு தூள் – ½ தேக்கரண்டி
- கரம் மசாலா – ½ தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
- பிரெட் கிரம்ஸ் (Bread Crumbs) – தேவையான அளவு
பர்கர் சாஸ் செய்ய தேவையான பொருட்கள்
- மயோனைஸ் – 4 தேக்கரண்டி
- சில்லி சாஸ் – 2 தேக்கரண்டி
- டொமேட்டோ கெட்சப் – 2 தேக்கரண்டி
இதர பொருட்கள்
- பர்கர் பன் – 4
- வெண்ணை – 4 தேக்கரண்டி
- சீஸ் துண்டுகள் – 4
- மெலிதாக சிறிய வெங்காயம் – தேவையான அளவு
- மெலிதாக சீவிய தக்காளி – தேவையான அளவு
- லெட்யூஸ் – தேவையான அளவு
செய்முறை
1. 200 கிராம் பன்னீரை உள்ளங்கை அளவிற்கு ½ inch தடிமனுக்கு வெட்டிக்கொள்ளவும்.
2. ஒரு பவுலில் ½ கப் மைதா மாவு, 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
3. அதனுடன் 1 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய்த்தூள், ½ தேக்கரண்டி மிளகு தூள், ½ தேக்கரண்டி கரம் மசாலா, தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
4. அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
5. இப்பொழுது பன்னீர் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து தயார் செய்துள்ள மாவில் முக்கி எடுக்கவும்.
6. பின்னர் பிரெட் கிரம்ஸில் புரட்டி எடுத்துக்கொள்ளவும்.
7. இப்பொழுது எண்ணையில் இட்டு பொரிக்கவும்.
8. மிதமான தீயில் வைத்து லேசான பொன்னிறம் வரும் வரை அவ்வப்போது திருப்பி போட்டு பொரித்துக் கொள்ளவும்.
9. பன்னீர் கட்லெட் தயாரானதும், சூடாக இருக்கும் பொழுது அதன் மீது 1 துண்டு சீஸ் வைக்கவும்.
10. பர்கர் சாஸ் செய்வதற்கு, ஒரு பௌலில் 4 தேக்கரண்டி மயோனைஸ் எடுத்துக் கொள்ளவும்.
11. அதனுடன் 2 தேக்கரண்டி சில்லி சாஸ் மற்றும் 2 தேக்கரண்டி கெட்சப் சேர்த்துக்கொள்ளவும்.
12. அதனை நன்றாக கலந்து தனியே எடுத்து வைக்கவும்.
13. தோசை தவாவில் 1 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும், சூடானதும் பர்கர் பன்னை பாதியாக வெட்டி இரு துண்டுகளையும் வைக்கவும்.
14. லேசாக பொன்னிறம் வந்ததும் தனியே எடுத்து வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை மெலிதாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
15. பர்கர் செய்வதற்கு பண் துண்டுகளில் பர்கர் சாஸ் தடவி கொள்ளவும்.
16. அதன்மீது தயார் செய்து வைத்துள்ள பன்னீர் கட்லெட் மற்றும் சீஸ் வைக்கவும்.
17. லெட்யூஸ், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வைக்கவும்.
18. மற்றொரு துண்டு பண்ணை வைத்து மூடி வைக்கவும்.
19. சுவையான பன்னீர் பர்கர் தயார்.